ஹிதோபதேசம்
ஹிதோபதேசத்தின் மூன்றாவது பகுதியான போர் தொடுத்தலின் கடைசி கதையில் அன்ன ராஜா ஹிரண்யகர்பாவுக்கும் மயில் ராஜா சித்ரவர்ணாவுக்கும் நடந்த போரைப்பற்றிப் பார்த்தோம். அந்தப் போரில் காகம் மேகவர்ணா ஹிரண்யகர்பாவுக்கு செய்த துரோகத்தால் தோல்வி கிடைத்தது.
விஷ்ணு சர்மாவோ ஒரு நல்ல அறிவாளி . கதைகள் சொல்லும் போதே ஒரு போர் நடக்கும் போது செய்ய வேண்டியவை என்ன, பின்பற்ற வேண்டியவை என்ன என்று இளவரசர்கள் மனதில் பதியும்படி சொன்னார்.
மூன்று மீன்கள்
அரசாளும் ராஜாக்கள் எப்பொழுதும் போரைப் பற்றியே நினைத்து கவலைப் படமுடியாது. நாட்டையும் மக்களையும் கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டில் குழப்பமும் உண்டாகி மக்கள் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஒரு நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நாட்டில் அமைதி இருக்க வேண்டும். விஷ்ணு சர்மாவும் இதை மனதில் வைத்து ஹிதோபதேசத்தின் நான்காவது பகுதியான சமாதானம் செய்வது அல்லது அமைதியை விரும்புவது பகுதியில் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
இளவரசர்களும் விஷ்ணு சர்மாவின் கதைகளைக் கேட்கக் காத்திருந்தார்கள். விஷ்ணு சர்மா கதைகளைச் சொல்ல ஆரம்பித்த உடனே இளவரசர்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு ஆவலாகக் கேட்க ஆரம்பித்தார்கள்.
“குருவே! நீங்கள் போர் தொடுப்பதைப் பற்றிச் சொன்னீர்கள். போரில் சமாதானம் செய்வது எப்படி? மறுபடியும் அமைதி கிடைக்க என்ன செய்ய வேண்டும்.? எதிர்காலத்தில் நாங்களும் அரசர்களாகப் போகிறோமே? எங்களுக்கும் அதைப் பற்றித் தெரியவேண்டுமே?” இளவரசர்கள் கேட்டார்கள்.
குருவிற்கு அதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இளவரசர்களும் நாட்டை ஆளும்போது மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அமைதியை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமே?
“நீங்கள் கேட்டது போலவே நான் சொல்லப் போகும் கதைகளும் சமாதானத்தையும் அமைதியையும் பற்றியது தான். போர் முடிந்ததும் நடந்தவற்றைப் பற்றிக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்” குரு கதைகளை ஆரம்பித்தார்.
“இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.இரண்டு படைகளும் தீவிரமாகப் போர் செய்த பின் போர் முடிந்த உடனே இரண்டு மந்திரிகளும் சமாதானத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
இதைக் கேட்டதும் “அப்படியா? சித்ரவர்ணாவின் மந்திரி கழுகு சர்வாங்யாவை அவமதிக்க வில்லையா? வென்றது சித்ரவர்ணாதானே! அப்படியுமா? என்னதான் நடந்தது” இளவரசர்கள் நம்ப முடியாமல் கேட்டார்கள்.
குருவும் தொடர்ந்தார்.
“எப்படி கோட்டையில் நெருப்பு பிடித்தது? யார் அந்த வேலையைச் செய்திருப்பார்கள்? என்னுடைய ஆட்களில் ஒருவரோ? எதிரியின் ஆட்கள் உள்ளே வந்து செய்திருப்பார்களோ”? ஹிரண்யகர்பாவின் பதட்டத்தை சரவாங்யா பக்கத்திலிருந்து பாரத்துக் கொண்டிருந்தது.
“நான் சொல்லப் போவது உங்களுக்குப் பிடிக்காது. ஆனாலும் நான் உண்மையைத்தான் சொல்லப்போகிறேன். அந்த காகம் மேகவர்ணா இருக்கிறதே? அதை எங்கேயும் காணவில்லை. அந்த காகம்தான் இதற்கெல்லாம் காரணம். என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்த காகம் ஒரு துரோகி” சர்வாங்யா சொன்னது
.இதைக் கேட்ட ஹிரண்யகர்பாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.” எல்லாம் என்னுடைய தலை எழுத்து. வேறு என்ன சொல்ல முடியும். நல்ல அறிவுரை தரும் மந்திரி இருந்தும் கூட தோல்வி அடைய வேண்டும் என்று என் தலைவிதி என்றால் அது தானே நடக்கும். நான் நீண்ட நாட்கள் அரசனாக இருக்க முடியாது போல. என் தலைவிதி என்னவோ அதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்” ஆதங்கத்தோடு ஹிரண்யகர்பா சொன்னது.
