திருக்குறளின் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.
வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும் அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.
பெரியாரைத் துணைக்கோடல் – 2
- ஆறாவது குறள்.
“தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்“.
இதில்
‘தக்கார் இனத்தனாய் தானொழுக வல்லானை’
இதன் பொருள்
தக்க பெரியவர்களைத் துணையாகக் கொண்டு அவர்கள் காட்டும் வழியில் நடப்பவனுக்கு.
அடுத்து
‘செற்றார் செயக்கிடந்தது இல்’
இதன் பொருள்
அவனுடைய எதிரிகள் செய்யக்கூடிய துன்பம் எதுவும் இல்லை.
அதாவது
தக்க பெரியவர்களைத் துணையாகக் கொண்டு அவர்கள் காட்டும் வழியில் நடப்பவனுக்கு அவனுடைய எதிரிகள் செய்யக்கூடிய துன்பம் எதுவும் இல்லை.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் ஆறாவதுகுறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“இடிக்கும் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்”.
இதில்
‘இடிக்கும் துணையாரை யாள்வரை’
இதன் பொருள்
தீயதைக் கண்டால் கடிந்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவர்களை.
அடுத்து
‘யாரே கெடுக்கும் தகைமை யவர்’
இதன் பொருள்
கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர்?
அதாவது
தீயதைக் கண்டால் கடிந்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர்?
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”.
இதில்
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’
இதன் பொருள்
தீயவைகளைக் கண்டபோது கண்டித்து சொல்லும் பெரியவர்களின் துணை இல்லாத அரசன்.
அடுத்து
‘கெடுப்பா ரிலானுங் கெடும்’
இதன் பொருள்
பகைவர் யாரும் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.
அதாவது
தீயவைகளைக் கண்டபோது கண்டித்து சொல்லும் பெரியவர்களின் துணை இல்லாத அரசன் பகைவர் யாரும் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“முதலிலார்ககு ஊதிய மில்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை”.
இதில்
‘முதலிலார்க்கு ஊதிய மில்லை’
இதன் பொருள்
முதல் பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லை.
அடுத்து
‘மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை’
இதன் பொருள்
அதுபோலத் தன்னைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாத அரசுக்கு நிலைபேறும் இல்லை.
அதாவது
முதல் பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லை. அதுபோலத் தன்னைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாத அரசுக்கு நிலைபேறும் இல்லை.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“பல்லார் பகைகொளலின்பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.”
இதில்
‘பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே’
இதன் பொருள்
பலரோடு பகைக் கொள்வதைக் காட்டிலும் பத்து மடங்கு தீமையானதாகும்.
அடுத்து
‘நல்லார் தொடர்கை விடல்’
இதன் பொருள்
நல்லவராகிய பெரியாரின் நட்பைப் பெறமால் கைவிடுவது.
அதாவது
நல்லவராகிய பெரியாரின் நட்பைப் பெறமால் கைவிடுவது, பலரோடு பகைக் கொள்வதைக் காட்டிலும் பத்து மடங்கு தீமையானதாகும்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பாரக்கப்போகும் அதிகாரம் சிற்றனஞ்சேராமை.
நன்றி! வணக்கம்!



