திருக்குறளின் கொல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். கொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. கொல்லாமை சிறந்த அறம் என்றும் வலியுறுத்துகிறது.
கொல்லாமை 2
- ஆறாவது குறள்.
“கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று“.
இதில்
‘கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்‘
இதன் விளக்கம்
கொல்லாமையை விரதமாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாள் மேல்
அடுத்து
‘செல்லாது உயிருண்ணும் கூற்று’
இதன் விளக்கம்
உயிரைப் பறிக்கும் யமனும் செல்ல மாட்டான்.
அதாவது
கொல்லாமையை விரதமாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாள் மேல், உயிரைப் பறிக்கும் யமனும் செல்ல மாட்டான்.
கொல்லாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை“.
இதில்
‘தன்னுயிர் நீப்பினும்’
இதன் விளக்கம்
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும்
அடுத்து
‘செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை’
இதன் விளக்கம்
அதைத் தடுப்பதற்காக இன்னொரு உயிரைக் கொல்லும் செயலை செய்யக்கூடாது.
அதாவது
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காக இன்னொரு உயிரைக் கொல்லும் செயலை செய்யக்கூடாது.
கொல்லாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை“.
இதில்
‘நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்‘
இதன் விளக்கம்
கொலை செய்வதால் நன்மை உண்டாகும், செல்வம் பெருகும் என்றாலும்
அடுத்து
‘சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை‘
இதன் விளக்கம்
சான்றோர்க்குக் கொலையால் வரும் செல்வம் இழிவானதாகும்.
அதாவது
கொலை செய்வதால் நன்மை உண்டாகும், செல்வம் பெருகும் என்றாலும் சான்றோர்க்குக் கொலையால் வரும் செல்வம் இழிவானதாகும்.
கொல்லாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து“.
இதில்
‘கொலைவினைய ராகிய மாக்கள்’
இதன் விளக்கம்
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள்
அடுத்து
‘புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து‘
இதன் பொருள்
கொலை செய்வதால் வரும் தீமையை அறியாதவர்களாயினும், அறிந்த பெரியவர்கள் அவர்களை இழிபிறவிகளாய் கருதுவர்.
அதாவது
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள், கொலை செய்வதால் வரும் தீமையை அறியாதவர்களாயினும், அறிந்த பெரியவர்கள் அவர்களை இழிபிறவிகளாய் கருதுவர்.
கொல்லாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்“.
இதில்
‘உயிர்உடம்பின் நீக்கியார் என்ப’
இதன் விளக்கம்
முற்பிறப்பில் கொலைகள் செய்து பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கியவர்கள் என்று அறிஞர்கள் கூறுவர்.
அடுத்து
‘செயிர்உடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்‘
இதன் விளக்கம்
நோய்கள் நிறைந்த உடம்புடன் வறுமையால் இழிந்த வாழ்க்கை வாழ்பவர்கள்.
அதாவது
நோய்கள் நிறைந்த உடம்புடன் வறுமையால் இழிந்த வாழ்க்கை வாழ்பவர்கள், முற்பிறப்பில் கொலைகள் செய்து பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கியவர்கள் என்று அறிஞர்கள் கூறுவர்.
கொல்லாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் நிலையாமை.
நன்றி! வணக்கம்!