ஹிதோபதேசம்
தமனக்காவும் கரட்டகாவும் சஞ்ஜீவிகா என்ற காளைமாட்டை அந்த காட்டின் ராஜாவான பிங்கலிகாவுக்கு அறிமுகம் செய்து வைத்தன. தமனக்கா தந்திரமா பேசி அந்த காளைமாடு ஓர் ஆக்ரோஷமான விலங்கு என்று பிங்கலிகாவை நம்ப வைத்தது. அதை நம்பி சிங்கம் அந்த மாட்டைத் தாக்காமல் அதோடு அதன் குகையில் வசிக்கச் சொன்னது. நரிகளுக்கும் இதில் உடன்பாடுதான். நரிகள் கூட்டிக்கொண்டு வந்த காளைமாடு சிங்கத்தின் நண்பனாக ஆனதால் நரிகளுக்குச் சிங்கம் நிறையப் பரிசுகளும் கொடுத்தது. சிங்கம் நினைத்தது இந்த நரிகளால்தான் அந்த மாடு சிங்கத்தைத் தாக்கவில்லை என்று. சிங்கம் மாடு இரண்டும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டன. புதிதாக யாராவது ஒரு கூட்டத்தில் வந்து சேர்ந்தால் மாற்றங்களும் கூடவே வரும். மாற்றத்தில் நல்லதும் இருக்கும். கெடுதலும் இருக்கும். இந்த கதையில் அந்த மாற்றம் நண்பர்களுக்கிடையில் மோதலுக்குக் காரணமானது.
மோதலின் ஆரம்பம்.
நாளாக நாளாகச் சிங்கமும் காளைமாடும் நெருக்கமான நண்பர்களாக மாறின. இப்படி இருக்கும்போது பிங்கலிகாவின் சகோதரன் சப்தகர்ணா பிங்கலிகாவைப் பார்க்க வந்தது. பிங்கலிகாவுக்கு சகோதரனைப் பார்த்ததில் சந்தோஷம் தாங்கவில்லை.. ஒரு பெரிய விருந்து கொடுக்க ஆசைப்பட்டது. வேட்டையாடக் கிளம்பியது. இந்த இடத்தில் நமது சஞ்ஜீவிகா ஒரு கேள்வியைக் கேட்டது. அந்த கேள்வியால் தான் பிரச்சனைகள் ஆரம்பமானது.
“மகாராஜா! ஆமா! நேற்று நீங்கள் கொன்ற மான் இருக்கிறதே ? அது என்னாச்சு? அதை உங்கள் சகோதரனுக்குக் கொடுத்தால் என்ன?” சஞ்ஜீவிகா கேட்டது. “ஆங்! அதுவா!அதில் ஒன்றும் மிஞ்சி இருக்காது. தமனக்காவும் கரட்டக்காவும்தான் அதற்குப் பொறுப்பு. ஏதாவது செஞ்சிருப்பாங்க” சிங்கம் அலட்சியமாக சொன்னது.
சஞ்ஜீவிகாவுக்கோ ஒரே வியப்பு! “மன்னிச்சுக்கோங்க ராஜா! சும்மா சும்மா கேள்வி கேக்கிறேனேனு தப்பா எடுத்துக்காதீங்க. அவர்கள் இரண்டுபேர் மட்டும் அந்த மானைச் சாப்பிட்டு முடித்திருப்பார்களா?” சந்தேகமாக மாடு கேட்டது.
சிங்கத்திற்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. “ம்ம்! இரண்டு பேரும் அதைச் சாப்பிட்டு முடித்திருக்கலாம். வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாம். இல்லை! அப்படியே அழுக விட்டிருக்கலாம். அதைப் பற்றி இப்ப என்ன கவலை. சாப்பிட இப்போது எதுவும் இல்லை.என் சகோதரனுக்காக நான் வேட்டையாடத்தான் வேண்டும். இதுதான் நாங்கள் எப்போதும் செய்வோம். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை”.
சிங்கம் சொன்னதைக்கேட்ட மாடு கேட்டது “ஆனால் ராஜா! உங்களிடம் சொல்லாமல் எப்படி அவர்கள் செய்யலாம்?” என்று.
