போன பகுதியில் திருக்குறளின் பன்னிரண்டாவது அதிகாரமான நடுவுநிலைமையில் இருந்து முதல் ஐந்து குறள்களைப் பொருளோடு கேட்டீர்கள். இந்த பகுதியில் நடுவுநிலைமை அதிகாரத்தில் உள்ள ஆறிலிருந்து பத்துவரை உள்ள குறள்களைப் பொருளோடு பார்ப்போம்.
யாருக்கும் ஆதரவு காட்டாமல் நேர்மை நியாயத்திலிருந்து விலகாமல் எப்பொழுதும் ஒரே நிலைப்பாட்டோடு இருப்பதே நடுவுநிலைமை ஆகும்.
நடுவு நிலைமை 2
- ஆறாவது குறள்.
“கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.”
இதில்
“தன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.“
இதன் பொருள்
தன் நெஞ்சு நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின்
அடுத்து
“கெடுவல்யான் என்பது அறிக“
இதன் பொருள்
அந்த நினைப்பே அவன் கெடுவதற்கான முன்னறிவிப்பு ஆகும்.
அதாவ
தன் நெஞ்சு நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின் அந்த நினைப்பே அவன் கெடுவதற்கான முன்னறிவிப்பு ஆகும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.“
இதில்
“நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.“
இதன் பொருள்
நடுவுநிலையில் நின்று அறத்திலிருந்து வழுவாமல் வாழ்பவனின் வறுமை நிலையை
அடுத்து
“கெடுவாக வையாது உலகம்“
இதன் பொருள்
வறுமை என்று உலகம் பழிக்காது.
அதாவது
நடுவுநிலையில் நின்று அறத்திலிருந்து வழுவாமல் வாழ்பவனின் வறுமை நிலையை வறுமை என்று உலகம் பழிக்காது.
நடுவுநிலைமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.“
இதில்
“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்“
இதன் பொருள்
முன்பு சமமாக இருந்து பின் தன் மீது வைக்கப்பட்ட பாரத்தை எடைபோடும் தராசு போல்
அடுத்து
“அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.”
இதன் பொருள்
ஒரு பக்கம் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
அதாவது
முன்பு சமமாக இருந்து பின் தன் மீது வைக்கப்பட்ட பாரத்தை எடைபோடும் தராசு போல் ஒரு பக்கம் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.”
இதில்
“சொற்கோட்டம் இல்லது செப்பம்“
இதன் பொருள்
நடுவுநிலைமை என்பது சொல்லும் சொல்லில் கோணுதல் இல்லாமல் இருப்பதாகும்.
அடுத்து
“ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.”
இதன் பொருள்
மனதில் கோணுதல் இல்லாமலிருந்தால் அதுவும் நன்மையாகும்.
அதாவது
நடுவுநிலைமை என்பது சொல்லும் சொல்லில் கோணுதல் இல்லாமல் இருப்பதாகும். மனதில் கோணுதல் இல்லாமலிருந்தால் அதுவும் நன்மையாகும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.”
இதில்
“பேணிப் பிறவும் தமபோல் செயின்.”
இதன் பொருள்
பிறர் பொருளையும் தன் பொருள் போல் காத்து வாணிகம் செய்தால்
அடுத்து
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம்“
இதன் பொருள்
அதுவே வாணிகம் செய்வோர்க்கு நல்ல வாணிக முறை ஆகும்.
அதாவது
பிறர் பொருளையும் தன் பொருள் போல் காத்து வாணிகம் செய்தால் அதுவே வாணிகம் செய்வோர்க்கு நல்ல வாணிக முறை ஆகும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு நடுவுநிலைமை அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் அடக்கமுடைமை. அடக்கமுடைமை அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!