ஹிதோபதேசம்
இந்த ஹிதோபதேசத் தொடரில் சித்ரவர்ணா ஒரு கிளியைக் கற்பூர தீவின் ராஜாவான ஹிரண்யகர்பாவிடம் தூது அனுப்பியதைப் போன பகுதியில் கேட்டிருப்பீர்கள்.
ராஜா ஹிரண்யகர்பாவிற்கும் மந்திரியான சர்வாங்யாவுக்கும் போரைத் தவிர்க்க முடியாது என்று புரிந்து போருக்கு எப்படி தயார் செய்யவேண்டும் என்று விவாதம் செய்கிறார்கள்.
ஒற்றர்களை அனுப்பி விவரங்களைச் சேகரித்து தைரியமாகப் போரைச் சந்திக்க வேண்டும் என்று மந்திரி விரிவாகச் சொன்னது. அந்த சமயத்தில் காவலாளி உள்ளே வந்து மேகவர்ணா என்ற காகம் ராஜாவைச் சந்திக்க வந்துள்ளது என்று சொல்ல மந்திரி ராஜாவுக்கு அறிமுகம் இல்லதாவார்களை நம்புவது நல்லது இல்லை என்று சொல்லி அதற்கு நீல நிறத்திலிருந்த ஒரு நரியின் கதையைச் சொன்னது. சர்வாங்யா சொன்ன அந்த நீல நிற நரியின் கதையைக் கேட்கலாம் வாங்க.
நீல நிற நரி
சர்வாங்யா அதன் அறிவுரைத் தொடர்ந்தது. “மகாராஜா! அடுத்து ஒரு கோட்டையைக் கட்ட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். போரில் கோட்டைக்குள்ளே இருந்து சண்டை போட்டால் எதிரிப் படையைத் தாக்குவது சுலபம். கோட்டையின் உச்சியிலிருந்து ஒரு போர் வீரனால் குறைந்தது நூறு வீரர்களைத் தாக்க முடியும்”.
“ஒரு நல்ல கோட்டை இல்லாமல் இருந்தால் போரில் வெல்வது கடினம். ஒரு ராஜாவுக்குக் கோட்டை இல்லை என்றால் படகிலிருந்து சுலபமாகக் கீழே விழுவது போல் போரில் தோற்க வாய்ப்பிருக்கிறது. கோட்டையைச் சுற்றி உயரமான சுவர்கள் இருந்தால் மிகவும் நல்லது. உயரமான கோபுரங்கள் இருக்க வேண்டும்”.
“நிறைய ஆயுதங்கள், தேவையான குடிநீர் இவற்றைச் சேகரித்து வைக்க வசதியும் வேண்டும். மலைகளைச் சுற்றியோ, கோட்டையைச் சுற்றி ஆறோ இல்லை பாலைவனத்திலோ கோட்டை இருக்க வேண்டும். நமது படை முழுவதும் அந்த கோட்டைக்குள் இருக்க இடம் இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் எதிரிப்படை கோட்டையைச் சுலபமாகத் தாக்க முடியாதவாறு இருக்க வேண்டும்.”
“போர் ஆரம்பமானால் படைகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், எரிபொருள் நீண்ட நாட்கள் தேவைப்படும். இவற்றைச் சேகரித்து வைக்க போதுமான இடம் இருக்க வேண்டும். உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் ரகசிய வழி இருக்க வேண்டும். அந்த ரகசிய வழி நமக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும்”.
ராஜா இடைமறித்து “ம்ம்! யார் இந்த மாதிரி கட்டுவாங்க? யாரைக் கேட்பது?” கேட்டது. இதை எல்லாம் சர்வாங்யா முன்னாடியே யோசனை செய்து வைத்திருந்தது.
“ராஜா! இதை ஒரு கட்டிடக் கலை நிபுணரால் தான் கட்டமுடியும். பல வருட அனுபவம் உள்ளவர் தான் நமக்குத் தேவை. அப்படி அனுபவம் அல்லாதவரிடம் கட்டும் வேலைக் கொடுத்தால் அந்த கோட்டை எதிரிகளின் தாக்குதலைத் தாங்காது”.
“எனக்குத் தெரிந்த ஒரு கொக்குக்குக் கோட்டைகளைக் கட்டுவதில் அதிக அனுபவம் உள்ளது. அவனோடு கோட்டைக் கட்டுவதைப் பற்றி இங்கே கூப்பிட்டுப் பேசலாம்” சர்வாங்யா அந்த கொக்கை வரச்சொன்னது.
