இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்கள். சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாத்தாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்தப் பகுதியிலும் நம்பிக்கையோடு வாழ முடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது
கல்வி -1
- முதல் குறள்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”
இதில்
‘கற்க கசடறக் கற்பவை‘
இதன் பொருள்
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றம் இல்லாமல் கற்க வேண்டும்.
அடுத்து
‘கற்றபின் நிற்க அதற்குத் தக‘
இதன் பொருள்
அப்படி கற்ற பிறகு அக்கல்விக்கு தகுந்தவாறு நெறியுடன் நடக்க வேண்டும்.
அதாவது
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றம் இல்லாமல் கற்க வேண்டும். அப்படி கற்ற பிறகு அக்கல்விக்கு தகுந்தவாறு நெறியுடன் நடக்க வேண்டும்.
கல்வி அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.”
இதில்
‘எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்‘
இதன் பொருள்
எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆக இரண்டையும் அறிந்தோர்.
அடுத்து
‘கண்ணென்ப வாழும் உயிர்க்கு‘
இதன் பொருள்
வாழும் மக்களுக்குக் கண் என்று சொல்லுவர்.
அதாவது
எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆக இரண்டையும் அறிந்தோர் வாழும் மக்களுக்குக் கண் என்று சொல்லுவர்.
கல்வி அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.”
இதில்
‘கண்ணுடையர் என்பவர் கற்றோர்‘
இதன் பொருள்
கண்ணுடையவர் என்று உயர்ந்து சொல்லப்படுபவர் கற்றவர்களே.
அடுத்து
‘முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்‘
இதன் பொருள்
கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் ஆவார்கள்.
அதாவது
கண்ணுடையவர் என்று உயர்ந்து சொல்லப்படுபவர் கற்றவர்களே. கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் ஆவார்கள்.
கல்வி அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.“
இதில்
‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே’
இதன் பொருள்
யாவரும் மகிழும்படி கூடிப்பழகி இனி எப்போது காண்போம் என்று நினைத்துப் பிரிகின்ற தன்மை உடையதே.
அடுத்து
‘புலவர் தொழில்‘
இதன் பொருள்
கற்றவர்களின் தொழிலாகும்.
அதாவது
யாவரும் மகிழும்படி கூடிப்பழகி இனி எப்போது காண்போம் என்று நினைத்துப் பிரிகின்ற தன்மை உடையதே கற்றவர்களின் தொழிலாகும்.
கல்வி அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.”
இதில்
‘உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்‘
இதன் பொருள்.
செல்வந்தர்கள் முன்னே ஏழைகள் நிற்பது போல ஆசிரியர்கள் முன் பணிந்து நின்று விரும்பிக் கல்வி கற்றோர்களே உயர்ந்தவர்.
அடுத்து
‘கடையரே கல்லா தவர்‘
அப்படி நின்று கல்வி கற்க வெட்கப்படுபவர்கள் இழிந்தோர் ஆவார்கள்.
அதாவது
செல்வந்தர்கள் முன்னே ஏழைகள் நிற்பது போல ஆசிரியர்கள் முன் பணிந்து நின்று விரும்பிக் கல்வி கற்றோர்களே உயர்ந்தவர். அப்படி நின்று கல்வி கற்க வெட்கப்படுபவர்கள் இழிந்தோர் ஆவார்கள்.
கல்வி அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. கல்வி அதிகாரத்தின் ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பாரப்போம்.
நன்றி! வணக்கம்!



