இந்த பகுதியில் திருக்குறளின் தீவினையச்சம் அதிகாரத்தின் ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களைப் பொருளுடன் பார்க்கப்போகிறோம். தீய செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும். நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நம்மால் மாற்ற முடியாது. தீய செயல்களைத் தவிர்த்து அறநெறியில் சென்றால் நன்மை அடையலாம். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
தீவினையச்சம் 2
- ஆறாவது குறள்.
“தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்“.
இதில்
‘தீப்பால தான்பிறர்கண் செய்யற்க‘
இதன் பொருள்
பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.
அடுத்து
‘நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்‘
இதன் பொருள்
துன்பம் தரும் தீவினைகள் பின்பு தன்னை வருத்துவதை விரும்பாதவர்கள்.
அதாவது
துன்பம் தரும் தீவினைகள் பின்பு தன்னை வருத்துவதை விரும்பாதவர்கள், பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.
தீவினையச்சம் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்“.
இதில்
‘எனைப்பகை உற்றாரும் உய்வர்‘
இதன் பொருள்
எவ்வளவு கொடிய பகை இருந்தாலும் அதிலிருந்து தப்பி வாழ முடியும்.
அடுத்து
‘வினைப்பகை வீயாது பின்சென்று அடும்‘
இதன் பொருள்
ஆனால் தீய செயல்களால் வரும் பகை நீங்காமல் பின் சென்று கொல்லும்.
அதாவது
எவ்வளவு கொடிய பகை இருந்தாலும் அதிலிருந்து தப்பி வாழ முடியும். ஆனால் தீய செயல்களால் வரும் பகை நீங்காமல் பின் சென்று கொல்லும்.
தீவினையச்சம் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று“.
இதில்
‘தீயவை செய்தார் கெடுதல்‘
இதன் பொருள்
பிறர்க்குத் தீமை செய்பவர்கள் கேடு அடைதல்
அடுத்து
‘நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று‘
இதன் பொருள்
ஒருவனது நிழல் அவனை விடாது அடியில் தங்கியிருப்பது போலாகும்.
அதாவது
பிறர்க்குத் தீமை செய்பவர்கள் கேடு அடைதல், ஒருவனது நிழல் அவனை விடாது அடியில் தங்கியிருப்பது போலாகும்.
தீவினையச்சம் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்“.
இதில்
‘தன்னைத்தான் காதல னாயின்‘
இதன் பொருள்
ஒருவன் தன்னைத்தான் விரும்பி வாழ்பவனாக இருந்தால்
அடுத்து
‘எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்‘
இதன் பொருள்
பிறர்க்குச் சிறிய தீமை கூடச் செய்யாமல் இருக்க வேண்டும்.
அதாவது
ஒருவன் தன்னைத்தான் விரும்பி வாழ்பவனாக இருந்தால், பிறர்க்குச் சிறிய தீமை கூடச் செய்யாமல் இருக்க வேண்டும்.
தீவினையச்சம் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்“.
இதில்
‘அருங்கேடன் என்பது அறிக‘
இதன் பொருள்
அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
அடுத்து
‘மருங்கோடித் தீவினை செய்யான் எனின்‘
இதன் பொருள்
ஒருவன் தவறான வழியில் சென்று பிறர்க்குத் தீய செயல்களைச் செய்யாமல் இருந்தால்.
அதாவது
ஒருவன் தவறான வழியில் சென்று பிறர்க்குத் தீய செயல்களைச் செய்யாமல் இருந்தால், அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
தீவினையச்சம் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் ஒப்புரவறிதல்.
நன்றி! வணக்கம்!