ஹிதோபதேசம்
இந்த ஹிதோபதேசத் தொடரின் முந்தைய பகுதியில் அன்னப் பறவை ராஜா, காக்கா மேகவர்ணாவை எந்தவித சந்தேகமும் இல்லாமல் வரவேற்றது. ஆனால் மந்திரி சர்வாங்யாவுக்கு திடீரென்று காகம் வந்தது சந்தேகத்தை உண்டாக்கியது. காகத்தின் மீது நம்பிக்கையும் வரவில்லை. இதற்கு முன் கிளி சித்ரவர்ணாவின் நாட்டிற்கு வந்து கற்பூரத்தீவின் அழகை சித்ரவர்ணாவிடம் வர்ணித்தது. அதைக் கேட்ட சித்ரவர்ணா உடனே போரிட்டு வென்று கற்பூரத்தீவை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தது. சித்ரவர்ணாவின் மந்திரி கழுகுக்குப் போரிட விருப்பமில்லை. மந்திரி சொல்வதை சித்ரவர்ணா கேட்குமா இல்லை உடனே போர் செய்ய முடிவெடுக்குமா என்று இந்த பகுதியில் பார்ப்போம்.
மந்திரியின் அறிவுரை
சர்வாங்யா காகத்தை நம்பவேண்டாம் என்று சொன்னதும் ஹிரண்யகர்பா “ம்ம்! நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் ரொம்ப தூரம் பறந்து வந்து எனக்குச் செய்தி சொல்ல வந்திருக்கிறது. என்னால் எப்படி மறுக்கமுடியும்? செய்தி சொல்ல வந்தவனை வரவேற்று உபசரிப்பதுதானே ஒரு ராஜாவின் கடமை! அப்படிச் செய்யவில்லை என்றால் பிரச்சனைகள்தான் அதிகமாகும்”. ராஜா அதன் பொறுப்பை விடவில்லை.
சர்வாங்யா ராஜாவின் பொறுப்பை உணர்ந்து” பரவாயில்லை மகாராஜா! நம் ஒற்றர்களும் எதிரியின் இடத்திலிருந்து நமக்குச் செய்தி அனுப்புவார்கள். நம் கோட்டையும் தயாராகிவிட்டது. நாம் அந்த கிளியை அதன் நாட்டுக்கு அனுப்பிவிடலாம். அதற்கு இனிமேல் இங்கே வேலையில்லை. காகத்தையும் பாரத்து பேசலாம். ஆனாலும் எச்சரிக்கையோடுதான் இருக்கவேண்டும். சாணக்கியின் நந்த ராஜனைக் கொல்ல ஓர் ஒற்றனைத்தானே அனுப்பினான். அப்படி எதுவும் இங்கே நடக்காமல் பாரத்துக்கொள்ள வேண்டும்”.
“இந்த காகமும் கிளியும் ஏதாவது பிரச்சனைகளை உண்டாக்கினால் அதைச் சமாளிக்க நமக்குத் தேவை நல்ல அறிவுரை சொல்லும் மந்திரிகளும் வீரமுள்ள படைவீரர்களும்தான்” சர்வாங்யா சொல்ல ஹிரண்யகர்பா கிளியையும் காகத்தையும் அங்கே வரச்சொன்னது.
கிளி உள்ளே வந்து “ஓ! ராஜா! பலசாலியான எங்கள் ராஜா சித்ரவர்ணா உடனே உங்களை அவரிடம் வந்து பணிந்து உங்கள் நாட்டை அவரிடம் ஒப்படைக்கச் சொல்லி என்னை இங்கே அனுப்பியிருக்கிறார் . நீங்களும் இந்த நாடும் தப்பிப் பிழைக்க வேண்டும் என்றால் அவரை உங்கள் ராஜாவா நீங்கள் ஏற்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு உயிரும் இந்த நாடும் இருக்காது” கொஞ்சம் திமிராகவே சொன்னது.
இதைக் கேட்ட ஹிரண்யகர்பா கோபம் தாங்காமல் “யார் அங்கே? இந்த கிளியைக் கழுத்தைத் திருகித் தூக்கி எறியுங்கள்” சொன்னது. உடனே காகம் மேகவர்ணா ஒரு குதி குதித்து “மகாராஜா! அந்த வேலையை நான் செய்கிறேன். திரும்பி இங்கே வரமுடியாதவாறு அதை அழித்துக் காட்டுகிறேன்” வீராவேசமா சொன்னது.
சர்வாங்யா மட்டும் தலையிடவில்லை என்றால் பிரச்சனை வேறுவிதமாக மாறியிருக்கும். சர்வாங்யா அவசரமாகத் தலையிட்டு “ராஜா! ராஜா! கொஞ்சம் அமைதியாய் இருங்கள். அவசரப்பட்டுச் சிந்திக்காமல் எதையும் செய்யக்கூடாது” காகத்தை முறைத்துப் பார்த்தது.
