முந்தைய பகுதியில் பொறையுடைமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். இந்த பகுதியில் மீதி உள்ள ஐந்து குறள்களை பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
பொறையுடைமை-2
- ஆறாவது குறள்.
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்”.
இதில்
‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்‘
இதன் பொருள்
தீங்கு செய்தோரைத் தண்டித்தவர்களுக்குக் கிடைப்பது அந்த ஒரு நாள் இன்பமே.
அடுத்து
‘பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்‘
இதன் பொருள்
பொறுத்துக் கொண்டவர்களுக்கோ உலகம் அழியும் வரையிலும் புகழ் இருக்கும்.
அதாவது
தீங்கு செய்தோரைத் தண்டித்தவர்களுக்குக் கிடைப்பது அந்த ஒரு நாள் இன்பமே. பொறுத்துக் கொண்டவர்களுக்கோ உலகம் அழியும் வரையிலும் புகழ் இருக்கும்.
பொறையுடைமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று“.
இதில்
‘திறனல்ல தற்பிறர் செய்யினும்‘
இதன் பொருள்
செய்யத் தகாத செயல்களைப் பிறர் தனக்குச் செய்தாலும்
அடுத்து
‘நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று‘
இதன் பொருள்
அதனால் வரும் துன்பத்திற்கு வருத்தப்பட்டு அறம் அல்லாத செயல்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.
அதாவது
செய்யத் தகாத செயல்களைப் பிறர் தனக்குச் செய்தாலும் அதனால் வரும் துன்பத்திற்கு வருத்தப்பட்டு அறம் அல்லாத செயல்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.
பொறையுடைமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.”
இதில்
‘மிகுதியான் மிக்கவை செய்தாரைத்‘
இதன் பொருள்
மனச் செருக்கால் தீங்கு செய்தவரை
அடுத்து
‘தாம்தம் தகுதியான் வென்று விடல்‘
இதன் பொருள்
தாம் தம் பொறுமையால் வென்றிட வேண்டும்.
அதாவது
மனச் செருக்கால் தீங்கு செய்தவரை தாம் தம் பொறுமையால் வென்றிட வேண்டும்.
பொறையுடைமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.”
இதில்
‘துறந்தாரின் தூய்மை உடையர்’
இதன் பொருள்
இல்வாழ்க்கையிலிருந்தாலும் துறந்தவர் போல் தூயவர் ஆவார்.
அடுத்து
‘இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்‘
இதன் பொருள்
நல்வழியிலிருந்து விலகியவர்களுடைய தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர்.
அதாவது
நல்வழியிலிருந்து விலகியவர்களுடைய தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர், இல்வாழ்க்கையிலிருந்தாலும் துறந்தவர் போல் தூயவர் ஆவார்.
பொறையுடைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.”
இதில்
‘உண்ணாது நோற்பார் பெரியர்‘
இதன் பொருள்
உண்ணாமல் நோன்பிருப்பவர் பெரியவர் ஆயினும்
அடுத்து
‘பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்‘
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர்களுக்கு அடுத்துத் தான் பெரியவராக மதிக்கப் படுவர்.
அதாவது
உண்ணாமல் நோன்பிருப்பவர் பெரியவர் ஆயினும் பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர்களுக்கு அடுத்துத் தான் பெரியவராக மதிக்கப் படுவர்.
பொறையுடைமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு பொறையுடைமை அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் அழுக்காறமை.
நன்றி! வணக்கம்!
.