இதுவரை திருக்குறளிலிருந்து 20 அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். திருக்குறளின் 21வது அதிகாரம் தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. தீய செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும். நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நம்மால் மாற்ற முடியாது.தீய செயல்களைத் தவிர்த்து அறநெறியில் சென்றால் நன்மை அடையலாம். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
தீவினையச்சம்-1
- முதல் குறள்.
"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு".
இதில்
'தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்'
இதன் பொருள்
தீவினை உடையவர் அஞ்ச மாட்டார். தீவினை இல்லாத பெரியோர்கள் மட்டுமே அஞ்சுவர்.
அடுத்து
'தீவினை என்னும் செருக்கு'
இதன் பொருள்
தீவினை என்ற செருக்குடைய மயக்கத்தைக் கண்டு.
அதாவது
தீவினை என்ற செருக்குடைய மயக்கத்தைக் கண்டு தீவினை உடையவர் அஞ்ச மாட்டார். தீவினை இல்லாத பெரியோர்கள் மட்டுமே அஞ்சுவர்.
தீவினையச்சம் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்“.
இதில்
‘தீயவை தீய பயத்தலால்“
இதன் பொருள்
தனக்கு நன்மை கிடைக்கும் என்று கருதி பிறர்க்குச் செய்யும் தீமைகள்.
அடுத்து
‘தீயவை தீயினும் அஞ்சப் படும்‘
இதன் பொருள்
தீமைகளையே தருவதால் அந்த தீய செயல்கள் தீயைவிட கொடியதாகக் கருதி விலக்க வேண்டும்.
அதாவது
தனக்கு நன்மை கிடைக்கும் என்று கருதி பிறர்க்குச் செய்யும் தீமைகள் தீமைகளையே தருவதால் அந்த தீய செயல்கள் தீயைவிட கொடியதாகக் கருதி விலக்க வேண்டும்.
தீவினையச்சம் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்“.
இதில்
‘அறிவினுள் எல்லாந் தலையென்ப‘
இதன் பொருள்
அறிவுகள் எல்லாவற்றிலும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர்.
அடுத்து
‘தீய செறுவார்க்கும் செய்யா விடல்‘
இதன் பொருள்
தமக்குத் துன்பம் செய்தவர்க்குத் திரும்பி தீவினை செய்யாமல் இருப்பதே.
அதாவது
தமக்குத் துன்பம் செய்தவர்க்குத் திரும்பி தீவினை செய்யாமல் இருப்பதே அறிவுகள் எல்லாவற்றிலும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர்.
தீவினையச்சம் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழம் சூழ்ந்தவன் கேடு“.
இதில்
‘மறந்தும் பிறன்கேடு சூழற்க‘
இதன் பொருள்
ஒருவன் மறந்தும் பிறர்க்குத் தீமை தரும் செயல்களை எண்ணக்கூடாது.
அடுத்து
‘சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு‘
இதன் பொருள்
அப்படி எண்ணினால் அறக்கடவுளே அவனுக்குத் தீமையைத் தர எண்ணும்.
அதாவது
ஒருவன் மறந்தும் பிறர்க்குத் தீமை தரும் செயல்களை எண்ணக்கூடாது. அப்படி எண்ணினால் அறக்கடவுளே அவனுக்குத் தீமையைத் தர எண்ணும்.
தீவினையச்சம் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து“.
இதில்
‘இலன்என்று தீயவை செய்யற்க‘
இதன் பொருள்
வறியவன் என்று எண்ணி அதனைப் போக்க ஒருவன் தீய செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும்.
அடுத்து
‘செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து‘
இதன் பொருள்
அப்படிச் செய்தால் மீண்டும் வறியவனாகி வருந்துவான்.
அதாவது
வறியவன் என்று எண்ணி அதனைப் போக்க ஒருவன் தீய செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மீண்டும் வறியவனாகி வருந்துவான்.
தீவினையச்சம் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்த பகுதியில் அடுத்து உள்ள ஐந்து குறள்களைப் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!