ஹிதோபதேசம்
போன பகுதியில் முட்டாள் கொக்கு தீர்க்கமுகா மயில் ராஜாவான சித்ரவர்ணாவை அவமதித்ததால் சித்ரவர்ணா கற்பூரத்தீவீன் ராஜாவான ஹிரண்யகர்ப்பாவுடன் போர் தொடுக்க முடிவு செய்தது. அதன் பிறகும் கூட அந்த கொக்கு அதன் திமிரான பேச்சால் எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கியுள்ளது என்று புரிந்து கொள்ளவில்லை. ஹிரண்யகர்ப்பாவுக்கும் மந்திரி சர்வாங்யாவுக்கும் முட்டாள் கொக்கை யாரோ இப்படிப் பேசச் சொல்லிக் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார்கள். ராஜாவும் மந்திரியும் போரை எதிர்கொள்ளத் தயாரானார்கள்
போருக்குத் தயார் செய்தல்
“மகாராஜா என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. அதை நாம் இருவர் மட்டும் இருக்கும் போதுதான் சொல்ல வேண்டும்”.
“நீங்கள் எப்படி இந்த சவாலை எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்க ஆவலாய் நிறைய மக்கள் காத்திருக்கிறார்கள். நாம் எப்படிப் பேசுகிறோம், நம் முகபாவனைகள் வைத்து தேவை இல்லாததை எல்லாம் ஊகிப்பார்கள். நம் எதிரிகளின் ஒற்றர்கள் நம்மை வேவு பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாம் செய்யும் எதுவும் எவருக்கும் தெரியக்கூடாது”
சர்வாங்யா சொல்ல அங்கே இருந்த மற்ற பறவைகள் வெளியில் போனது. ராஜாவும் மந்திரியும் மட்டும் இருந்தார்கள்.
“அரசே யாரோ இந்த முட்டாள் கொக்கை இப்படிப் பேசச்சொல்லிக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். என்னால் அதை நிச்சயமாகச் சொல்ல முடியும். இப்படி ஒரு போர் சூழ்நிலையை உருவாக்கினால் அதை உபயோகித்து நாட்டில் குழப்பத்தை உண்டாக்க முயல்கிறார்கள். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். ஊரில் உள்ள எல்லாருக்கும் நோய் வந்தால் யாருக்கு லாபம்? மருத்துவருக்குத்தான்”.
“அதுபோலத்தான் புத்திசாலித்தனமான சுயநலவாதிகள் நாட்டில் நிலவும் குழப்பத்தை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார்கள்.”
சர்வாங்கயா சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஹிரண்யகர்ப்பா ” நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதைப் பற்றிப் பேச இது நேரமில்லை. அடுத்து என்ன செய்யவேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டும்.” சொல்ல
சர்வாங்யவும் “அதுவும் சரிதான் ராஜா! போருக்குத் தயார் செய்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளது. முதலில் ஒருவரை உளவு செய்ய எதிரியின் இடத்துக்கு அனுப்பவேண்டும். அந்த உளவாளியால் தான் நமக்கு எதிரிகளின் விவரங்களை அறியமுடியும். எதிரிப்படைகளின் பலத்தையும் அவர்களின் திட்டங்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.”
“அந்த உளவாளி ஒரு ராஜாவின் இடத்திலிருந்து எல்லாவற்றையும் பாரத்து புரிந்துகொள்ள வேண்டும். எதிரி நாட்டில் நடப்பதையும் நம் நாட்டில் நடப்பதையும் சேர்ந்து கவனிக்க வேண்டும். இரண்டு உளவாளிகளை அனுப்பினால் தான் நமக்கு நல்லது. அதில் ஒருவர் விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இரண்டாவது உளவாளி அந்த விவரங்களை நமக்குக் கொண்டு வந்து சேர்க்கவேண்டும்”.
