இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 26வது அதிகாரமான புலான்மறுத்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.
புலான்மறுத்தல் என்றால் புலால் உண்பதைத் தவிர்ப்பது. விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலால் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
புலான்மறுத்தல் 1
- முதல் குறள்.
“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்“.
இதில்
‘தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்’
இதன் பொருள்
தன் உடம்பை வளர்ப்பதற்காக மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன்
அடுத்து
‘எங்ஙனம் ஆளும் அருள்‘
இதன் பொருள்
எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?
அதாவது
தன் உடம்பை வளர்ப்பதற்காக மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?
புலான்மறுத்தல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு“.
இதில்
‘பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை‘
இதன் பொருள்
பொருளைக் காப்பாற்றாதவர்களுக்குப் பொருளுடையவர்களாக இருக்கும் சிறப்பு இல்லை.
அடுத்து
‘அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு‘
இதன் பொருள்
அதுபோல புலால் உண்பவர்களுக்கு அருளுடையவர்களாக இருப்பதற்கான சிறப்பு இல்லை.
அதாவது
பொருளைக் காப்பாற்றாதவர்களுக்குப் பொருளுடையவர்களாக இருக்கும் சிறப்பு இல்லை. அதுபோல புலால் உண்பவர்களுக்கு அருளுடையவர்களாக இருப்பதற்கான சிறப்பு இல்லை.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்“.
இதில்
‘படைகொண்டார் நெஞ்சம்போல்‘
இதன் பொருள்
கொலைக் கருவியைக் கையில் வைத்திருப்பவர்களின் மனம் கொலை செய்வதையே எண்ணும். இரக்கத்தை எண்ணாது.
அடுத்து
‘நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்‘
இதன் பொருள்
அதுபோல புலாலைச் சுவையோடு உண்பவரின் மனம் அறமாகிய அருளைப் போற்றாது.
அதாவது
கொலைக் கருவியைக் கையில் வைத்திருப்பவர்களின் மனம் கொலை செய்வதையே எண்ணும். இரக்கத்தை எண்ணாது. அதுபோல புலாலைச் சுவையோடு உண்பவரின் மனம் அறமாகிய அருளைப் போற்றாது.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்“.
இதில்
‘அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்‘
இதன் பொருள்
கொலை செய்யாமல் இருப்பதே அருளாகும். அருள் அல்லாதது எது என்றால் ஓர் உயிரைக் கொல்வது.
அடுத்து
‘பொருளல்ல தவ்வூன் தினல்‘
கொன்ற ஊனைத் தின்பது பாவமாகும்.
அதாவது
கொலை செய்யாமல் இருப்பதே அருளாகும். அருள் அல்லாதது எது என்றால் ஓர் உயிரைக் கொல்வது. கொன்ற ஊனைத் தின்பது பாவமாகும்.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு“.
இதில்
‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை‘
இதன் பொருள்
புலால் உண்ணாமை என்ற அறத்தினால்தான் உயிர் உடம்பில் இருக்கிறது.
அடுத்து
‘ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு’
இதன் பொருள்
அந்த உயிர் நிலை குலைய ஒருவன் புலால் உண்டால் அவனை விழுங்கிய நரகம் மீண்டும் அவனை வெளியே விடாது.
அதாவது
புலால் உண்ணாமை என்ற அறத்தினால்தான் உயிர் உடம்பில் இருக்கிறது. அந்த உயிர் நிலை குலைய ஒருவன் புலால் உண்டால் அவனை விழுங்கிய நரகம் மீண்டும் அவனை வெளியே விடாது.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த ஐந்தாவது குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!