இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் திருக்குறளின் 29வது அதிகாரமான கள்ளாமை.
கள்ளாமை என்றால் களவு செய்யாமல் இருப்பது. பிறர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது. திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும். துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
கள்ளாமை 1
- முதல் குறள்.
“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு“.
இதில்
‘எள்ளாமை வேண்டுவான் என்பான்‘
இதன் பொருள்
பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.
அடுத்து
‘எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு‘
இதன் பொருள்
எந்தப் பொருளையும். கள்ளத்தனமாக அடையும் எண்ணம் மனதில் புகாதபடி மனதைக் காக்க வேண்டும்.
அதாவது
பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன், எந்தப் பொருளையும். கள்ளத்தனமாக அடையும் எண்ணம் மனதில் புகாதபடி மனதைக் காக்க வேண்டும்.
கள்ளாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்“.
இதில்
‘உள்ளத்தால் உள்ளலும் தீதே‘
இதன் பொருள்
பிறர் பொருளை நெஞ்சினால் நினைப்பதுவும் பாவமாகும்.
அடுத்து
‘பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்‘
இதன் பொருள்
அதனால் பிறர் பொருளை அவர்க்குத் தெரியாமல் வஞ்சித்துக் கவர்வதை எண்ணாதிருக்க வேண்டும்.
அதாவது
பிறர் பொருளை நெஞ்சினால் நினைப்பதுவும் பாவமாகும். அதனால் பிறர் பொருளை அவர்க்குத் தெரியாமல் வஞ்சித்துக் கவர்வதை எண்ணாதிருக்க வேண்டும்.
கள்ளாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்”.
இதில்
‘களவினால் ஆகிய ஆக்கம்‘
இதன் பொருள்
களவினால் வரும் செல்வம்
அடுத்து
‘அளவிறந்து ஆவது போலக் கெடும்‘
இதன் பொருள்
வளர்வது போல் தோன்றி இறுதியில் அழிந்து போகும். துன்பங்களையும் கொடுத்து அறத்தினையும் அழிக்கும்.
அதாவது
களவினால் வரும் செல்வம் வளர்வது போல் தோன்றி இறுதியில் அழிந்து போகும். துன்பங்களையும் கொடுத்து அறத்தினையும் அழிக்கும்.
கள்ளாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்”.
இதில்
‘களவின்கண் கன்றிய காதல்’
இதன் பொருள்
பிறர் பொருளை வஞ்சித்துத் திருடும் ஆசை
அடுத்து
‘விளைவின்கண் வீயா விழுமம் தரும்‘
இதன் பொருள்
அப்போது இனிதாக இருந்தாலும் பயன் தரும்போது நீங்காத துன்பத்தினைத் தரும்.
அதாவது
பிறர் பொருளை வஞ்சித்துத் திருடும் ஆசை, அப்போது இனிதாக இருந்தாலும் பயன் தரும்போது நீங்காத துன்பத்தினைத் தரும்.
கள்ளாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்“.
இதில்
‘அருள்கருதி அன்புடைய ராதல்‘
இதன் பொருள்
அருளினைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராக நடத்தல்
அடுத்து
‘பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்‘
இதன் பொருள்
பிறர் பொருளைக் கவர எண்ணித் தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருப்பவர்களிடத்தில் இல்லை.
அதாவது
அருளினைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராக நடத்தல் பிறர் பொருளைக் கவர எண்ணித் தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருப்பவர்களிடத்தில் இல்லை.
கள்ளாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!