போன பகுதியில் திருக்குறளின் கள்ளாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். கள்ளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
பிறர் பொருளை அவர்களுக்குத்தெரியாமல் வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும், துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
கள்ளாமை 2
- ஆறாவது குறள்.
“அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்“.
இதில்
‘அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார்‘
இதன் பொருள்
உயிர் முதலியவற்றை வரையறுக்கும் நெறியில் நின்று ஒழுகமாட்டார்.
அடுத்து
‘களவின்கண் கன்றிய காத லவர்‘
இதன் பொருள்
பிறர் பொருளைத் திருடும் பேராசை உடையவர்.
அதாவது
பிறர் பொருளைத் திருடும் பேராசை உடையவர், உயிர் முதலியவற்றை வரையறுக்கும் நெறியில் நின்று ஒழுகமாட்டார்.
கள்ளாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்“.
இதில்
‘களவென்னும் காரறி வாண்மை‘
இதன் பொருள்
களவு என்று சொல்லப்படும் இருண்ட அறிவு.
அடுத்து
‘அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்‘
இதன் பொருள்
அளவறிந்து வாழும் ஆற்றல் உடையவர்களிடம் இல்லை.
அதாவது
களவு என்று சொல்லப்படும் இருண்ட அறிவு, அளவறிந்து வாழும் ஆற்றல் உடையவர்களிடம் இல்லை.
கள்ளாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு“.
இதில்
‘அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்‘
இதன் பொருள்
அளவறிந்து வாழ்பவரின் நெஞ்சில் அறம் நிற்பது போல்.
அடுத்து
‘களவறிந்தார் நெஞ்சில் கரவு‘
களவையே பயின்றவர் நெஞ்சில் வஞ்சனையே இருக்கும்.
அதாவது
அளவறிந்து வாழ்பவரின் நெஞ்சில் அறம் நிற்பது போல், களவையே பயின்றவர் நெஞ்சில் வஞ்சனையே இருக்கும்.
கள்ளாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்“.
இதில்
‘அளவல்ல செய்தாங்கே வீவர்‘
இதன் பொருள்
அளவில்லாத செயல்களைச் செய்து அப்போதே அழிந்து போவர்.
அடுத்து
‘களவல்ல மற்றைய தேற்றா தவர்’
இதன் பொருள்
களவைத் தவிர வேறு நல்வழி தெரியாதவர்.
அதாவது
களவைத் தவிர வேறு நல்வழி தெரியாதவர், அளவில்லாத செயல்களைச் செய்து அப்போதே அழிந்து போவர்.
கள்ளாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு“.
இதில்
‘கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை‘
இதன் பொருள்
களவு செய்பவர்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும்.
அடுத்து
‘கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு‘
இதன்பொருள்
களவு செய்யாமல் வாழ்பவருக்கு தேவர் உலகம் தவறாது.
அதாவது
களவு செய்பவர்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும். களவு செய்யாமல் வாழ்பவருக்கு தேவர் உலகம் தவறாது.
கள்ளாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு கள்ளாமை அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் வாய்மை.
நன்றி! வணக்கம்!