ஹிதோபதேசம்
போன வாரம் சொன்ன ஹிதோபதேசக் கதையில் சஞ்ஜீவிகா காலில் அடிபட்டதால் வர்த்தமனா அதைக் காட்டிலேயே விட்டுச் சென்றதைக் கேட்டீர்கள். அந்த காட்டில அது நல்ல சாப்பிட்டு ஓய்வெடுத்ததால் அதன் காலும் குணமானது. அந்த காட்டில் பிங்கலிகா என்ற சிங்கமும் இருந்தது. அந்த சிங்கம் தண்ணீர் குடிக்கப் போனபோது சஞ்ஜீவிகாவின் எக்காளத்தைக் கேட்டு அந்த காட்டில் ஏதோ அசுரன் புதுசா வந்திருக்கிறானோ என்று பயந்துவிட்டது. அந்த காட்டி்ல் காளைமாடு ஒன்று வந்திருக்கு என்று அதற்குத் தெரியவில்லை. கலக்கத்தோட தண்ணீர் குடிக்காமல் திரும்பிப் போய்விட்டது.
ஆப்பு பிடுங்கிய குரங்கு
சிங்கத்தின் மந்திரியின் பிள்ளைகளான கரட்டக்காவும், தமனக்காவும் சிங்கம் தண்ணீர் குடிக்காமலே திரும்பி வந்ததைப் பார்த்து ஏன் சிங்கம் தண்ணீர் குடிக்காமலே வந்ததென்று ஆச்சரியப்பட்டார்கள். தமனக்கா சிங்கத்தின் பிரச்சனை என்ன என்று கேட்டு அதற்கு உதவவேண்டும் என்று நினைத்தது. கரட்டாகாவோ சிங்கத்துடைய பிரச்சனையில் தலையிட வேண்டாமென்று சொன்னது. தலையிட்டால் அவர்கள் தான் நிறையப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்குமென்று எச்சரித்து ஆப்பு பிடுங்கிய குரங்கு கதையைச் சொன்னது. அந்த குரங்கும் ஆப்பும் கதை என்ன என்று இந்த பகுதியில் பார்க்கலாமா!
கரட்டகா ஆப்பு பிடுங்கிய குரங்கு கதையை ஆரம்பித்தது.
மகத நாட்டில் சுபதந்தா என்ற ஒருவர் சந்நியாசிகளுக்கு ஒரு மடம் கட்ட தீர்மானம் பண்ணி நிலம் வாங்கி கட்டிடம் கட்ட ஆட்களையும் கூட்டிக்கொண்டு வந்தார். கட்டிட வேலைகளும் ஆரம்பித்தது. வேலைக்கு நடுவில் ஆட்கள் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்கொள்வார்கள். அந்த கட்டிடத்துக்குத் தச்சு வேலை செய்யும் தச்சன் ஒருவன் ஒரு பெரிய மரக்கட்டையை இரண்டு துண்டுகளாக வெட்ட ஆரம்பித்து ஓர் ஆப்பை பாதி வெட்டிய இடத்தில் இரண்டு துண்டுகளும் சேராமல் இருக்க அடித்து வைத்துவிட்டு சாப்பிடப் போய்விட்டான்.
அந்த சமயம் பார்த்து குரங்கு கூட்டம் ஒன்று அந்த பக்கம் வந்தது. அந்த குரங்குகள் ஆர்வத்தில் உள்ள வந்து நோண்ட ஆரம்பித்தன. அதில் ஒரு குரங்கு ஆப்பு இருந்த மரக்கட்டையப் பார்த்து எல்லாம் தெரிந்த மாதிரி அதன் மேல் ஏறி விளையாட ஆரம்பித்தது. ஆப்பு இருந்த நடு பகுதியில் உட்கார்ந்து அந்த ஆப்பை அசைத்து, அசைத்து இழுத்து விளையாடியது. பின் விளைவு எப்படியிருக்குமென்று யோசிக்காமல் அந்த ஆப்பை அசைத்து இழுத்ததால் என்ன நடந்தது தெரியுமா? ஆப்பை வெளியில் இழுத்ததுமே கண்ணை மூடி திறப்பதற்குள் இரண்டு துண்டுகளும் சட்டுனு சேர்ந்துவிட்டது. அப்படிச் சேரும் போது குரங்கின் உடலுடைய கீழ்ப்பகுதி நடுவில் மாட்டி நசுங்கி அந்த குரங்கு செத்துப் போனது.
“இதற்குத் தான் பின் விளைவுகளைப் பத்தி கவலைப்படாமல் அடுத்தவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்கக்கூடாது” கரட்டக்கா தமனக்காவைப் பார்த்துச் சொன்னது. “சிங்கம் சாப்பிட்டால் என்ன? சாப்பிடலை என்றால் நமக்கு என்ன? தூங்கினால் என்ன? தூங்கவில்லை என்றால் என்ன? நமக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை“கரட்டக்கா தமனக்காவை எச்சரித்தது.
