போன பகுதியில் திருக்குறளின் கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க் முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் கூடா ஒழுக்கம் ஆகும்.
கூடா ஒழுக்கம் 2
- ஆறாவது குறள்.
“நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்“.
இதில்
‘நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து’
இதன் பொருள்
மனதில் பற்றுகளைத் துறக்காமல் பற்றற்றவர் போல் வஞ்சித்து வாழ்பவரைப் போல.
அடுத்து
‘வாழ்வாரின் வன்கணார் இல்‘
இதன் பொருள்
கொடியவர்கள் உலகத்தில் இல்லை.
அதாவது
மனதில் பற்றுகளைத் துறக்காமல் பற்றற்றவர் போல் வஞ்சித்து வாழ்பவரைப் போல கொடியவர்கள் உலகத்தில் இல்லை.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து“.
இதில்
‘புறங்குன்றி கண்டனைய ரேனும்‘
இதன் பொருள்
குன்றிமணியின் செம்மையுடைய நிறம் போல வெளித்தோற்றத்தில் நல்லவராயும்.
அடுத்து
‘அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து‘
அக்குன்றிமணியின் மூக்கினைப் போல மனம் இருண்டு இருப்பவரை உடையது உலகம்.
அதாவது
குன்றிமணியின் செம்மையுடைய நிறம் போல வெளித்தோற்றத்தில் நல்லவராயும் அக்குன்றிமணியின் மூக்கினைப் போல மனம் இருண்டு இருப்பவரை உடையது உலகம்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்“.
இதில்
‘மனத்தது மாசாக’
இதன் பொருள்
மனதில் மாசு இருக்க
அடுத்து
‘மாண்டார் நீராடி‘
இதன் பொருள்
தவத்தில் மாண்பு உடையவர்களாகப் பிறர்க்கு நீரில் மூழ்கிக் காட்டி.
அடுத்து
‘மறைந்தொழுகு மாந்தர் பலர்‘
இதன் பொருள்
மறைந்து வாழும் மக்கள் பலர் உள்ளனர்.
அதாவது
மனதில் மாசு இருக்கத் தவத்தில் மாண்பு உடையவர்களாகப் பிறர்க்கு நீரில் மூழ்கிக் காட்டி மறைந்து வாழும் மக்கள் பலர் உள்ளனர்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்“.
இதில்
‘கணைகொடிது யாழ்கோடு செவ்விது‘
இதன் பொருள்
அம்பு வடிவத்தில் நேராக இருந்தாலும் செயலால் கொடியது ஆகும். யாழ் வளைந்திருந்தாலும் செயலால் நல்லதாகும்.
அடுத்து
‘ஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்‘
அதுபோல மக்களைத் தோற்றத்தால் அறிந்து கொள்ளாமல் செயலால் அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது
அம்பு வடிவத்தில் நேராக இருந்தாலும் செயலால் கொடியது ஆகும். யாழ் வளைந்திருந்தாலும் செயலால் நல்லதாகும். அதுபோல மக்களைத் தோற்றத்தால் அறிந்து கொள்ளாமல் செயலால் அறிந்து கொள்ள வேண்டும்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்“.
இதில்
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்‘
தவம் செய்வதற்கென்று தலைமயிரை மழித்தலும் அல்லது சடை ஆக்குதலும் போன்ற வேடங்கள் தேவையில்லை.
அடுத்து
‘பழித்தது ஒழித்து விடின்‘
இதன் பொருள்
உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்ற தீயொழுக்கத்தை நீக்கி விட்டாலே போதும்.
அதாவது
தவம் செய்வதற்கென்று தலைமயிரை மழித்தலும் அல்லது சடை ஆக்குதலும் போன்ற வேடங்கள் தேவையில்லை. உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்ற தீயொழுக்கத்தை நீக்கி விட்டாலே போதும்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பார்க்கப் போகும் அதிகாரம் கள்ளாமை.
நன்றி! வணக்கம்!