“மகாராஜா! அறிஞர்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்பது இந்த சமயத்தில் மிக அவசியம். தர்மத்திற்கு ஆபத்து வரும் போது அதை எதிர்த்துப் பேசாமல் இருப்பதும் நல்லதல்ல. உண்மை இருக்குமிடத்தில் தர்மம் இருக்கும். துரோகம் இருக்கும் இடத்தில் உண்மை இருக்காது. தூதுவனை எப்படி நடத்துவது தர்மம் என்று புராணங்கள் சொல்கின்றன. தூதுவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் அவனைத் தாக்குவதோ கொல்வதோ தர்மத்திற்கு எதிரானது”.
“தூதுவனை அனுப்பிய ராஜா சொல்வதைச் சொல்வது தான் அவன் வேலை. அவன் சொல்வது அவனுடைய சொந்த கருத்து இல்லை. ஒரு பெரிய படை அவனைச் சூழ்ந்திருந்தாலும் தூதுவன் அவனுடைய ராஜா சொல்வதைத் தானே சொல்வான். ஒரு தூதுவன் சொன்னதைக் கேட்டுக் கோபப்படவேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தூதுவனுக்கும் தெரியும் அவனை யாரும் தாக்கக்கூடாது என்று. அவன் சொல்வதை எல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை” சர்வாங்யா எடுத்துச் சொன்னது. இதைக் கேட்ட ராஜா தவறை உணர்ந்து அமைதியானது.
கிளியும் அங்கே இருந்து சரவாங்யா கொடுத்த பரிசுகளோடு பறந்து போனது. விந்தியமலைக்குப் போய் சேர்ந்ததும் நேராக சித்ரவரணாவைப் பார்க்கப் போனது. சித்ரவரணா கிளியைக் கேள்விகளால் துளைத்தது. ” நீ அந்த ராஜா ஹிரண்யபர்பாவைப் பாரத்து நான் சொன்னதை எல்லாம் சொன்னாயா? அதற்கு என்ன பதில் சொன்னான்? அந்த கற்பூரத்தீவில் அப்படி என்ன இருக்கிறது” குரலை உயர்த்தி கேட்டான்.
“அரசே! கற்பூரத்தீவின் ராஜா எதற்கும் பணியவில்லை. உங்களை ராஜாவாகவும் ஏற்க மறுத்துவிட்டது. கற்பூரத்தீவின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.அது ஒரு சொர்க்கம்.போர் செய்துதான் நாம் அதை அடையமுடியும்” கிளியின் பதில் சித்ரவர்ணாவின் ஆசையைத் தூண்டிவிட்டது.
மந்திரிகளையும் படைத் தளபதிகளையும் போருக்குத் தயாராகச் சொன்னது. “போருக்குத் தாயாராகுங்கள். யார் யார் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். நானும் சும்மா வேடிக்கைபார்க்காமல் போரில் செய்ய வேண்டியவற்றைத் திட்டம் போடவேண்டும். ஒரு தலைவனாகப் படைகளுக்கு வழிகாட்ட வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சித்ரவர்ணா கேட்டது.
தூர்தர்ஷி என்ற வயதான கழுகு வருத்தத்துடன் “ராஜா! நினைத்தவுடன் போர் செய்வது என்பது நல்லது அல்ல. நமக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளதா என்று பார்க்கவேண்டும். அப்போது தான் நமக்குப் போரில் வெற்றி கிடைக்கும். நம் படைவீரர்களும் நமக்கு உதவுபவர்களும் எப்போதும் நம் பக்கம் விசுவாசமாக இருக்கவேண்டும். நம் எதிரிகளையும் அவர்கள் எதிரிகள் போல் நினைக்கவேண்டும். போரின் முடிவில் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றும் பரக்கவேண்டும். அது தங்கமோ இல்லை ஒரு நிலப்பரப்போ ஏன் ஒரு நண்பன் கூட கிடைக்கலாம்” சொன்னது.
ஆனால் சித்ரவர்ணா அந்த கழுகு சொன்னதை லட்சியம் செய்யாமல் “அது இருக்கட்டும். நம்மிடம் எத்தனைப் படைவீரர்கள் ஆயுதங்கள் உள்ளன என்று ஒரு கணக்கு எடுங்கள்” என்று கட்டளை இட்டது.” ஜோசியரைக் கூப்பிட்டுப் போருக்கு நாள் குறித்தவுடன் நாம் போருக்குக் கிளம்பலாம்” கழுகைப் புறக்கணித்தது. “எதிரியின் படைபலம் தெரியாமல் போருக்குச் செல்வது முட்டாள்தனம். அது உங்களின் உயிருக்குக் கூட ஆபத்தாக முடியும்”மறுபடியும் கழுகு எச்சரித்தது.
அதைக் கேட்டதும் சித்ரவர்ணாவுக்கு எரிச்சலும் கோபமும் வந்தது.” இது என்ன? போருக்குப் போகும் முன் அபசகுனம்போல் எதையாவது சொல்வது. நான் போரில் வெல்வதற்கான யோசனையைத் தான் கேட்டேன்” கோபத்துடன் சொன்னது.” ராஜா போரில் வெல்வது எப்படி என்று என்னால் சொல்லமுடியும் ஆனால் நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும்”.