“ம்ம் !அவர்கள் எப்போதும் இப்படித்தான் செய்வார்கள். எல்லா விஷயமும் என்னிடம் வந்து சொல்லனும்னு அவசியம் இல்லையே” சிங்கம் பதில் சொன்னது.
சஞ்ஜீவிகா இதோடு நிறுத்தவில்லை. மேலும் மேலும் ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தது. “எனக்கு என்னமோ அவர்கள் நடத்தை சரியாகப் படவில்லை. அவசரம் என்றால் மட்டும் தான் வேலைக்காரர்கள் சொந்தமாக முடிவெடுக்கவேண்டும். எப்போதும் அவர்கள் எஜமானனைக் கேட்டுத்தான் எதுவும் செய்யவேண்டும். அவர்களாகவே எதுவேண்டுமானாலும் செய்யக்கூடாது. நீங்க தான் யார் என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்கவேண்டும். அவர்கள் இரண்டு பேரும் உங்களுடைய மந்திரிகள் தான். தண்ணீர் ஜாடி மாதிரிதான் அவர்கள் இருக்கவேண்டும்” சஞ்ஜீவிகா சொல்லிக்கொண்டே போனது.
“தண்ணீர் ஜாடியா? நீ என்ன சொல்ல வருகிறாய் ?புரியலையே?” சிங்கம் கேட்டது.
“அதுவா! தண்ணீர் ஜாடி கீழ் பாகம் பெரிதாக இருக்கும். அப்பத்தான் நிறையத் தண்ணீர் கொள்ளும். ஆனால் மேல் பாகத்தில் உள்ள குறுகலான வாய் வழியாகக் கொஞ்சமாகத்தான் தண்ணீர் வெளியில் வரும். உங்களுடைய பொருள்களைப் பாதுகாப்பாக வைத்து சிக்கனமா உபயோகப்படுத்துவது தான் நல்ல மந்திரிகளுக்கு அடையாளம். நேரத்தின் அருமை முட்டாள்களுக்குத் தெரியாது.”
“கிடைக்கும் ஒரு பைசாவையும் விடாமல் சேர்த்து வைக்கவேண்டும். ஒரு பைசாதானே என்று அலட்சியமாக இருந்தால் எப்போதும் ஏழையாகத்தான் இருக்கவேண்டும். உங்களுக்குத்தேவை எதையும் விடாமல் சேர்த்து வைக்கும் மந்திரி. உங்கள் கருவூலம் நிறைந்து இருந்தால்தான் உங்களுக்குப் பெருமை ,மரியாதை எல்லாம். அதிகாரம் இருந்தால் மட்டும் போதாது! செல்வமும் கூட இருக்க வேண்டும். உங்களுடைய மந்திரிகள் நீங்கள் வேட்டையாடுவதை எல்லாம் சேர்த்து வைத்து உங்கள் செல்வத்தைப் பெருக்கவேண்டும். எல்லாவற்றையும் அவர்களே சாப்பிட்டு முடிக்கக் கூடாது. சும்மா தானமாகக் கொடுக்கக் கூடாது”.
“உங்கள் கரூவுலத்தை சரியாகக் கவனித்தால்தான் நாட்டையும் கவனிக்க முடியும். கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்வது, சரியாகப் பணத்தை வசூலிக்காமல் இருப்பது, பிறர் பொருளை அபகரிப்பது, கருவூலத்தைப் பாதுகாப்பவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று கவனிக்காமல் இருப்பது இந்த நாலும் பெரிய தவறுகள். இழப்பு நிறைய இருக்கும், மகாராஜா!”
சஞ்ஜீவிகா சொன்னதை பிங்கலிகாவின் சகோதரன் ஒன்று விடாமல் கேட்டது. அதுவும் சஞ்ஜீவிகா சொன்னதில் நியாயம் இருப்பதா நினைத்தது. “சஞ்ஜீவிகா சொல்வதில் நியாயம் உள்ளது. இந்த இரண்டு நரிகளும் உன்னை நன்றாக ஏமாற்றுகிறார்கள். உன்னுடைய மந்திரிகளென்று அவர்களுக்கு அகங்காரம். சண்டை என்று வந்தால் அவர்கள் வேண்டும். அதை விட்டுவிட்டு கருவூலத்தை ஏன் அவர்கள் கவனிக்கவேண்டும்?அவர்களை எப்படி நம்ப முடியும்?”
