தவம் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம்.
தவம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் தவம் என்கிறார் வள்ளுவர்.
தவம் 2
- ஆறாவது குறள்.
“தவம்செய்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு“.
இதில்
‘தவம்செய்வார் தங்கருமம் செய்வார்‘
இதன் பொருள்
தவம் செய்பவர்களே தமக்குரிய கடமையைச் செய்வார்கள்.
அடுத்து
‘மற் றல்லார் அவம்செயவார் ஆசையுட் பட்டு’
இதன் பொருள்
மற்றவர்கள் ஆசை வலையில் அகப்பட்டு பயனில்லாதவற்றைச் செய்வார்கள்.
அதாவது
தவம் செய்பவர்களே தமக்குரிய கடமையைச் செய்வார்கள். மற்றவர்கள் ஆசை வலையில் அகப்பட்டு பயனில்லாதவற்றைச் செய்வார்கள்.
தவம் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு“.
இதில்
‘சுடச்சுடரும் பொன்போல்’
இதன் பொருள்
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல
அடுத்து
‘ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு‘
இதன் பொருள்
துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு தம்மோடு கலந்த பாவம் நீங்கி ஞானம் பெருகும்.
அதாவது
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு தம்மோடு கலந்த பாவம் நீங்கி ஞானம் பெருகும்.
தவம் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்“.
இதில்
‘தன்னுயிர் தான்அறப் பெற்றானை‘
இதன் பொருள்
தவத்தின் வலிமையால் தன் உயிர், தான் என்ற பற்று முற்றும் இல்லாதவனை
அடுத்து
‘ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்‘
இதன் பொருள்
மற்ற உயிர்கள் தொழும்.
அதாவது
தவத்தின் வலிமையால் தன் உயிர், தான் என்ற பற்று முற்றும் இல்லாதவனை மற்ற உயிர்கள் தொழும்.
தவம் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு“.
இதில்
‘கூற்றம் குதித்தலும் கைகூடும்‘
இதன் பொருள்
எமனை வெல்வதும் கைகூடும்.
அடுத்து
‘நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு‘
தவம் செய்வதால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு
அதாவது
தவம் செய்வதால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு எமனை வெல்வதும் கைகூடும்.
தவம் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்”.
இதில்
‘இலர்பல ராகிய காரணம்‘
இதன் பொருள்
உலகத்தில் ஆற்றல் இல்லாதவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம்
அடுத்து
‘நோற்பார் சிலர்பலர் நோலா தவர்‘
இதன் பொருள்
தவம் செய்பவர் சிலராகவும், அதைச் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
அதாவது
உலகத்தில் ஆற்றல் இல்லாதவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம் தவம் செய்பவர் சிலராகவும், அதைச் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
தவம் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பார்க்கப் போகும் அதிகாரம் கூடா ஒழுக்கம்.
நன்றி! வணக்கம்!