கொக்கும் அங்கே வந்தது. ராஜாவுக்குரிய மரியாதையையும் செய்தது. ஹிரண்யகர்பா கொக்கிடம் ஒரு வலிமையான கோட்டையைக் கட்ட உத்தரவிட்டது. கொக்குக்கு அங்கிருந்த ஒரு பதட்டமான சூழ்நிலைப் புரிந்தது. “ராஜா! பக்கத்தில் கோட்டைக் கட்ட ஏதுவாக ஒரு தீவு இருக்கிறது. அங்கே கோட்டைக் கட்டுவதற்கு வேண்டிய சாமன்களை அனுப்பினால் நான் கோட்டையைக் கட்டி முடித்துவிடுவேன்”.
“முதலில் தானியங்களைச் சேகரிக்கக் குதிர்களைக் கட்ட வேண்டும். படைகளுக்கு உணவு வேண்டுமே. அடுத்து உப்பு உப்பில்லாத பண்டம் கைப்பையிலே….”. கொக்கு சொல்லிக்கொண்டே போனது. “சீக்கிரமாக வேலையை ஆரம்பி. போருக்கு முன் எல்லாம் தயாராகவேண்டும்” ராஜா கொக்கை துரிதப்படுத்தியது. கொக்கும் அதன் வேலையை ஆரம்பித்தது.
அப்போது மறுபடியும் காவலாளி உள்ள வந்து “மகாராஜா! மேகவர்ணா என்ற காக்கா ஒன்று உங்களைப் பார்க்க வேண்டும் என்று வெளியில் உள்ளது. உள்ளே கூட்டிக்கொண்டு வரட்டுமா?” கேட்க ராஜா மந்திரியைக் கேள்வியோடு பார்த்தது. “காக்கா பறந்து நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கும். அதற்கு ஜம்புத்தீவைப் பற்றியும் சித்ரவர்ணாவின் படை பலத்தைப் பற்றியும் தெரிந்திருக்கும். உள்ளே கூட்டிக்கொண்டு வா. அதற்கு என்ன எல்லாம் தெரியும் என்று கேட்கலாம்” ராஜா சொன்னது.
மந்திரி ராஜா அவசரப்படுகிறதோ என்ற நினைத்தது. “ராஜா! நீங்கள் சொல்வது எனக்கு சரி என்று தோன்றவில்லை” தயங்கிச் சொன்னது. “ராஜா! காக்கா நம் போல் நீரில் வாழும் பறவை இல்லை. காக்காவும் அதன் கூட்டமும் எதிரிப்படையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்” மந்திரி எச்சரித்தது.
“ஒரு நரி நீல நிறத்தை தன்மேல் பூசிக்கொண்டு நரிகளின் கூட்டத்திலிருந்து விலகி மற்ற விலங்குகளோடு பழகிய கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். கடைசியில் அதன் உயிர்தான் போனது” மந்திரி சொல்ல “நீல நிற நரியா? எனக்கு அதைப் பற்றித் தெரியாதே? சொல்!” அந்த கதையை ராஜா கேட்டது. மந்திரியும் நீல நிற நரியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தது.
ஒரு சமயம் நரி ஒன்று காட்டை விட்டுத் தவறி ஒரு ஊருக்குள் வந்து விட்டது. ஒரு விதமான ஆர்வத்தோடு அந்த ஊரைச் சுற்றிப் பார்த்தது. துணிகளுக்குச் சாயம் போடும் ஒரு சாயத் தொழிலாளி வீட்டின் தோட்டத்திற்கு வந்தது. அந்த தோட்டத்தில் பெரிய பெரிய அண்டாக்கள் போன்ற பாத்திரத்தில் சாயக்கலவைகள் இருந்தது. நரிக்கு ஆர்வம் தாங்கவில்லை. அந்த அண்டாக்களின் மேல் இருந்த பலகை மேல் நடந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று நோட்டம் விட்டது.
தடுமாறி டமால் என்று தலைகீழாக நீல நிற சாயம் இருந்த அண்டாவுக்குள் விழுந்துவிட்டது. மூச்சு முட்ட எப்படியாவது வெளியில் வரவேண்டும் என்று முயற்சி செய்தது. அண்டாவின் விளிம்பைத் தொட முடியவில்லை. முயற்சி செய்து செய்து ஓய்ந்து போய்விட்டது. அதன் முக்கு மட்டும் சாயக்கலவைக்கு மேல் இருந்ததால் மூச்சு விட முடிந்தது. ராத்திரி முழுவதும் அந்த சாயக்கலவையிலிருந்ததால் நரியின் தோல் நீல நிறமாக மாறிவிட்டது.
