திருக்குறளின் குற்றங்கடிதல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம். குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம்
குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறரக்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.
குற்றங்கடிதல் – 2
- ஆறாவது குறள்.
“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு“.
இதில்
‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்’
இதன் பொருள்
தன்னுடைய குற்றத்தினை முன்னே கண்டு அதனை நீக்கிப் பின் அடுத்தவர் குற்றத்தைக் காணவல்லவராக இருந்தால்.
அடுத்து
‘என்குற்ற மாகும் இறைக்கு’
இதன் பொருள்
அந்தத் தலைவனுக்குக் குற்றம் எதுவும் வராது.
அதாவது
தன்னுடைய குற்றத்தினை முன்னே கண்டு அதனை நீக்கிப் பின் அடுத்தவர் குற்றத்தைக் காணவல்லவராக இருந்தால் அந்தத் தலைவனுக்குக் குற்றம் எதுவும் வராது.
குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்”.
இதில்
‘செயற்பால செய்யாது இவறியான் செல்வம்’
இதன் பொருள்
செல்வத்தினால் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யாமல் கருமியாய் பற்று வைத்திருப்பவனுடைய செல்வம்.
அடுத்து
‘உயற்பால தன்றிக் கெடும்’
இதன் பொருள்
பயன் இல்லாமல் அழிந்துவிடும்.
அதாவது
செல்வத்தினால் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யாமல் கருமியாய் பற்று வைத்திருப்பவனுடைய செல்வம் பயன் இல்லாமல் அழிந்துவிடும்.
குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று”.
இதில்
‘பற்றுள்ளம் என்னும் இவறன்மை‘
இதன் பொருள்
செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்டு கருமியாய் இருக்கும் தன்மை.
அடுத்து
‘எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று‘
இதன் பொருள்
குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
அதாவது
செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்டு கருமியாய் இருக்கும் தன்மை குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
குற்றங்கடிதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை“.
இதில்
‘வியவற்க எஞ்ஞான்றும் தன்னை’
இதன் பொருள்
எக்காலத்திலும் செருக்கினால் தன்னை மிக உயர்வாக எண்ணி மதிக்கக் கூடாது.
அடுத்து
‘நயவற்க நன்றி பயவா வினை‘
இதன் பொருள்
நன்மை தராத செயல்களை மனதாலும் விரும்பக் கூடாது.
அதாவது
எக்காலத்திலும் செருக்கினால் தன்னை மிக உயர்வாக எண்ணி மதிக்கக் கூடாது. நன்மை தராத செயல்களை மனதாலும் விரும்பக் கூடாது.
குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்”.
இதில்
‘காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்’
இதன் பொருள்
தான் விரும்பியவற்றை பிறர் அறியாதபடி அனுபவிக்க வல்லவனானால்.
அடுத்து
‘ஏதில ஏதிலார் நூல்’
இதன் பொருள்
அவனை அழிக்க நினைக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
அதாவது
தான் விரும்பியவற்றை பிறர் அறியாதபடி அனுபவிக்க வல்லவனானால், அவனை அழிக்க நினைக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
குற்றங்கடிதல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பாரக்கப்போகும அதிகாரம் பெரியாரைத் துணைக்கோடல்.
நன்றி! வணக்கம்!