“ஓரே ஒருவரை அனுப்பினால் எதிரியின் இடத்திலிருந்து திடீரென கிளம்பினால் எதிரிக்குச் சந்தேகம் அவர் வாய்ப்பிருக்கிறது. கடைத்தெருக்கள், கோவில்கள் இதைப் போல் உள்ள பொது இடங்களில் மக்கள் கூட,டம் அதிகமாக இருக்கும். நாம் அனுப்பும் உளவாளிகள் அந்த மக்களிடம் பேசி விவரங்களை அறிந்து நமக்கு அனுப்பலாம்.” இப்படிச் சொல்லும்போதே
“ஆஹா! எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது. யாரை உளவாளியாக அனுப்பினால் சரியாக இருக்கும் என்று புரிந்தது. இதற்கு தீர்க்கமுகாதான் சரியான உளவாளி. அந்த முட்டாள் கொக்கு அங்கே போய் பேசி நமக்கு விவரங்களை அனுப்பவேண்டும். என்ன அந்த கொக்கை நேர்மையாக இருக்க வற்புறுத்து வேண்டும்.”
“அந்த கொக்குடைய குடும்பத்தை நம் கண்காணிப்பில் வைத்துக்கொண்டால் இது நடக்கும். நாம் இப்படிச் செய்வது வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது. பரம ரகசியமாக இருக்கவேண்டும்.. யாரேனும் ஒருவருக்குத் தெரிந்ததோ உலகத்துக்கே தெரிந்து போய்விடும். எல்லா திட்டங்களும் ரகசியங்களும் நமக்குள்ளேயே இருக்க வேண்டும்” சொல்லி முடித்தது.
இதைக்கேட்ட ராஜா அன்னப்பறவை “சரியான பறவையைத் தான் உளவாளியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாய்” சொல்ல “ம்!! பார்ப்போம்! நமக்குத்தான் வெற்றி!” சர்வாங்கயா சொன்னது.
அந்த சமயத்தில் கதவை யாரோ தட்ட யார் என்று திரும்பிப் பார்த்தார்கள். ஒரு காவலாளி உள்ளே வந்து “மகாராஜா! ஜம்புத்தீவிலிருந்து ஒரு கிளி உங்களைப் பார்க்க வந்திருக்கிறது. ராஜா சித்ரவர்ணா அனுப்பியதாகச் சொல்கிறது” சொல்ல ஹிரண்யகர்ப்பா மந்திரியை அர்த்தத்தோடு பாரத்தது.
மந்திரி அந்த கிளியை விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கச் சொன்னது. காவலாளி அங்கிருந்து சென்றதும் ஹிரண்யகர்பா” போரைத் தவிர்க்க முடியாது இனிமேல்” கவலையோடு சொன்னது. சர்வாங்கயாவும் “ஆமாம் மகாராஜா! போர் என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்க வேண்டும். பிரச்சனை ஆரம்பிக்கும்போதே போரைத் தொடுக்க உங்களிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. ஒரு மந்திரி இது போல் அறிவுரை சொல்வது குற்றம் செய்வது போல் ஆகும். எதிரியை வேறு வழியில் வெல்ல முயற்சி செய்ய வேண்டும்”.
“போர் ஒன்று தான் வழி இல்லை. போரில் வெற்றி யாருக்கு என்று தொடக்கத்திலேயே சொல்ல முடியாது. நமக்கும் தோல்வி வரலாம். முதலில் சமாதானத்திற்கு முயல வேண்டும். எதிரிக்குப் பரிசுகளைக் கொடுக்கலாம். இல்லை எதிரியின் சேனைகளுக்குக் குழப்பத்தை உண்டாக்கலாம்.”
“எனக்குப் போரைப் பார்த்து பயமே இல்லை என்று வீராப்பாகப் பேசுபவர்களைக் கவனித்தால் சண்டையே போட்டிருக்க மாட்டார்கள். எதிரியுடன் சண்டைபோடாமல் தயங்குபவர்கள்தான் என்னமோ பெரிய வீரன் மாதிரி நடிப்பார்கள். போர் செய்திருந்தால் போரால் வரும் ஆபாத்தை அறிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பயம் இருக்காது.”
