ஹிதோபதேசம்
இந்த ஹிதோபதேசக் கதைத் தொடரில் போன பகுதியில் சிங்கராஜா பிங்கலிகா நரிகளுக்குப் பதிலாக சஞ்ஜீவிகாவின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்ததென்று பார்த்தோம். இதனால் தமனக்காவிற்கு கோபம் அதிகமானது. தமனக்காதானே மாட்டைச் சிங்கத்திற்கு அறிமுகம் செய்தது? சிங்கம், மாடு இந்த இரண்டுபேரின் நட்பைப் பிரிக்க சபதம் செய்தது. கரட்டக்காவிற்கு அதில் சந்தேகம் இருந்தது. ஏன் என்றால் அந்த இரண்டு பேரும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். கரட்டுக்காவைச் சமாதானம் செய்த தமனக்கா எப்படி தந்திரமாக அந்த இரண்டு பேரையும் பிரிக்க முடியும் என்று உதாரணமாக காகம் பாம்பு கதையைச் சொன்னது.
காகமும் பாம்பும்
ஒரு காட்டில் இரண்டு காகங்கள் ஒரு மரத்தில் கூடு ஒன்றை அழகா கட்டி வாழ ஆரம்பித்தன. பெண் காகம் முட்டைகள் இட்டு அடைகாத்து குஞ்சுகளும் பொரித்தது. அந்த குஞ்சுகளுக்கு உணவளிக்க இரண்டு காகங்களும் உணவைத்தேடிப் பறந்து போகும். மரத்தடியில் உள்ள பொந்தில் ஒரு கருநாகம் இருந்ததை இரண்டு காகங்களும் பார்க்கவில்லை.
அந்த கூட்டிலிருந்த முட்டைகளின் வாசம் அந்த பாம்பை ஈர்த்தது. அந்த இரண்டு காகங்களும் குஞ்சு பொரிக்கும் வரை முட்டைகளைப் பாதுகாத்ததால் அந்த நாகம் கூட்டுக்குப் போகவில்லை. அந்த இரண்டு காகங்களும் சேர்ந்து வெளியில் செல்லக் காத்திருந்தது. அப்படி ஒரு நாள் இரண்டு காகங்களும் உணவைத் தேடிப் பறந்து போனபோது மெதுவாக மரத்தின் மேல் ஊர்ந்து போக ஆரம்பித்தது.
மேலே போனதும் ஒன்று விடாமல் சாப்பிட்டுவிட்டு ஒரு பெரிய ஏப்பம் விட்டுவிட்டு மறுபடியும் பொந்துக்குள் போய் மறைந்து கொண்டது. இரண்டு காகங்களும் புழுக்களுடன் திரும்பி வந்த போது கூட்டில் உள்ள குஞ்சுகளைக் காணவில்லை. என்ன நடந்ததென்று ஒன்றும் புரியவில்லை பாவம் அவர்களுக்கு!
கூடு எந்த விதமான சேதமும் இல்லாமல் அப்படியேதான் இருந்தது. சின்ன சிறகுகள் இரண்டு மூன்று இடத்தில் சிக்கியிருந்தது. அவ்வளவுதான். இரண்டு காகங்களும் சுத்தி சுத்தி பறந்து பாரத்தது. எங்கும் குஞ்சுகளைக் காணவில்லை. ஆனால் மரத்தடியில் பொந்திலிருந்து எட்டிப் பார்த்த நாகம் அவர்கள் கண்ணில் பட்டது. அப்போது புரிந்தது அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று.
எவ்வளவுதான் ஜாக்கிரதையாக காகம் குஞ்சு பொரித்துப் பாதுகாத்தாலும் அதை நாகம் விழுங்குவது விடாமல் நடந்தது. தாங்கமுடியாமல் பெண் காகம் ஆண் காகத்தைப் பாரத்து “ரொம்ப உயரமான மரத்தில் கூடு கட்டினாலும் இந்த நாகம் குஞ்சுகளை விழுங்காமல் விடாது. வேறு காட்டிக்குப் போய் பாதுகாப்பாகக் கூடு கட்டி அங்கேயே இருக்கலாம்” அழுதுகொண்டே சொன்னது.