தமனக்காவோ வேறு மாதிரி நினைத்தது. “ஆங்! எஜமானருக்குச் சேவகம் செய்கிறது தா் நம் வேலை” எதிர்த்துச் சொன்னது. “அதற்குத்தான் மந்திரிகள் இருக்கிறார்களே!நாட்டில் நடப்பதை எல்லாம் அவர்கள்தானே பார்த்துக்கொள்கிறார்கள். ராஜாவுக்குத் தேவையானதைச் செய்வது மந்திரிகளுடைய வேலை. அவர்களே பண்ணட்டும். நம்மைப் பற்றி யாரும் கண்டுக்கமாட்டாங்க. மதிப்பே இல்லாத நாம் போய் ஏதாவது செய்தால் நம் தான் அவமானப்படுவோம். நம்முடைய வேலையை மட்டும் செய்தால் போதும்”.
“அநாவசியமா இன்னொருவர் வேலையைச் செய்தால் ஒரு கழுதைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும்! தெரியுமா உனக்கு?” கரட்டக்கா கேட்க “ம்ஹூம் தெரியாது எனக்கு! கழுதைக்கு நடந்தது என்ன?” தமனக்கா கேட்டது. “ம்கும்! கழுதைக்கு அடிதான் கிடைத்தது” கரட்டக்கா சொன்னதும் “ஐயோ !அடியா! ஏன்? எதற்கு? யார் அடிச்சா?” தமனக்கா கேள்விகளை அடுக்கியது. கண்களை உருட்டி மூச்சை இழுத்துவிட்டு கரட்டக்கா கதையை ஆரம்பித்தது.
கழுதையும் நாயும்
வாரணாசியில் கர்ப்பூரபட்டாகா என்கிற ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான். ஒரு நாள் இரவில் திருடன் அவனுடைய வீட்டுக்குள் நுழைந்துவிட்டான். கர்ப்பூரபட்டாக்கோவோ திருடன் வந்தது தெரியாமல் நல்லா குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய கழுதையை பின்னாடி உள்ள முற்றத்தில் கட்டிப்போட்டிருந்தான். அவனுடைய நாயோ கழுதைக்குப் பக்கத்தில் சோம்பல் முறித்துக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தது.
திருடன் உள்ள வந்ததை பற்றி அந்த நாய் கவலையே படவில்லை. கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்ன நீ !திருடன் உள்ள வந்துவிட்டான். நீ குரைத்து எஜமானனை எழுப்ப வேண்டாமா? அமைதியாக இருக்கிறாய்?” அழுத்தமாகவே கேட்டது.
“வந்துட்டியா நீ! நீ சொல்லித்தான் என்னுடைய வேலையை நான் செய்யனுமா? நான்தானே இத்தனை நாளும் நீ சொல்லாமல் காவல் காத்தேன்” கழுதையைப் பார்த்துக் கத்தியது. “ஆமா! இவர் என்னை இப்போ எல்லாம் திரும்பிக்கூட பார்க்கமாட்டேங்கறாரு. சாப்பாடு கூட சரியா கொடுப்பதில்லை. நம்மிடம் ஏதாவது வேலை வேண்டும் என்றால் மட்டும் நம்மைச் சரியா கவனிச்சுப்பாங்க. நான் அவருக்கு என்னையும் கவனிக்கனும் என்று ஞாபகப் படுத்தவேண்டும். இது தான் சரியான சமயம் அதற்கு” தலையை ஆட்டிக்கொண்டே சொன்னது.
“என்ன ஒரு நன்றி இல்லாத பிறவி நீ !யாருக்காவது உதவி தேவைப்படும் போது பேரம் பேசுவது தர்மம் இல்லை. தெரியாது உனக்கு? என்ன மாதிரி நண்பன் நீ?” கழுதை நாயைத் திட்டியது. நாயோ எதற்கும் கவலைப்படவில்லை. “ஆமா! என்னைச் சொல்ல வந்துட்டே! நம்மிடம் ஏதாவது வேலை வேண்டும் என்றால் மட்டும் நம்மைக் கவனிப்பார். இல்லை என்றால் திரும்பிக் கூட பார்க்க மாட்டார். அவரை ஒன்றும் சொல்ல மாட்டியே” நாய் அலுத்துக்கொண்டது.
கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. “நன்றியுள்ள விலங்குனு நீ எல்லாரையும் நம்ப வச்சிட்ட. எப்போது உதவவேண்டுமோ அப்போது உதவி செய்யவில்லை என்றால் அது வெறும் சுயநலம்தான். பரவாயில்லை! நான் பார்த்துக் கொள்கிறேன். நான் உன்னை மாதிரி இல்லை. எனக்குக் கொஞ்சம் நன்றி இருக்கிறது நான் அவரை இப்போ எழுப்பப்போகிறேன். என்னுடைய கடைமை அது. சாகும் போது எனக்கு எந்த குற்ற மனப்பான்மையும் இருக்காது. இப்ப பாரு” மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக்கொண்டு சத்தமாக கத்த ஆரம்பித்தது.
