ஊழியல் 1
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 38வது அதிகாரமான ஊழியலில் இருந்து முதல் ஐந்து குறள்கள். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்குக் காரணம் ஊழ்வினைதான். தெய்வம் வகுத்த வழியில் நடக்கும் செயல்கள் அவை.
- முதல் குறள்.
“ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி”.
இதில்
‘ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்‘
இதன் பொருள்
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் தோன்றினால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்.
அடுத்து
‘போகூழால் தோன்றும் மடி’
இதன் பொருள்
அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் சோம்பல் தோன்றும்.
அதாவது
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் தோன்றினால் சோர்வல்லாத முயற்சி உண்டாகும். அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் சோம்பல் தோன்றும்.
ஊழியல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை‘.
இதில்
‘பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்’
இதன் பொருள்
பொருளை இழப்பதற்குக் காரணமான கெடுக்கும் ஊழ் வந்தால் அது அறியாமையை உண்டாக்கும்.
அடுத்து
‘ஆகல்ஊழ் உற்றக் கடை‘
இதன் பொருள்
பொருள் ஆக்குவதற்குக் காரணமான ஊழ் தோன்றினால் அறிவை பெருக்கும்.
அதாவது
பொருளை இழப்பதற்குக் காரணமான கெடுக்கும் ஊழ் வந்தால் அது அறியாமையை உண்டாக்கும். பொருள் ஆக்குவதற்குக் காரணமான ஊழ் தோன்றினால் அறிவை பெருக்கும்.
ஊழியல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்”.
இதில்
‘நுண்ணிய நூல்பல கற்பினும்‘
இதன் பொருள்
ஒருவன் நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றிருந்தாலும்.
அடுத்து
‘மற்றும்தன் உண்மை யறிவே மிகும்’
இதன் பொருள்
அவனுடைய ஊழுக்கு ஏற்றவாறே அவனுடைய அறிவு மேம்பட்டு நிற்கும்.
அதாவது
ஒருவன் நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றிருந்தாலும், அவனுடைய ஊழுக்கு ஏற்றவாறே அவனுடைய அறிவு மேம்பட்டு நிற்கும்.
ஊழியல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு“.
இதில்
‘இருவேறு உலகத்து இயற்கை‘
இதன் பொருள்
உலகத்தில் ஊழினால் ஆகிய இயற்கை இரண்டு வகைப்படும்.
அடுத்து
‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’
இதன் பொருள்
செல்வம் உடையவராக இருப்பது ஒரு வகை. அறிவு உடையவராக இருப்பது மற்றொரு வகை.
அதாவது
உலகத்தில் ஊழினால் ஆகிய இயற்கை இரண்டு வகைப்படும். செல்வம் உடையவராக இருப்பது ஒரு வகை. அறிவு உடையவராக இருப்பது மற்றொரு வகை.
ஊழியல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு”.
இதில்
‘நல்லவை எல்லாஅந் தீயவாம்’
இதன் பொருள்
ஊழ் வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும்.
‘தீயவும் நல்லவாம்‘
இதன் பொருள்
தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
அடுத்து
‘செல்வம் செயற்கு‘
இதன் பொருள்
செல்வத்தைச் சேர்க்கும் முயற்சியில்.
அதாவது
செல்வத்தைச் சேர்க்கும் முயற்சியில், ஊழ் வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும், தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
ஊழியல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. ஊழியல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து அவரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!