காலையில் அந்த சாயத் தொழிலாளி பலகைகள் உடைந்து கிடந்ததைப் பார்த்தான். யாராவது திருடன் வந்திருப்பானோ என்று சுற்றிப் பார்த்தான். ஒவ்வொரு அண்டாவுக்குள்ளும் எச்சரிக்கையாக பாரத்துக் கொண்டே வந்தான். நீல நிற அண்டாவுக்குள் நரியைப் பார்த்ததும் அவனுக்குத் தூக்குவாரி போட்டது.” நரியா? எப்படி இதற்குள் விழுந்து விட்டது? இப்போது என்ன செய்வது? உயிர் இருக்கா? இல்லையா?” மெதுவாக அந்த அண்டா பக்கத்தில் வந்து நரி மூச்சு விடும் சத்தம் கேட்கிறதா என்று உன்னிப்பாகக் கேட்டான்.
அந்த நரியும் யாரோ வரும் காலடி சத்தத்தைக் கேட்டு என்ன நடக்குமே என்ற பயத்தில் மூச்சையும் அடக்கி ரொம்ப மெதுவா மூச்சை விட்டது. அதனால் நரியின் மூச்சு விடும் சத்தத்தை அந்த சாயத்தொழிலாளி கேட்க முடியவில்லை.” நரி செத்துப்போச்சு. நல்லவேளை! அதை வெளியில் தூக்கி எரிந்து விடலாம்” ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல இருந்தது அவனுக்கு.
அந்த அண்டாவிலிருந்து அந்த நரியை இழுத்து வெளியில் புல் தரையில் தூக்கிப் போட்டான். செத்துப்போன நரியைத் தூக்கி காட்டுக்குள் போட ஆட்களைத் தேடி வெளியில் போனான். நரிக்கு அந்த ஜில் என்று இருந்த சாயத்தண்ணீரிலிருந்து வெளியில் வந்ததும் வெய்யில் அதன் மேல் பட்டது நல்ல இதமாக இருந்தது. பக்கத்தில் யாரும் இல்லை என்று தெரிந்ததும் காட்டுக்குள் ஒரே ஓட்டமாக ஓடிப்போய்விட்டது.
காட்டுக்குள்ள போனதும் அங்கே இருந்த செடிகளால் உடம்பை தேய்க்க ஆரம்பித்தது. “ஆ! எனக்கு எப்படி நீல நிறம் வந்தது? எப்படி நான் தான் என்று எல்லோருக்கும் தெரியும். ஆ! இதுவும் நல்லதுதான். நான் ஒரு சாதாரண நரி என்று யாருக்கும் தெரியாது. எல்லாரையும் மிரட்டி எனக்குப் பணியவைக்கமுடியும். வாவ்! எல்லாரும் பயந்து எனக்கு வேலை செய்வது எப்படி இருக்கும?”. ஒருவித எதிர்பார்ப்போடு நரி காட்டுக்குள் திரிய ஆரம்பித்தது.
நரிக் கூட்டங்கள் நீல நிற நரியைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தன.” நம்மைப் போல இருக்கிறது. ஆனால் நீல நிறமாக இருக்கிறதே? என்ன மாயம் இது!” ஆச்சரியமாக இருந்தது. நீல நிற நரியைப் பற்றி செய்தி பரவ எல்லா நரிகளும் கூட்டமாக வர ஆரம்பித்தன
நீல நிற நரி ஒரு சின்ன குன்றின் மேல் ஏறி ஒரு பார்வை விட்டது. “எல்லோரும் கேட்டுக்கோங்க! நான் தான் இந்த காட்டின் புது ராஜா! இந்த காட்டின் தேவதை என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. என் தோலின் நீல நிறம் தான் அதற்கு ஆதாரம். சில அபூர்வமான மூலிகைகளை என் மேல் தடவி என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இனிமேல் நான் சொல்வதுதான் சட்டம்” அகங்காரத்தோடு சொன்னது.
இதைக் கேட்டதும் எல்லா நரிகளும் நீல நிற நரியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கின. “ஓ! ராஜா! நீங்கள்தான் எங்களுக்கு இனிமேல் தலைவன். உங்கள் ஆணை எதுவோ அப்படியே செய்கிறோம்” ஒரே குரலில் சொன்னது. இப்படித்தான் நீல நிற நரி அந்த காட்டுக்கு ராஜாவானது. மெல்ல மெல்ல நீல நிற நரி மற்ற விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த அதிகாரம் அந்த நரிக்குக் கர்வத்தையும் திமிரையும் கொடுத்தது.