“தன்னுடைய தவற்றுக்குத் தலைவிதி என்று தப்பிப்பது முட்டாள்கள் செய்யும் வேலை மன்னா! அப்படிப் பட்டவர்கள் எங்கே தவறு செய்தோம் என்று எண்ணிப் பார்க்க மாட்டார்கள். ஆமை ஒன்று கம்பிலிருந்து கீழே விழுந்து இறந்த நிலைதான் தன் நலனுக்காக அறிஞர்கள் சொல்லும் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு தன் மனம் போல் செயல்படுபவனுக்குக் கிடைக்கும்” சர்வாங்யா மன்னனின் தவற்றை உணர்த்தியது.
“இளவரசர்களே! இங்கே மந்திரி எந்த பயமும் இல்லாமல் ராஜா செய்த தவற்றைச் சொல்லிவதைப் பாருங்கள். ராஜா செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டாமல் இருந்தால் அந்த ராஜாவுக்கு எதிரியே வேண்டாம். அவனே அவனுக்கு எதிரியாகிவிடுவான்”.
“சர்வாங்யா ஆரம்பத்திலிருந்தே காகம் மேகவர்ணாவை சந்தேகப்பட்டது. ஹிரண்யகர்பாவிடமும் எச்சரித்தது .ஹிரண்யகர்பாவோ அதைப் புறக்கணித்து விட்டது. காகத்தையும் கோட்டைக்குள் வர அனுமதித்தது”.
“ராஜாவின் தவற்றால்தான் போரில் தோல்வி கிடைத்தது என்பதை எந்த பயமும் இல்லாமல் மந்திரி ராஜாவிடம் சொன்னது .அதற்குத் தைரியம் இரக்க வேண்டும். அதே சமயத்தில் ஹிரண்யாகர்பாவும் மந்திரி சொன்னதை மதித்து ஒப்புக் கொண்டது. தவற்றையும் திருத்திக் கொள்ளத் தயாரானது’. குரு இளவரசர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னார்.
ஹிரண்யகர்பா தன் தவற்றை நினைத்து அமைதியானது. அதன்பின் அந்த ஆமையின் கதை என்ன என்று மந்திரியிடம் கேட்டது. சர்வாங்யாவும் கதையை ஆரம்பித்தது.
முட்டாள் ஆமை
“அரசே! இது மகத நாட்டில் நடந்த ஒரு சம்பவம். தாமரைப் பூக்கள் நிறைந்த குளம் என்பதால் அந்த ஏரிக்கு புலோட்பலா என்று பெயர்.அந்த குளத்தில் நிறையப் பறவைகளும் நீரில் வாழும் விலங்குகளும் இருந்தது. அங்கே சங்கடா, விகடா என்ற இரண்டு வாத்துக்கள் வசித்து வந்தது.
அந்த வாத்துக்களின் நண்பன் ஆமை ஒன்றும் அந்த குளத்தில் வசித்தது. அதன் பெயர் கம்புக்ரீவா. திடீரென்று ஒரு நாள் நாலைந்து மீனவர்கள் அந்த பக்கம் வந்தார்கள். பூக்களும் பறவைகளும் நீர் விலங்குகளும் நிறைந்த அந்த குளம் அவர்களைக் கவர்ந்தது.
இதுவரை யாரும் அந்த இடத்திற்குப் போனதில்லை. மீனவர்களும் உற்சாகமாக எப்படி அந்த குளத்தில் உள்ள மீன்கள், ஆமைகள், இன்னும் என்ன எல்லாம் இருக்கிறதோ பிடித்து எடுத்துக்கொண்டு போவது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்ட ஆமைக்குப் பயம் வந்து விட்டது.
“ஐயோ! நான் என்ன செய்வேன்? எப்படித் தப்பிப்பது?” புலம்பலுடன் தன் வாத்து நண்பர்களிடம் போய் “கேட்டீர்களா அவர்கள் பேசியதை? நீரில் வாழும் நம்மால் என்ன செய்ய முடியும்?” பயத்துடன் கேட்டது.
“கவலைப்படாதே! இவர்கள் எல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்கள்.. அதற்கு மேல் எதுவும் செய்ய மாட்டார்கள். காலை வரை காத்திருப்போம். ஏதாவது செய்கிறார்களா என்று பார்ப்போம். அப்புறம் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்” வாத்துக்கள் ஆமையைச் சமாதானப்படுத்தியது.
