ஹிதோபதேசம்
இதற்கு முந்தைய பகுதியில் சித்ரவர்ணா மந்திரி கழுகு சொன்னதைக் கேட்காமல் படைகளுடன் போருக்குக் கிளம்பியது என்று பார்த்தோம். சித்ரவர்ணாவுக்கு முன்யோசனை இல்லாமல் அவசரப்பட்டு போருக்குப் போனதால் போரில் தோல்வி தான் கிடைத்தது. நிறைய வீரர்களையும் தளபதிகளையும் இழந்தது. இனிமேல் ஒன்றும் செய்யமுடியாது, திரும்பி அதன் நாட்டுக்கே போய்விடலாம் என்று நினைத்த போது மந்திரி மறுபடியும் போர் செய்து வெல்ல அறிவுரையும் கொடுத்தது. சித்ரவர்ணாவும் மந்திரி சொன்னதைத் தட்டாமல் ஹிரண்யகர்பாவின் கோட்டை கதவுகளை வீரர்களை விட்டு மூடச் சொன்னது. இனிமேல் என்ன நடக்கப் போகிறது என்று இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க.
தோல்வியும் துரோகமும்
ஹிரண்யகர்பாவின் மந்திரி சர்வாங்யா “மன்னா! நம் படைவீரர்களுக்கு நிறையச் சன்மானம் கொடுங்கள். அது அவர்களைப் பலமாகச் சண்டைபோட உற்சாகப்படுத்தும். சரியான நேரத்தில் கஞ்சத்தனம் இல்லாமல் தாராளமாகச் செலவு செய்யும் அரசனிடம் செல்வம் எப்போதும் இருக்கும்” சொன்னது.
இந்த இடத்தில் ஹிரண்யகர்பாவுக்கு சில சந்தேகங்கள் வந்தது. “அது எப்படி? செல்வம் எல்லாவற்றையும் இப்போதே செலவு செய்துவிட்டால் பின்பு அவசரத் தேவைக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடுமே?” கேட்டது.
“மகாராஜா! இந்த நேரத்தில் பணம் உதவாவிட்டால் அதனால் என்ன பயன்? அது போக இப்போது இருக்கும் ஆபத்தைவிட வேறு எது பெரிதாக இருக்கும்? உங்கள் பணியாளர்களிடம் வீரர்களுக்கு அவரவர் தகுதிகளுக்கு ஏற்றவாறு தங்கம் நவரத்தினங்கள் துணிமணிகளைக் கொடுக்கச் சொல்லுங்கள்”.
“இது போல சமயத்தில்தான் நீங்கள் தாராளமாகக் கொடுக்க வேண்டும். நீங்கள் அவர்களின் வீரத்தையும் தீரத்தையும் போற்றுவதால் அவர்களுக்கு உற்சாகம் அதிகமாகும். சித்ரவர்ணாவின் படையில் இப்போது நிறைய வீரர்கள் இல்லை. படை சிறியதாக இருக்கிறது என்ற அலட்சியம் வேண்டாம். படை சிறியதாக இருந்தாலும் இலக்கை அடையும் லட்சியம் இருந்தால் வெல்ல வாய்ப்புகள் அதிகம்”.
சர்வாங்யா சொல்லிக்கொண்டிருந்த போது காகம் மேகவர்ணா நடுவில் புகுந்து “மகாராஜா! நம் எதிரிகள் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டார்கள்.நான் அவர்களுடன் சண்டைபோட அங்கே போகிறேன். நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என் கடமை இது” என்று சொன்னது.
சர்வாங்யாவுக்கு காகம் திடீரென்று அங்கு வந்து இப்படிச் சொன்னது சந்தேகத்தை உண்டாக்கியது. “யாராலும் இந்த கோட்டைக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்க முடியாது. நாங்கள் எல்லாரும் தான் போருக்குப் போகவேண்டும்”.