புலியும் சிங்கமும் நீல நிற நரிக்கு அடி பணிந்ததால் நரிக்கு தனக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வம் ரொம்ப வந்துவிட்டது. மற்ற நரிகளை அலட்சியம் செய்தது. மெது மெதுவா எல்லா நரிகளையும் துரத்திவிட்டது. தன் சொந்தங்களைப் பார்த்து நரிக்கு அவமானமாக இருந்தது. அவர்களோடு சேர்ந்து இருக்கவும் விரும்பவில்லை.
மற்ற நரிகள் “நமது கூட்டத்திலிருந்து ஒரு நரி இந்த காட்டுக்கு ராஜாவாக நாம் எப்படி உழைத்தோம்.தந்திரமாகப் புலி சிங்கத்தை ஏமாற்றி நீல நிற நரிக்கு அடிபணிய வைத்தோம். எப்படி நம்மைத் துரத்திவிட்டது பார்” புலம்பித் தீர்த்தன. ஒரு கிழட்டு நரி நரிகளின் புலம்பலைக் கேட்டது.” எனக்கு நன்றாகவே புரிகிறது உங்களின் ஏமாற்றத்தைக் கேட்டு. நீல நிற நரி செய்தது அநியாயம் தான்” என்றது.
நாங்கள் அவனுக்கு எத்தனை உதவிகள் செய்திருக்கிறோம் தெரியுமா? ஆபத்தான மிருகங்களிடம் இருந்து தந்திரமாக அவனைக் காப்பாற்றி இருக்கிறோம்.அந்த நீல நிறத்தால் அவனால் புலியையும் சிங்கத்தையும் ஏமாற்ற முடிகிறது. பாவம்! அவர்களுக்கு அவன் எங்களில் ஒருவன் என்று இன்னும் தெரியாது” நரிகள் வருத்தத்துடன் சொன்னது.
உடனே கிழ நரி “கொஞ்சம் யோசித்து பாருங்க! உங்களை இப்படித் துரத்தி விட்டது அதுக்குத்தான் ஆபத்தாய் முடியும். இன்னும் எத்தனை நாட்கள் இப்படிப் பொய்யாக அதனால் நடிக்கமுடியும். அதன் திமிரை அடக்க எனக்கு ஒரு வழி தெரியும்” சொன்னது. அவ்வளவுதான் எல்லா நரிகளும் அந்த திட்டம் என்ன என்று ஆவலாகக் கேட்டது.
“இன்று மாலையே அந்த நீல நிற நரி இருக்கும் இடத்திற்குப் போகலாம். சரியான சமயம் பார்த்து எல்லாரும் சேர்ந்து ஒரே குரலில் ஊளை இடலாம்.அந்த முட்டாளால் ஊளையிட முடியாமல் அடக்க முடியாது. தோலின் நிறத்தைத்தான் மாற்ற முடியும். அதோடு இயற்கை தன்மையை மாற்ற முடியாதே! அதன் ஊளை சத்தத்தைக்கேட்டு மற்ற விலங்குகளுக்கு அவர்கள் ஏமாற்றப் பட்டது தெரியவரும்.புலியும் சிங்கமும் அதனை சும்மா விடுமா?” திட்டத்தைச் சொன்னது.
அன்று மாலையே எல்லா நரிகளும் நீல நிற நரியின் இடத்துக்குப் போய்ச் சேர்ந்து ஊளை இட்டன.அதற்குப்பின் என்ன நடந்திருக்கும் என்று புரிந்திருக்குமே. நீல நிற நரியின் உயிர் பிரிந்தது. “ராஜா! எதிரிகள் எப்போதும் நம்முடைய ரகசியத்தையும் பலவீனத்தையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். இந்த காகம் நமது எதிரியின் ஆளாகக்கூட இருக்கலாம். நமக்கு அறிமுகமில்லாதவர்களை உள்ளே அனுமதித்தால் நமக்கு ஆபத்தாக முடியும்”. சர்வாங்யா எச்சரித்தது.
இந்த பகுதி இதோடு முடிந்தது. அடுத்த பகுதியில் அந்த காகம் போரில் என்ன செய்தது என்று பரக்கலாம்.
நன்றி! வணக்கம்!