திருக்குறளின் பதினான்காவது அதிகாரமான ஒழுக்கமுடைமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
வாழ்க்கையில் ஒழுக்கம் இன்றியமையாதது. அது நம் பிறப்பிற்குப் பெருமை சேர்க்கும். ஒழுக்கம் ஒரு நல்ல வழிகாட்டி மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் உயர்வும் தரும். ஒழுக்கத்தை உயிரைவிடப் பெரிதாகக் கருத வேண்டும் என்று இந்த அதிகாரம் கூறுகிறது. ஒழுக்கமுடைமையால் ஏற்படும் உயர்வையும் ஒழுக்கம் இல்லாததால் ஏற்படும் இழிவையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.
ஒழுக்கமுடைமை 1
- முதல் குறள்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.“
இதில்
“ஒழுக்கம் விழுப்பம் தரலான்“
இதன் பொருள்
ஒழுக்கம் எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால்
அடுத்து
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்“
இதன் பொருள்
அந்த ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாக் காக்க வேண்டும்.
அதாவது
ஒழுக்கம் எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாக் காக்க வேண்டும்.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.“
இதில்
“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்“
இதன் பொருள்
ஒழுக்கத்தினை அழிவு வராமல் வருந்திக் காக்க வேண்டும்.
அடுத்து
“தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை“
இதன் பொருள்
பலவற்றையும் ஆராய்ந்து போற்றி தெரிந்து கொண்டாலும் துணையாக இருப்பது அந்த ஒழுக்கம் ஒன்றே ஆகும்.
அதாவது
ஒழுக்கத்தினை அழிவு வராமல் வருந்திக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றி தெரிந்து கொண்டாலும் துணையாக இருப்பது அந்த ஒழுக்கம் ஒன்றே ஆகும்.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.“
இதில்
“ஒழுக்கம் உடைமை குடிமை“
இதன் பொருள்
ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்
அடுத்து
“இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்“
அவ்வொழுக்கத்திலிருந்து தவறுதல் இழிந்த குடியில் பிறந்தது போலாகும்.
அதாவது
ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். அவ்வொழுக்கத்திலிருந்து தவறுதல் இழிந்த குடியில் பிறந்தது போலாகும்.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.”
இதில்
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும்“
இதன் பொருள்
தான் கற்ற வேதத்தை மறந்துபோனாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்.
அடுத்து
“பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்“
ஆனால் மறை ஓதுபவன் பிறப்புக்குரிய ஒழுக்கத்திலிருந்து தவறினால் குலத்தால் தாழ்வான்.
அதாவது
தான் கற்ற வேதத்தை மறந்துபோனாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் மறை ஓதுபவன் பிறப்புக்குரிய ஒழுக்கத்திலிருந்து தவறினால் குலத்தால் தாழ்வான்.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.”
இதில்
“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று“
இதன் பொருள்
பொறாமை உள்ளவனிடத்தில் செல்வம் இல்லாதது போல்
“இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு“
இதன் பொருள்
ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை.
அதாவது
பொறாமை உள்ளவனிடத்தில் செல்வம் இல்லாதது போல் ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது. இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!