“முதலைக்குத் தண்ணீருக்குள் இருக்கும் வரைதான் பலம் எல்லாம். தண்ணீரை விட்டு நிலத்திற்கு வந்துவிட்டால் அதை வெல்வது சுலபம். அதுபோலத்தான் சிங்கம் காட்டைவிட்டு வெளியில் வந்தால் நரிக்கு இருக்கும் பலம்தான் இருக்கும். நம் எதிரியை அதன் சொந்த நாட்டில் தோற்கடிப்பது கடினம”.
“ஆனால் அந்த எதிரியோ இங்கே வந்து நம் நாட்டில் சண்டை போடுகிறது. அதை வெல்வது சுலபம். அதுமட்டும் இல்லாமல் அரசே! நீங்கள் படை நடக்கும் இடத்திற்கு வந்து பார்வை இட வேண்டும். படைவீரர்களுக்குப் போர் நடக்கும் இடத்தில் அரசனைப் பார்க்காவிட்டால் அவர்கள் போர் செய்ய நாட்டம் இல்லாமல் போய்விடும் அரசன் மீது உள்ள மரியாதையும் குறையும். எஜமானனின் உத்தரவை நாய் ஒரு சிங்கம் போல் செய்து காட்டும். மன்னா நீங்கள் போர் செய்யும் இடத்துக்கு வந்தால் அவர்களுக்குத் தைரியமும் உற்சாகமும் கிடைக்கும்” சர்வாங்யா அன்ன ராஜாவுக்கு அறிவுரை சொன்னது
இதை எல்லாம் கேட்ட பின் ஹிரண்யகர்பா, சர்வாங்யா, மேகவர்ணா அங்கே இருந்த படைவீரர்களுடன் கோட்டை வாயிலுக்குச் சென்று ஆக்ரோஷமாகப் போர் செய்தார்கள். இரண்டு எதிரிப்படைகளும் சளைக்காமல் போர் செய்து கொண்டிருந்ததைப் பாரத்து சித்ரவர்ணாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அன்னப் பறவையின் படைகளைத் தோற்கடிப்பது சுலபமல்ல என்று நினைத்தது.
சித்ரவர்ணா மந்திரி கழுகைப் பார்த்து “இந்தப் போரில் வெல்ல முடியும் என்று செய்த சத்தியம் என்னவாயிற்று? ஏதாவது செய்து இந்தப் போரை முடிக்கவேண்டும். இந்தப் போரில் எப்படியாவது வெற்றி கிடக்க வேண்டும். என்ன செய்யப்போகிறீர்கள்?” கோபத்தில் பேசியது.
“அரசே! முதலில் எதிரியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அதற்குத் தகுந்தாற்போல் செயல் படவேண்டும். அந்த கோட்டையைத் தகர்க்க நமக்குச் சரியான சமயம் வேண்டும். அந்தக் கோட்டைக்குச் சரியான பாதுகாப்பு இல்லாமல் இருந்தாலோ அல்லது அது பலமாக இல்லாமல் இருந்தாலோ அதைத் தாக்குவது எளிது”.
“அதைக் காக்கும் படைத்தளபதிக்கு போதிய தகுதியில்லாமல் இருந்தாலோ அல்லது படைவீரர்களுக்குத் தைரியமில்லாமல் இருந்தாலோ அதுவும் உதவும். இது போல் எதுவுமே இங்கே நடக்கவில்லை.போரில் நேராக எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியால் போனால் தந்திரத்தாலும் துரோகத்தாலும் தான் வெல்ல முடியும்”.
“இந்த காரணத்தினால் நான் ஒற்றர்களை அங்கே அனுப்பி உள்ளேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அதைக் கட்டாயம் நான் செய்து காட்டுவேன். நீங்கள் இந்தப் போரின் முடிவுக்குக் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்”.கழுகு பதில் சொன்னது.
ஹிரண்யகர்பாவின் படைவீரர்கள் கோட்டையின் நான்கு வாசல்களிலும் போர் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் கோட்டைக்குள் வீரர்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. சர்வாங்யாவின் சந்தேகம் நியாயமானதுதான்.