அந்த இரவின் அமைதி கழுதையுடைய சத்தத்தால் கலைந்து போச்சு. நல்ல தூக்கத்திலிருந்த கர்ப்பூரபட்டக்கா துள்ளி எழுந்தான். “என்ன சத்தம்! எங்கே இருந்து வருகிறது!” கண்களைக் கசக்கிக்கொண்டே முற்றத்துக்கு வந்தான். யாரையும் காணவில்லை. திருடனோ எல்லாற்றையும் விட்டுவிட்டு ஒரே ஓட்டமாக அங்கே இருந்து ஓடிவிட்டான். கர்ப்பூரபட்டாக்காவுக்கு கழுதை மேல் ஒரே கோபம். “எங்கே இந்த கழுதை” முற்றத்திலிருந்த கழுதையை தேடினான்.ஒரு கம்பை எடுத்தான். நாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கழுதையைக் கம்பால் ஓங்கி ஓங்கி அடித்தான்.
“இதற்குத்தான் அடுத்தவர்கள் விஷயத்தில் நாம் மூக்கை நுழைக்கக்கூடாது. புரிகிறதா! வேட்டையாடி ராஜாவுக்கு உணவு கொடுப்பதுதான் நம் வேலை. அதை மட்டும் செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்போம். அது போதும். இன்றைக்கு நிறையவே உணவு ராஜாவுக்கு இருக்கிறது. அந்த வேலையும் இன்று இல்லை. போய் ஓய்வெடு தமனக்கா” சொல்லிவிட்டு கரட்டக்கா காலை நீட்டி படுத்துக்கொண்டது.
“”நீ ஏன் இப்படி சொல்றேனு எனக்குத் தெரியும். ராஜா சாப்பிட்டபின் இருக்கும் மீதி உணவுக்குத்தானே நீ அவருக்குச் சேவை செய்கிறாய். வெக்கமா இல்லை உனக்கு?” தமனக்கா கேட்க “ஏன் எல்லாரும்தானே சாப்பிடவேண்டும். இதில் என்ன இருக்கிறது? சுயமரியாதைதான் முக்கியம் . பணம் கொடுத்தால் யார் தான் வேலை செய்யமாட்டார்கள்? சிலர் நிறையப் பணம்கூட கேட்பார்கள். ஆனால் சிலரை எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. சுயமரியாதை, நேர்மை அவர்களிடம் இருக்கும்” கரட்டக்கா திரும்பிச் சொன்னது.
இப்போது தமனக்கா ஆரம்பித்தது. “கொஞ்சம் சதையோடு எலும்புத்துண்டை நாயிடம் கொடுத்தால், அது எல்லாவற்றையும் கடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனால் சிங்கம் என்ன பண்ணும்? அதை நரிக்குக் கொடுத்துவிட்டு பெரிய யானையைத் தாக்கா காத்திருக்கும். சகோதரா! நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும். சாப்பாடு மட்டும் வாழ்க்கையில்லை.அந்த வாழ்க்கையில் எந்த ஒரு பயனும் இல்லை”.
இதைக் கேட்ட கரட்டக்கா “தமனக்கா! நாமோ சாதாரண வேலக்காரங்க. என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் செஞ்சா போதும். நமக்கு எந்த சக்தியும் கிடையாது. இப்படி சாதிக்கவேண்டும் அப்படி வாழவேண்டும் இதெல்லாம் நமக்கு உதவாது. இதெல்லாம் நமக்குச் சரிவராது” சொன்னது.
“என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று சாதாரணமா இருப்பவன் நாளைக்கு ராஜாவாக முடியும். எப்போது வேண்டும் என்றாலும் மாற்றம் வரும்.சும்மா இருந்தால் மாற்றம் வராது மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்கவேண்டும். மலைக்கு மேல் கல்லை எடுத்துக்கொண்டு போவது ரொம்ப கஷ்டம். அதுவே கல்லை மலைமேல் இருந்து நொடியில் உருட்டி விடமுடியும். வாழ்க்கையில் மேலே போவதும் இல்லை கீழே விழுவதும் நம் கையில்தான் இருக்கிறது. நாம் இன்று செய்வதைப் பொறுத்துத்தான் நாளைய முடிவு இருக்கும்” தமனக்கா அறிவுரை சொன்னது.
“சரி! நீ என்னதான் சொல்ல வருகிறாய்?” தமனக்கா கரட்டக்காவிடம் கேட்க “இதோ பார்! ராஜா தண்ணீர் குடிக்கப் போன இடத்தில் என்னமோ நடந்திருக்கு! ராஜாவுக்கு எதையோ பார்த்தோ கேட்டோ பயம் வந்திருக்கு! அதனால்தான் குகையைவிட்டு வெளியில் வராமல் மறைஞ்சிருக்கு”.
இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் மறக்காமல் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!