இதுவரை திருக்குறளின் அறத்துப்பாலில் இருத்து 38 அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியில் பொருட்பாலிலிருந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம்.
திருக்குறளின் 39வது அதிகாரம் இறைமாட்சி.
இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவர்களைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடைமை, திறமைகள் பற்றிச் சொல்கிறது.
இறைமாட்சி – 1
- முதல் குறள்.
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு“.
இதில்
‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான்‘
இதன் விளக்கம்
படை, குடிமக்கள், செல்வம், அமைச்சர், நட்பு, காவல் என்று சொல்லக்கூடிய ஆறு அங்கங்களும் உடையவனே
அடுத்து
‘அரசருள் ஏறு’
இதன் விளக்கம்
அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.
அதாவது
படை, குடிமக்கள், செல்வம், அமைச்சர், நட்பு, காவல் என்று சொல்லக்கூடிய ஆறு அங்கங்களும் உடையவனே அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.
இறைமாட்சி அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”.
இதில்
‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை’
இதன் விளக்கம்
அஞ்சாமை, கொடை, அறிவு, ஊக்கம் இந்த நான்கு பண்புகளும் குறைவில்லாமல் இருத்தலே
அடுத்து
‘வேந்தர்க் கியல்பு‘
இதன் விளக்கம்
அரசனுக்கு இயல்பாகும்.
அதாவது
அஞ்சாமை, கொடை, அறிவு, ஊக்கம் இந்த நான்கு பண்புகளும் குறைவில்லாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
இறைமாட்சி அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது .
- மூன்றாவது குறள்.
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு”.
இதில்
‘தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா‘
இதன் விளக்கம்
காலம் தாழ்த்தாமல் விரைவாகச் செயல்படும் தன்மை, தக்க கல்வி, துணிவுடைமை இந்த மூன்று குணங்களும் எப்போதும் நீங்காமல் இருக்க வேண்டியவை.
அடுத்து
‘நிலன் ஆள்பவர்க்கு‘
இதன் விளக்கம்
நிலத்தை ஆளும் அரசனுக்கு
அதாவது
நிலத்தை ஆளும் அரசனுக்குக் காலம் தாழ்த்தாமல் விரைவாகச் செயல்படும் தன்மை, தக்க கல்வி, துணிவுடைமை இந்த மூன்று குணங்களும் எப்போதும் நீங்காமல் இருக்க வேண்டியவை.
இறைமாட்சி அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு”.
இதில்
‘அறனிழுக்காது‘
இதன் விளக்கம்
அறத்திலிருந்து விலகாமல்
அடுத்து
‘அல்லவை நீக்கி‘
அறமில்லாத செயல்களை நாட்டில் நடக்கமால் தடுத்து
அடுத்து
‘மறனிழுக்கா மானம் உடைய தரசு‘
இதன் விளக்கம்
வீரத்தில் குறையாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
அதாவது
அறத்திலிருந்து விலகாமல்,அறமில்லாத செயல்களை நாட்டில் நடக்கமால் தடுத்து, வீரத்தில் குறையாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
இறைமாட்சி அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு“.
இதில்
‘இயற்றலும்‘
இதன் விளக்கம்
பொருள் வரும் வழியினை மேன்மேலும் உருவாக்குவதும்.
அடுத்து
‘ஈட்டலும்’
இதன் விளக்கம்
அப்படி வந்த பொருள்களைச் சேர்ப்பதும்.
அடுத்து
‘காத்தலும்’
இதன் விளக்கம்
காப்பாற்றுவதும்.
அடுத்து
‘காத்த வகுத்தலும் வல்ல தரசு’
இதன் விளக்கம்
காத்தவற்றை தக்கபடி வகுத்துச் செலவிடுவதிலும் வல்லவனே அரசன்.
அதாவது
பொருள் வரும் வழியினை மேன்மேலும் உருவாக்குவதும், அப்படி வந்த பொருள்களைச் சேர்ப்பதும், காப்பாற்றுவதும், காத்தவற்றை தக்கபடி வகுத்துச் செலவிடுவதிலும் வல்லவனே அரசன்.
இறைமாட்சி அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. இறைமாட்சி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!