“போர் நடந்து கொண்டிருந்த போது காகம் மேகவர்ணா யாருக்கும் தெரியாமல் அங்கே இருந்து கிளம்பிவிட்டது. மேகவர்ணாவும் அதனுடன் இருந்த காகங்களும் கோட்டைக்குள் நடமாட்டம் இல்லாதபோது கோட்டைய நெருப்பை வைத்துக் கொளுத்த ஆரம்பித்தன.
“ஐயோ! நெருப்பு! நெருப்பு! எதிரி கோட்டையை தாக்கிட்டாங்க. கோட்டை எரிகிறது” பதட்டத்துடன் படை வீரர்கள் சத்தம் போட்டார்கள். எங்கே பார்த்தாலும் நெருப்பும் புகையும். ஒரே குழப்பம். ஹிரண்யகர்பாவின் வீரர்கள் கோட்டையைச் சுற்றி இருந்த தண்ணீரில் குதித்துத் தப்பி ஓடிவிட்டார்கள்.
ஹிரண்யகர்பாவால் தப்பிப் போக முடியவில்லை. சித்ரவர்ணாவின் தளபதி சேவல் ஹிரண்யகர்பாவைத் தாக்கி படைவீரர்களிடம் இருந்து தனிமைப் படுத்தியது. சரஸ் கொக்கு அன்ன ராஜாவைக் காப்பாற்றப் பறந்து வந்தது.
ஆனால் ஹிரண்யகர்பா அதைத் தடுத்து” சரஸா! உடனே இங்கிருந்து போ. தண்ணீரில் இறங்கித் தப்பித்து விடு. இரண்டு பேரில் ஒருவராவது உயிர் பிழைக்கலாம் . சூடாமணியை ராஜாவாகத் தேர்ந்தெடுங்கள். சர்வாங்யா அதற்குத் துணையாக இருக்கும்” அதை அதட்டியது.
சரஸ் கொக்கோ அதன் கடமையைச் செய்தது. “அப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் அரசே! சூரியனும் சந்திரனும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அவரை நீங்கள்தான் அரசாளப் போகிறீர்கள். அதுமட்டும் இல்லை. நான் தான் உங்கள் படைத் தளபதி. உங்களையும் இந்த கோட்டையையும் காப்பது என் கடமை”.
“எதிரி என்னை மீறி இந்த கோட்டைக்குள் வரமுடியாது. உங்களைத் தவிர வேறு யாரின் கீழும் நான் வேலை செய்ய மாட்டேன். உங்களைப் போலப் பொறுமையான எல்லோரையும் ஆதரித்து நாட்டை ஆளும் அரசன் வேறு எங்கே இருப்பான்” கொக்கு சொன்னது. “ம்ம்! அதுபோலத்தான் நம்பிக்கையாக உண்மையாக உழைக்கும் உன்னைப் போலத் தளபதியும் கிடைப்பது அரிது” ஹிரண்யகர்பாவும் சொன்னது.
“என்னால் இறக்காமல் எப்பொழுதும் உயிருடன் வாழ முடியும் என்றால் நான் இங்கிருந்து தப்பிப் போகலாம். ஆனால் யாரும் மரணத்திலிருந்து தப்ப முடியாதே! உங்களை இங்கே விட்டுத் தப்பி ஓடுவது எனக்குத்தான் அவமானம், இழுக்கு. இந்த பூமியில் நாம் வாழ்க்கையோ சிறிது காலம்தான். மதிப்புடனும் மரியாதையோடும் வாழாத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை”.
“அரசன் ஆபத்திலிருந்தால் அந்த நாட்டுக்கு நல்லதல்ல. என் கடமை என்ன நடந்தாலும் உங்களைக் காப்பாற்றுவது தான். உங்கள் நாட்டிற்கு அமைதியும் செல்வமும் நீங்கள் இல்லாமல் கிடைக்காது. தேவலோக மருத்துவரான தன்வந்திரியாலும் கூட யாரையும் மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாது. இன்று நான் இறக்கவில்லை என்றால் நாளையோ வேறு ஒரு நாளோ நான் இறப்பேன்”.