“ஐயையோ! என்னால் அதுவரை காத்திருக்க முடியாது. காலம் கடந்து விடும். உடனே ஏதாவது செய்ய வேண்டும். இல்லை என்றால் நிச்சயம் ஏதாவது பிரச்சனைதான் வரும். யத்பவிஷ்யா என்ற மீன் எதுவும் செய்யாமல் இருந்ததால் அதன் உயிர் போய்விட்டது. அதுபோல் எனக்கும் நடக்கும் ஒன்றும் செய்யாவிட்டால். மூன்று மீன்களுக்கும் ஒரு மீனவனால் என்ன நடந்தது தெரியுமா உங்களுக்கு”
“அனாகதவிதாத்தா, ப்ரத்யுத்பனனமாட்டி இந்த இரண்டு மீன்களும் தப்பிக்க முயற்சி செய்து மீன் வலையிலிருந்து தப்பித்து விட்டார்கள். ஆனால் யத்பவிஷ்யாவோ எதுவும் செய்யாமல் என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும் எதற்கு அவசியமில்லாமல் கவலைப்படவேண்டுமென்று ஒன்றும் செய்யாமல் இருந்ததால் அதனால் தப்பிக்க முடியலை. நான் அது போல ஒன்றும் செய்யாமல் இருந்தால் எனக்குத்தான் ஆபத்து” சொல்லி கரையை நோக்கி நீந்திச் சென்றது.
“ஏய்! ஏய்! கொஞ்சம் இரு. முழு கதையையும் எங்களுக்குச் சொல். எதனால் யத்பவிஷ்யாவால் தப்பிக்க முடியவில்லை?” வாத்துக்கள் ஆமையைப் பின் தொடர்ந்தன.
மூன்று மீன்கள்
“அதுவா! இந்த குளத்தில்தான் அந்த மீன்கள் இருந்தன. இங்கே தான் எல்லாம் நடந்தது. இப்போது வந்திருக்கிறார்களே அவர்களைப் போலத்தான் அந்த மீனவர்களும் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் மூன்று மீன்களும் என்ன செய்யலாமென்று பேச ஆரம்பித்தார்கள்”.
அனாகதவிதாத்தா ” எனக்கு எந்தப் பிரச்சனையும் வேண்டாம். வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க நான் வேறு குளத்துக்குப் போகிறேன்” சொல்ல மீதி இரண்டு மீன்களும் அப்படிப் போக விரும்பவில்லை. அனாகதவிதாத்தா கிளம்பிப் போய்விட்டது.
ப்ரத்துயுக்பன்னமாட்டிக்கு அந்த இடத்தைவிட்டுப் போக விருப்பமில்லை. அது தானே அதன் வீடு. திரும்பி அதே இடத்துக்கு வரமுடியுமா என்று தெரியாமல் வேறு இடத்திற்குப் போவதற்கு அதற்கு விருப்பமில்லை. “அந்த மீனவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. நான் இங்கேயே இருக்கிறேன். ஆனால் ஏதாவது ஆபத்து என்று தெரிந்தால் ஏதாவது செய்து தப்பித்து விடுவேன்” என்றது.
யத்பவஷ்யாதான் எதுவும் செய்ய விருப்பமில்லாமல் இருந்தது.” எதுவும் நடக்கக்கூடாது என்று இருந்தால் எதுவும் நடக்காது. நடந்துதான் ஆகவேண்டும் என்று இருந்தால் கட்டாயம் அது நடக்கும். நான் என்னுடைய வேலையை எப்போதும் போல் செய்து கொண்டிருப்பேன். நான் உயிரோடு இருக்கவேண்டும் என்று இருந்தால் உயிர் பிழைப்பேன்”என்றது.
“ஆபத்து வரும் என்று தெரிந்திருந்தும் ஏதுவும் செய்யாமல் இருப்பது சரியில்லையே. அடுத்த நாள் காலையும் வந்தது. மீனவர்கள் அங்கே வந்தார்கள். மீன்வலையை விரித்துப் போட்டார்கள். நிறைய மீன்களையும் பிடித்தார்கள்.அவர்கள் பிடித்த மீன்களில் இந்த இரண்டு மீன்கள் மாட்டிக்கொண்டது”.
.ப்ரத்துயுக்பன்னமாட்டி மீதி மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தபோது இறந்து போனது போல் நடித்தது. அதைப் பிடித்த மீனவன் அது இறக்கவில்லை என்று தெரியாமல் வலையிலிருந்து வெளியில் எடுத்துப் போட்டான். அவ்வளவுதான்! தண்ணீருக்குள் ஒரே குதி குதித்து யாரும் பார்க்க முடியாத தூரத்திற்குப் போய்விட்டது. யத்பவிஷ்யாவோ எதுவும் செய்யாமல் இருந்ததால் இறந்து போனது”.
ஆமை நண்பர்களைப் பாரத்து “இப்போது புரிகிறதா நான் ஏன் காலைவரைக் காத்திருக்காமல் உடனே முடிவெடுக்க அவசரப்படுகிறேன் என்று. இரவு முடியும் முன்பே வேறு குளத்திற்குப் போக வேண்டும்” என்று ஆமை சொன்னது.
இந்தப் பகுதி இதோடு முடிந்தது. அடுத்த பகுதியில் ஆமையால் அங்கிருந்து தப்பிப்போக முடிந்ததா என்று மறக்காமல் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!