ஆண் காகம் பெண் காகத்தைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொன்னது.” இவ்வளவு நாட்கள் அந்த நாகத்தை விட்டு வைத்ததே தவறு. அந்த நாகம் மாறவே மாறாது. எனக்கு அதை என்ன செய்யவேண்டும் என்று தெரியும். இனிமே நமது பக்கமே வராத மாதிரி இருக்க ஒரு வழி இருக்கிறது” ஆண் காகம் சொன்னது.
“அப்படியா! அந்த நாகம் ரொம்ப ஆபத்தானது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்”பெண் காகம் கவலையோடு சொன்னது.
“நானே நேராக அந்த நாகத்தோடு மோதமாட்டேன். அதற்குப் பதிலாகப் புத்தியை உபயோகப்படுத்தி தந்திரமாகத்தான் அதை ஒழிக்க வேண்டும். அந்த அற்பமான நாகம் சரியான முட்டாள். அதனால் சுலபமாக அதை நம் வலையில் சிக்க வைக்க முடியும். ஒரு வலிமைமிக்க சிங்கத்தை இப்படித்தான் தந்திரமாக ஒரு சின்ன முயல் ஒழித்தது.”
ஆண் காகம் சொல்ல “முயல் ஒன்று சிங்கத்தை ஒழித்ததா? முயலோ மிகச் சிறியது. எப்படி அதனால் சிங்கத்தை ஒழிக்க முடிந்தது?” பெண் காகம் கேள்விகளைக் கேட்டது. சிங்கம், முயல் கதையை ஆண் காகம் சொல்ல ஆரம்பித்தது.
சிங்கமும் முயலும்
மந்தரா என்ற மலையில் தூர்தந்தா என்ற மூர்க்கமான சிங்கம் வசித்து வந்தது. அதன் பலத்தால் எல்லா மிருகங்களையும் கொன்று குவித்தது. இப்படி கண்மூடித்தனமாக விலங்குகளைக் கொல்வது அங்க உள்ள விலங்குகளுக்குப் பெரிய பிரச்சனையாக மாறியது.
எல்லா மிருகங்களும் கூடி ஒரு முடிவு எடுத்தன. எல்லா மிருகங்களும் நேராக தூர்தந்தாவிடம் போனார்கள். சிங்கத்திற்குக் கோபம் வராதா மாதிரி பேசினார்கள்.
“மகாராஜா! நீங்கள் ஒரே சமயத்தில் நிறைய விலங்குகளைக் கொல்கிறீர்கள். இப்படியே தினமும் நீங்கள் செய்தால் ஒரு நாள் உங்களுக்கு உணவே கிடைக்காமல் போய்விடும். இந்தப் பிரச்சனைக்கு எங்களால் ஒரு தீர்வு கொடுக்க முடியும். நீங்களும் தினமும் வேட்டையாட வேண்டாம். எங்களில் ஒருவர் தினமும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வருகிறோம். அந்த ஒருவரை நீங்கள் சாப்பிடலாம்” என்று சொன்னார்கள்.
சிங்கத்திற்கு இந்த திட்டம் மிகவும் பிடித்துவிட்டது. இருக்கும் இடத்தைத் தேடி உணவு வருகிறதே என்று திருப்தியோடு அதற்கு ஒத்துக்கொண்டது. “அப்படியே செய்யுங்கள். எனக்கும் வசதியாக இருக்கும்” அதிகாரமாகவே சொன்னது.
அதன் பின் சிங்கத்தின் குகைக்கு வரும் விலங்கைக் கொன்று சாப்பிட ஆரம்பித்தது. வெளியில் போய் வேட்டையாடி உணவைச் சம்பாதிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் சுகமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு விலங்குகள் வரும். அப்படி ஒரு நாள் ஒரு வயசான முயலின் முறை வந்தது.
முயலுக்குச் சிங்கத்தின் குகைக்குப் போக விருப்பமில்லை.” நான் எது செய்தாலும் இந்த சிங்கம் என்னை விடாது. அதற்குக்கோபம் உண்டாகாத மாதிரி நடந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. என்ன செய்தாலும் என்னைக் கொன்று சாப்பிடத்தான் போகிறது. அதற்கு எதற்கு அவசர அவசரமாகப் போகவேண்டும். இன்றுதான் என்னுடைய கடைசி நாள். இந்த இடத்தை சுத்திப் பார்த்து இயற்கை பறவைகள் இந்த அழகை ரசித்துப் பார்த்து மெதுவா போகிறேன்.”
