இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 28வது அதிகாரமான
கூட ஒழுக்கம். ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கத்தோடு வாழ்வது உயர்வைத் தரும் என்று சொன்ன வள்ளுவர் இந்த அதிகாரத்தில் கூட ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.
பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் கூடா ஒழுக்கம் ஆகும்.
கூடா ஒழுக்கம் 1
- முதல் குறள்.
“வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்”.
இதில்
‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்‘
இதன் பொருள்
வஞ்ச மனம் உடையவனின் பொய்யான ஒழுக்கத்தைக் கண்டு.
அடுத்து
‘பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்‘
இதன் பொருள்
அவன் உடம்போடு கலந்து நிற்கும் ஐம்பூதங்களும் தம்முள்ளே நகைக்கும்.
அதாவது
வஞ்ச மனம் உடையவனின் பொய்யான ஒழுக்கத்தைக் கண்டு அவன் உடம்போடு கலந்து நிற்கும் ஐம்பூதங்களும் தம்முள்ளே நகைக்கும்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்“.
இதில்
‘வானுயர் தோற்றம் எவன்செய்யும்‘
இதன் பொருள்
ஒருவனுக்கு வான் போல் உயர்ந்த தவ வேடம் என்ன பயனைச் செய்யும்?
அடுத்து
‘தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்‘
குற்றம் என்று தெரிந்தும் அதனைச் செய்ய நெஞ்சம் தாழ்ந்து விடுமானால்.
அதாவது
குற்றம் என்று தெரிந்தும் அதனைச் செய்ய நெஞ்சம் தாழ்ந்து விடுமானால் ஒருவனுக்கு வான் போல் உயர்ந்த தவ வேடம் என்ன பயனைச் செய்யும்?
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று”
இதில்
‘வலியில் நிலைமையான் வல்லுருவம்‘
இதன் பொருள்
மனவலிமை இல்லாதவர்கள் துறவுக்கோலம் பூண்டு ஒழுக்கக் கேட்டினை செய்வது.
அடுத்து
‘பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று‘
இதன் பொருள்
பசுவானது புலித்தோலைப் போர்த்திக் கொண்டு அயலான் தோட்டத்தை மேய்வது போலாகும்.
அதாவது
மனவலிமை இல்லாதவர்கள் துறவுக்கோலம் பூண்டு ஒழுக்கக் கேட்டினை செய்வது பசுவானது புலித்தோலைப் போர்த்திக் கொண்டு அயலான் தோட்டத்தை மேய்வது போலாகும்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று“.
இதில்
‘தவமறைந்து அல்லவை செய்தல்‘
இதன் பொருள்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்தல்.
அடுத்து
‘புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று‘
இதன் பொருள்
வேடன் புதரில் மறைந்து கொண்டு வலை வீசிப் பறவைகளைப் பிடிப்பது போலாகும்.
அதாவது
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்தல் வேடன் புதரில் மறைந்து கொண்டு வலை வீசிப் பறவைகளைப் பிடிப்பது போலாகும்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்“.
இதில்
‘பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம்‘
இதன் பொருள்
பற்றுகளைத் துறந்தோம் என்று சொல்பவரின் மறைவான பொய்யொழுக்கம்
அடுத்து
‘எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்‘
இதன் பொருள்
ஏன் செய்தோம் ஏன் செய்தோம் என்று வருந்துமாறு பல துன்பங்களைத் தரும்.
அதாவது
பற்றுகளைத் துறந்தோம் என்று சொல்பவரின் மறைவான பொய்யொழுக்கம் ஏன் செய்தோம் ஏன் செய்தோம் என்று வருந்துமாறு பல துன்பங்களைத் தரும்.
கூடா ஒழுக்கம் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!