“போரின் தர்மத்தை மீறினால் அது தோல்வியில் தான முடியும்” கழுகு திரும்பி பதில் சொன்னது. “நோய்க்கு என்ன மருந்து உதவும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. அந்த மருந்தை எடுத்துக்கொண்டால் தான் நோய் குணமாகும். படையின் தளபதி படைவீரர்களுடன் ஆபத்தான சமயத்தில் ஆறுகளைக் கடக்கும்போதோ மலைகளைக் கடந்து போகும்போதோ இல்லை காட்டுப் பகுதியைக் கடக்கும்போதோ படைகளை முன்னின்று நடத்தவேண்டும்”.
“மன்னா! நீங்களும் பெண்களும் அனுபவம் இல்லாத படைவீரர்களும் நடுவில் இருக்க வேண்டும். உங்களைச் சுற்றிப் படைத் தளபதிகளும் அனுபவமுள்ள வீரர்களும் ஓர் அரண் போல் சுற்றி வரவேண்டும். இதைத் தவிர முதலில் குதிரைப் படை, அடுத்து தேர்கள் அடுத்து யானைகள் கடைசியில் படைவீரர்கள் இப்படி படைகளை வரிசைப் படுத்த வேண்டும்.மன்னா நீங்களும் படைத்தளபதிகளும் வீரர்களை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்”.
“கரடுமுரடான நிலப்பரப்பில் யானைப்படைகளை உபயோகப்படுத்த வேண்டும். யானைகளின் பாதங்கள் பெரிதாக இருப்பதால் நிலப்பரப்பு சமமாக இருக்கும் இடத்தில் குதிரைகளை உபயோகப்படுத்த வேண்டும். ஆறுகளைப் படகில் கடக்க வேண்டும். படைவீரர்களை எப்பொழுதும் உங்களுடனே இருக்க வேண்டும்”.
“யானைகளின் பாதங்கள் பெரிதாக இருப்பதால் கரடுமுரடான நிலப்பரப்பில் யானைப்படைகளை உபயோகப்படுத்த வேண்டும். நிலப்பரப்பு சமமாக இருக்கும் இடத்தில் குதிரைகளை உபயோகப்படுத்த வேண்டும். ஆறுகளைப் படகில் கடக்க வேண்டும். படைவீரர்களை எப்பொழுதும் உங்களுடனே இருக்க வேண்டும்”.
“மலைகளைக் கடக்கும் போது எதிரி மறைந்திருந்து தாக்க வாய்ப்பிருக்கிறது. கவனமாக்கக் கடக்க வேண்டும். உங்களைச் சுற்றிப் போர்வீரர்கள் இருந்தாலும் நீங்கள் ஒரு நொடிகூட அசரக்கூடாது. புதிய இடங்களுக்குப் போகும் முன் முதலில் ஒருவரை அனுப்பி அந்த இடம் பாதுகாப்பாக உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்”.
“படைகளின் செலவுக்குத் தேவையான பணம் எடுத்துக் கொள்ள வேண்டும். சாகசம் செய்த வீரர்களுக்குத் தகுந்த பரிசு கொடுத்தால் அவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். பணம் செய்யும் வேலையை வேறு எதுவும் செய்யாது. ஒற்றுமையாக இருந்து ஒவ்வொருவரையும் கவனிக்க வேண்டும். யாருக்காவது தைரியம் குறைந்து போர் செய்யத் தயங்கினால் அவர்கள் யாரையும் தாக்காமல் நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும்”.
“படைவீரர்கள் தாக்குதலை முன்னின்று நடத்தவேண்டும். சம நிலைபரப்பில் குதிரைப் படைகளையும் தேர்களையும் ஆறுகளுக்கு அருகில் இந்தப் படைகளோடு யானைகளையும் உபயோகப்படுத்த வேண்டும்.காடுகளில் வில் வீரர்களையும் திறந்த வெளியில் வாள்களையும் உபயோகப்படுத்த வேண்டும். படைகளுக்கு உணவு குடிநீர் ஆயுதங்கள் எரிபொருள் மிகவும் தேவையானது”.
“எதிரிப் படைகளிடம் இருக்கும் இவை எல்லாவற்றையும் கண்டுபிடித்து அழிக்கவேண்டும். யானைகளால் கால்களாலும் பெரிய உடம்பாலும் தும்பிக்கையாலும் நிறையச் சேதங்களை உண்டாக்கமுடியும். குதிரைகளால் வேகமாக ஓடி படைவீரர்களைச் சிதறடிக்க முடியும்.படைவீரர்கள் எதிரிகளை உங்களை நெருங்க முடியாமல் சுற்றி நின்று காப்பாற்ற வேண்டும்” கழுகு அறிவுரையைச் சொல்லி நிறுத்தியது.
கழுகின் இந்த அறிவுரையோடு இந்த பகுதி முடிந்தது. சித்ரவர்ணா கழுகின் அறிவுரையைக் கேட்டு போரைத் தவிர்த்ததா இல்லை அலட்சியம் செய்துவிட்டு போருக்குச் சென்றதா என்பதை மறக்காமல் அடுத்த பகுதியில் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!