அதேமாதிரி பறவைகளுடைய சத்தத்தைக் கேட்டு ரசித்துக்கொண்டு சுத்தி இருந்த இயற்கை அழகைப் பார்த்துக்கொண்டே அங்கே இருந்த பழங்களை ருசித்துச் சாப்பிட்டு விட்டு மெதுவா தாமதமா சிங்கத்துடைய குகைக்குப் போனது. அசுரப் பசியிலிருந்த சிங்கம் குகையின் வாசலில் கோபமாக இப்படி அப்படி நடந்து கொண்டிருந்தது.
முயலைப் பார்த்ததும் தூர்தந்தா கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு “என்ன அலட்சியம்? நான் யார் தெரியுமா? நான் இந்த காட்டின் பலம் வாய்ந்த ராஜா தூர்தந்தா. உனக்கு ஏன் இவ்வளவு தாமதம்?” கோபத்தில் கத்தியது. சிங்கம் கத்தியதில் அந்த குகையே அதிர்ந்தது.
முயல் அதன் முன் பாதங்களைத் தூக்கி “மன்னிச்சிக்கோங்க மகாராஜா! நான் சொல்வதாகக் கொஞ்சம் கேளுங்கள் ராஜா! நான் காலையில் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன். உங்களுக்கு உணவாக நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆனால் வரும் வழியில் இன்னொரு சிங்கம் என்னைத் தடுத்தது மகாராஜா.”
“அந்த சிங்கம் கூட இந்த காட்டில்தான் இருக்கிறது. நான் உங்களுக்கு உணவாக உங்கள் குகைக்குப் போகவேண்டும் என்று சொல்லிக் கெஞ்சிப் பார்த்தேன். உங்களுக்குப் பசி வந்தால் உணவு இல்லாமல் போகக்கூடாதே! கடைசியில் அது உங்களிடம் சொல்லிவிட்டு மறுபடியும் அந்த சிங்கத்திடமே திரும்பி வரனும் அப்போதுதான் விடுவேனென்று சொன்னது. இப்போது கூட எனக்காக அங்கே அது காத்திருக்கிறது மகாராஜா!” சொன்னது.
அதைக்கேட்டதும் சிங்கத்துக்குக் கோபத்தில் முகம் சிவந்து போனது. “என்னுடைய காட்டில் வந்து இப்படிப் பேச யாருக்குத் தைரியம் இருக்கிறது? என்னை அந்த திருட்டு சிங்கத்திடம் கூட்டிக்கொண்டு போ. ஒரு கை பார்க்கிறேன்!” சிங்கம் கர்ஜித்தது.
அந்த முயல் குகைக்கு வரும் முன்னே வரும் வழியில் ஒரு கிணற்றைப் பார்த்து வைத்திருந்தது. சிங்கத்தை அந்த கிணற்றுக்குக் கூட்டிக்கொண்டு போனது. பயப்படுவது போல் நடித்து முயல் அந்த கிணற்றைக் காட்டி “மகாராஜா! அந்த சிங்கம் அந்த கிணற்றுக்குள் தான் இருக்கிறது. நான் எட்டிப் பாரத்தால் நீங்க என்னோடு வந்தது தெரிந்து போய்விடும். ஆபத்தில் முடிந்தாலும் முடியும். நீங்கள் எட்டிப் பாரத்தால் அது பயப்படலாம்.”
முயல் சொன்னதும் பற்களைக் கோபத்தில் நறநற என்று கடித்துக்கொண்டே எட்டிப் பாரத்தது. அந்த கிணற்றுத் தண்ணீரில் அதன் பிம்பம் தெரிந்தது. அந்த முட்டாள் சிங்கம் அது புரியாமல் அதைக் கொல்ல கிணற்றுக்குள் குதித்து விட்டது.
“உருவத்தில் பெரிதாகவும், பலமாகவும் இருந்தால் மற்றும் போதாது. புத்தியும். வேண்டும். பார்த்தியா! அந்த புத்திசாலி முயல் எப்படி தந்திரமா அந்த சிங்கத்தை ஒழித்தது.!அதே போல் தந்திரமாகத்தான் இந்த நாகத்தை ஒழிக்கவேண்டும்” ஆண் காகம் சொன்னது.
“கதையோ நன்றாகவே இருக்கிறது. ஆனால் உங்கள் திட்டம்தான் என்ன?” பெண் காகம் கேட்டது.