“மூன்று விதமான மனிதர்களையோ, விலங்குகளையோ நம்பவே கூடாது. முதலில் நிறையப் படித்தவர்கள். அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் கருவூலத்தின் சாவியை உன்னிடம் கொடுக்க மறுப்பார்கள். இரண்டாவதாகப் போர்வீரன். உன்னிடம் இருந்து செல்வத்தைப் பிடுங்க உன்னோடு சண்டை போடுவான். கடைசியாகச் சொந்தக்காரர்கள். சத்தமில்லாமல் உன்னிடம் இருந்து எல்லாவற்றையும் திருடுவார்கள்”.
“ஒருவரிடமே நிறைய நாளாகக் கருவூலத்தை கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தால் அதிகார போதையில் தப்பு செய்தால்கூட பயப்படமாட்டான். தப்பைத் தட்டிக்கேட்டால் திரும்பி எதிர்ப்பான்.”
“உனக்கு எப்போதோ உதவிசெய்தவனுக்கு வேலை கொடுத்தால் அவன் உதவி செய்ததை சொல்லிக்கொண்டே திருடவும் செய்வான்.”
“உன்னுடைய நீண்டநாள் நண்பனுக்கு வேலை கொடுத்தால், என்னமோ அவன்தான் ராஜா மாதிரி அதிகாரம் செய்வான்.”
“சகுனியைப் போல் கபடமாக புத்திசாலியாக இருப்பவனுக்கு வேலை கொடுத்தால் உனக்குத் தெரியாமலே எல்லாவற்றையும் திருடி வைத்துக்கொள்வான்”.
“செல்வம் அதிகமாக அதிகமாக ஒழுக்கக்கேடும் அதிகமாகும். மந்திரிகளும் சராசரி வகைதானே! அவர்களுக்கோ, அவர்கள் குடும்பத்திற்கோ வேண்டியதை வாங்கவோ, வசதிகளைப் பெருக்கவோ கருவூலத்திலிருந்து செலவு செய்ய வாய்ப்பிருக்கிறதே. லஞ்சம் கூட வாங்கி அவசியமில்லாமல் விரயம்கூட செய்வார்கள்.”
“உனக்குச் சேரவேண்டியதைக் கவனக்குறைவால் வாங்கிக்கொண்டு வராமலும் இருக்கலாம். ஏன்? உன்னிடம் இருந்து திருடக்கூடச் செய்யலாம். மந்திரிகளைக் கண்காணித்து உனக்குச் சேரவேண்டியதை அவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வது ராஜாவான உன்னுடைய கடமை. அப்படிச் செய்வது இப்போது அவ்வளவு சுலபமானது இல்லை.”
“ஈரமான துணியை ஒரு தடவை பிழிந்து எடுத்தால் அதிலிருந்து எல்லா தண்ணீரையும் எடுக்க முடியாது. பல தடவை அதைப் பிழிந்து எடுத்த பின்தான் அதைக் காய வைக்கமுடியும்.”
சபத்கர்ணா சொன்னதைக் கேட்ட பிங்கலிகா “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அந்த இரண்டு நரிகளும் நான் சொல்வதைக் கேட்பார்களா?” சந்தேகமாகச் சொன்னது.
சபத்கர்ணாவுக்கு ஆச்சரியம் தாங்கலை.” நீ என்ன சொல்கிறாய்? இதெப்படி? நீ தானே ராஜா? ராஜாவின் மகன்கூட ராஜா சொல்வதைத் தட்டாமல் செய்யவேண்டும். அப்படி இல்லையென்றால் ராஜாவாக நீ இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”
“பலமான ராஜாவுக்குக் காட்டை ஆள நேர்மையான திறமையான மந்திரிகள்தான் வேண்டும். அந்த இரண்டு நரிகளையும் உனக்குப் பிடித்திருக்கலாம். ஒரு ராஜா அவனுடைய நாட்டை திருடர்களிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் மட்டும் காப்பாற்ற நினைக்கக்கூடாது. உன்னுடைய நெருங்கியவர்களிடமிருந்தும் ஏன் உன் பேராசையிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்.”