“நெம்புகோலை வைத்து பெரிய கற்களை எடுக்க முடியும்.அது போலப் புத்திசாலித்தனமாக நிறைய மோதல்களைத் தவிர்க்கலாம். இந்த முட்டாள் கொக்கால் நாம் போருக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். முதல் அடியாகப் போரை எதிர்கொள்ளக் கவனமாகத் திட்டமிட வேண்டும். போர் செய்வது கூட ஒரு வகையில் விவசாயம் செய்வது போலத் தான். முதல் நாள் விதைகளை விதைத்து மறுநாளே அறுவடை செய்ய முடியாது. நிறைய முயற்சியும் நீண்ட காலமும் தேவை அறுவடை செய்ய. அதுபோலத் தான் ஒரு ராஜா கவனமாகத் திட்டமிடவேண்டும்.”
“படைவீரர்களும் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும். அப்போது தான் போருக்குத் தயாராக முடியும். போரை எதிர்கொள்ள எல்லோருக்கும் தைரியம் இருக்காது. ஒரு வித பயம் இருக்கத்தான் செய்யும். தைரியம் உள்ள வீரர்களுக்குப் போரை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியும். நம் வீரர்களுக்குத் தைரியத்தை முதலில் கொடுக்க வேண்டும்”.
“நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது. நம்மிடம் பயமும் படபடப்பும் இருந்தால் தைரியத்தையும் இழப்போம். சரியாக எதிர்வினை ஆற்றவும் முடியாது. பனிக்கட்டி மலைகளை உடைத்துக்கொண்டு நீராக நிலப்பகுதிக்கு வரும். அது போல நாமும் பலம் வாய்ந்த சித்ரவர்ணாவின் சேனைகளை உடைத்து உள்ளே புகவேண்டும்.”
“நம்மைவிட பலம் வாய்ந்த எதிரியுடன் சண்டை போடுவது ஆபத்து நிறைந்தது. சண்டை போடாமல் தவிர்ப்பது நல்லது. தனி மனிதனாக யானையுடன் சண்டை போட்டால் மனிதனுக்குத் தான் தோல்வி வரும். ஆனால் நமக்கு இப்போது போரைத் தவிர வேறு வழியில்லை. சரியான சமயம் பாரத்து நாம் எதிரியைத் தாக்க வேண்டும்.”
“நமக்கும் பின்னடைவு வரும் அதைப் பாரத்து துவண்டு போகக்கூடாது. அந்த சமயத்தில் ஆமை எப்படி ஓட்டுக்குள் உடம்பை இழுத்துக் கொள்ளுமோ அதைப்போல அமைதியாய் இருந்து சரியான சமயம் பாரத்து நல்ல பாம்பு போல் சீறிப் பாய்ந்து எதிரிக்கு எவ்வளவு சேதம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும்.”
“ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தால் புல்லையும் அடித்துக்கொண்டு போகும். பெரிய மரத்தையும் விடாது. ஒரு படைத் தளபதியிடம் எதிரிப்படையை முழுவதும் அழிக்கும் திறமை இருக்கும். அந்த சித்ரவர்ணாவின் தூதுவன் கிளியை இந்த தீவில் சில நாட்கள் வைத்திருக்க வேண்டும். உடனே அனுப்ப வேண்டாம். நமக்குப் போருக்குத் தயாராகப் போதுமான காலம் கிடைக்கும். போருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்த பின் நம் பதிலைக் கிளியிடம் சொல்லி அனுப்பலாம்” சர்வாங்யா சொல்லி நிறுத்தியது.
ஹிரண்யகர்பா மந்திரி சொன்னதை உன்னிப்பாகக் கேட்டது. “ஆமாம! கிளியை சில நாட்களுக்குப் பின் அனுப்பினால் நமக்கும் கொஞ்சம் காலம் கிடைக்கும்” என்று ஆமோதித்தது.
இந்த பகுதி இதோடு முடிந்தது. இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!