“தினமும் பக்கத்தில் உள்ள குளத்தில் இளவரசன் குளிக்க வருவதை நீ கவனிச்சிருப்பியே. கொஞ்ச நாட்களாக நான் இளவரசன் வரும் நேரத்தையும் செய்கைகளையும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். அவனுடைய உடைகளையும் நகைகளையும் கழட்டி படிமேல் வைத்துவிட்டுத் தான் குளத்தில் குளிக்க இறங்குவான்.இளவரசன் தண்ணீரில் இறங்கிக் குளிக்க ஆரம்பிக்கும் போது பறந்து அந்த படிக்கருகில் போய் அதில் இருக்கும் தங்கச் சங்கிலியை எடுத்துக்கோ.”
“இளவரசனுக்குப் பாதுகாப்பாக வந்தவர்கள் விலங்குகள் ஏதும் வருதானு வெளியில் கண்காணித்துக்கொண்டு இருப்பார்கள். உன்னை யாரும் கண்காணிக்க மாட்டார்கள். நீ அந்த சங்கிலியை அவர்கள் கண்ணில் படுவது போல எடுத்துக்கொண்டு பறந்து வந்து அந்த நாகம் இருக்கும் பொந்துக்குள் போடு. போட்டுவிட்டு மரத்தின் உச்சியில் உள்ள கிளையில் போய் உட்கார். மரத்தடியில் என்ன நடக்கிறது என்று பார்க்கக் கீழே வராதே” ஆண் காகம் திட்டத்தை விளக்கிச் சொன்னது.
ஆண் காகம் சொன்னது போலவே அந்த இளவரசனும் அந்த குளத்தில் குளிக்க வந்தான். உடைகளையும் நகைகளையும் கழட்டி படிமேல் வைத்துவிட்டுக் குளிக்கத் தண்ணீரில் இறங்கினான். பெண் காகம் பாதுகாவலர்கள் வெளியில் போன பின் பறந்து அந்த சங்கிலியை எடுத்துக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. அதைப் பார்த்த இளவரசன் “ஏய்” என்று கத்தினான்.
அவனுடைய சத்தத்தைக் கேட்ட காவலர்கள் ஓடிவந்து பார்த்த போது காகம் சங்கிலியுடன் பறந்து போய்க்கொண்டிருந்தது. தங்கச் சங்கிலி வெளிச்சத்தில் பளபளனு ஜொலித்தது. காகமும் அவர்கள் கண்ணுக்குத் தெரிவது போலப் பறந்தது. அந்த ஐந்து காவலர்களும் அந்த காகத்தைத் துரத்திக்கொண்டே வந்தார்கள்.
மரத்தின் பக்கத்தில் வந்ததும் அந்த காவலர்கள் கண்ணில் படும்படி அந்த தங்கச் சங்கிலியை நாகம் இருக்கும் பொந்துக்குள் போட்டுவிட்டு ஆண் காகம் சொன்ன மாதிரி மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்தது. மரத்தடியில் ஒரே சத்தம். “அதோ பார்! பாம்பு! அடி! கொல்லு!” காவலர்கள் அந்த பாம்பைக் கொன்று விட்டு அந்த சங்கிலியை எடுத்து இளவரசனிடம் கொடுக்க திரும்பிப் போனார்கள். காகங்களுக்கும் நாகத்தின் தொல்லை இல்லாமல் சந்தோஷமா அந்த கூட்டில் வசிக்க முடிந்தது.
தமனக்கா கதையை முடித்துவிட்டு சகோதரனை பாரத்தது. “இது போலத் தான் மாட்டை நேராகத் தாக்காமல் புத்தியை உபயோகித்து தந்திரமாகத் தாக்கவேண்டும்” தமனக்கா சொன்னது.
கரட்டக்கா “ம்ம்! இந்த கதையில் வருவது போல் நடந்தால் நமக்கு நல்லதுதான். நல்லதையே எதிர்பார்ப்போம்” நம்பிக்கையோடு சொன்னது.
இந்த பகுதி இதோடு முடிந்தது. அடுத்த பகுதியில் நரிகள் என்னதான் அப்படிச் செய்யப்போகிறது என்று பார்க்கலாமா!
மறக்காமல் வந்து கேளுங்கள்!
நன்றி! வணக்கம்!