“இந்த காளைமாடோ புல் செடிகள் இதைத்தான் தின்னும். மாமிசம் சாப்பிடாது. அதை உன்னுடைய உணவைப் பாதுகாக்க விடு. உன்னுடைய உணவு பாதுகாப்பாக இருக்கும். அது உன் உணவைத் திருடாது” சப்தகர்ணா நீளமாக ஆலோசனை சொன்னது.
பிங்கலிகாவுக்கு சகோதரன் சொன்னது சரியாகப்பட்டது. உடனே மந்திரிகள் உட்பட எல்லாரையும் வரச்சொன்னது. இப்போது காளைமாட்டின் பேச்சுக்குத்தான் அங்கே மதிப்பு இருந்தது. சிங்கம் எது செய்தாலும் சஞ்ஜீவிகாவைக் கேட்காமல் செய்யாது.
இரண்டு நரிகளுக்கும் அவர்களுடைய உதவி சிங்கத்திற்குத் தேவையில்லை என்று தெரிந்து போனது. நாட்கள் ஆக ஆக நரிகளுக்கு இந்த மாற்றம் மனதில் வேதனையைக் கொடுத்தது. அவர்களுக்குக் கிடைத்த மரியாதையும் சலுகைகளும் நின்று போனது. நரிகள்தான் சஞ்ஜீவிகாவை சிங்கத்துக்கு அறிமுகம் செய்து வைத்தன. சிங்கத்திடமிருந்து ஆபத்து ஒன்றும் வராதென்று நல்ல எண்ணத்தோடுதான் செய்தன.
“பாரேன்! நம் பிரச்சனைக்கு நாம்தான் காரணம். நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டோம். நாம்தான் மாட்டைச் சிங்கத்திடம் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகம் செய்தோம். நம்மால் தான் அவர்கள் இரண்டு பேரும் நண்பர்களானார்கள். இதற்கு மேல் அவர்களுடைய நட்பை கவனிக்காமல் விட்டுவிட்டோம். இப்போது என்ன நடந்தது பார்! மாடு நம்மை விரட்டிவிட்டது.”
“நான் அந்த நன்றியில்லாத மாட்டை சும்மா விடமாட்டேன். என்னால் தான் அவர்கள் நண்பரகளானர்கள். நானே அவர்களைப் பிரிக்கப்போகிறேன்” தமனக்கா சபதம் போட்டது.
“அது நடக்கிற காரியமாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ரொம்பவே நெருக்கமாக இருக்கிறார்கள்” நம்பிக்கை இல்லாமல் கரட்டக்கா தலையை ஆட்டியது.
“என்னிடம் அதற்குப் பதில் இருக்கிறது . நேருக்கு நேராக மோத முடியவில்லை என்றால் புத்தியை உபயோகித்துப் பிரிக்க வேண்டும். என்ன? தந்திரமாகத் திட்டம் போட வேண்டும். ஒரு கதை இருக்கிறது தெரியுமா? தங்கச் சங்கிலியை வைத்து காகம் ஒரு கருநாகத்தைக் காட்டிக் கொடுத்தது” தமனக்கா சகோதரனைக் கேட்டது.
“ம்ஹும் தெரியாதே? ஏன்? எப்படி காகம் நாகத்தைக் காட்டிக் கொடுத்தது?” கரட்டக்கா கேட்டது.
தமனக்காதானே தந்திரமாக மாட்டைக் கூட்டிக்கொண்டு வந்தது. இப்போது அதுவே மாட்டை விரட்டப் பார்க்கிறது. மோதலின் ஆரம்பத்திற்கும் அதுவே பிள்ளையார் சுழியும் போடப்போகிறது.
இந்த பகுதி இதோடு முடிவடைந்தது. காகம் நாகத்தின் கதையை அடுத்த பகுதியில் பார்க்கலாம். மறக்காமல் வந்து கேளுங்கள்.