“தாமரை மலர் சூரிய உதயத்தில் விரியும் சூரியன் மறையும் போது இதழ்களை மூடிக்கொள்ளும். உங்கள் வீரர்களும் உங்களை அதுபோல் தொடர்வார்கள். நீங்கள் இறந்தால் அவர்களும் இறப்பார்கள். நீங்கள் வென்றால் அவர்களும் வெல்வார்கள்” கொக்கும் ஹிரண்யகர்பாவும் இப்படிப் பேசிக்கொண்டிருந்த போது அங்க. போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
சித்ரவர்ணாவின் படை அவர்களை நெருங்கியது. சேவல் கொக்கை அதன் அலகால் பலமாகத் தாக்கியது. கொக்கும் திரும்பித் தாக்கி சேவலைப் பக்கத்திலிருந்த ஏரிக்குள் தள்ளியது. சேவலும் இறந்து போனது.
சேவல் இறந்து போனதும் சித்ரவர்ணாவின் படை இன்னும் பலமான போர் செய்ய ஆரம்பித்தது. அந்த சண்டையில் கொக்கை சித்ரவர்ணாவின் படை கொன்றுவிட்டது.
சித்ரவர்ணாவும் அதன் படைகளும் கோட்டைக்குள் நுழைந்து அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளை அடித்தார்கள். சித்ரவர்ணாவின் சபைப் புலவர் சித்ரவர்ணாவின் வீரத்தையும் தீரத்தையும் கவியாகப் புகழ்ந்தார்.
சித்ரவர்ணாவின் மந்திரி கழுகு சொன்னதைச் செய்து காட்டிவிட்டது. காகங்கள் கற்பூரத்தீவிற்கு துரோகம் செய்து ஹிரண்யகர்பாவை வெல்ல வழி செய்தது.வெற்றியுடன் சித்ரவர்ணா அதன் நாட்டிற்குத் திரும்பியது.
இந்தக் கதையைக் கேட்ட இளவரசர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். சரஸ் கொக்கின் தியாகம் அவர்களை மிகவும் கவர்ந்தது. “என்ன ஒரு தியாகம்! அந்த தளபதி சரஸ் கொக்கு செய்தது பாராட்டப் படவேண்டிய செயல். அதன் அரசனைக் காப்பாற்றப் போய் அதன் உயிர் போய்விட்டது” இளவரசர்கள் ஆச்சரியத்துடன் சொன்னார்கள்.
இதைக் கேட்ட விஷ்ணு சர்மா “அந்த சரஸ் கொக்கு போரில் வீரமரணம் அடைந்தது. அதற்குத் தேவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். வீரமரணம் அடைந்தவர்கள் தேவலோகத்தை அடைவார்கள். இளவரசர்களே! எப்படிப் போர் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் இல்லையா?” இளவரசர்களிடம் கேட்டார்.
இளவரசர்களும் “குருவே! நீங்கள் சொல்வது எங்களுக்கு நன்றாகவே புரிந்தது. போர் என்று வந்தால் அதை எப்படித் திட்டமிட்டு புத்தியுடனும் தைரியத்துடனும் நடத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டோம். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும்” என்று சொல்லி நன்றி சொன்னார்கள்.
விஷ்ணு சர்மாவும் “போர் செய்ய வேண்டிய சூழல் வராமல் இருக்கட்டும். உங்களுடைய எதிரிகள் தோற்று ஓடிப்போகட்டும். உங்களுக்கு நல்ல அறிவுரைகளும் கிடைக்கட்டும்” என்று ஆசீர்வாதம் செய்தார்.
இந்த கதையோடு ஹிதோபோதேசத்தின் போர் செய்தல் பகுதி முடிவடைந்தது.