ஹிதோபதேசம்
இதற்கு முந்தைய பகுதியில் தமனக்கா தந்திரமாகப் பேசினதால் சிங்கராஜா பிங்கலகாவின் மனதில் சஞ்ஜீவிகா மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது. இந்த சமயத்தில் தமனக்கா ஆட்காட்டிப் பறவை எப்படி கடலை அடக்கியது என்று ஒரு கதையும் சொன்னது. அந்த கதை என்ன என்று இப்போது பார்க்கலாமா!
ஆட்காட்டிப் பறவைகளும் கடலும்
தெற்கில் இருக்கும் கடற்கரையில் இரண்டு ஆட்காட்டிப் பறவைகள் வசித்தன. பெண் பறவை முட்டைகள் இடும் நேரம் வந்ததால் ஒரு கூட்டைக் கட்ட இடத்தைத் தேடின. பெண் பறவை ஆண் பறவையிடம் சொன்னது “நேரம் நெருங்குகிறது. ஒரு நல்ல இடமா பார்த்து கூட்டைக் கட்டவேண்டும்.” உடனே ஆண் பறவை சொன்னது “எங்கேயும் தேடவேண்டாம். நல்ல இடம் கிடைத்து விட்டது” என்று.
பெண் பறவையோ ஒன்றும் புரியாமல் சுற்றிப் பார்த்தது. கடற்கரையில் மண்ணும், அதைத் தொட்டுப் பார்க்கும் கடல் அலைகளைத் தவிர எதுவும் இல்லை அங்கே.
“எங்கே இருக்கிறது அந்த இடம்? என் கண்ணுக்குத் தெரியலையே?” பெண் பறவை கேட்டது. “இந்த இடத்தில்தானே எப்போதும் இருக்கிறோம். இந்த கடற்கரையிலேயே கூடு கட்டினால் என்ன?” ஆண் பறவை சொல்லப் பெண் பறவை “ஐயோ! இங்கேயா! அந்த அலைகள் பெரிதாக வந்தால் கூட்டை அழித்துவிடாதா” பயத்தோடு கேட்டது.
“ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்மேல் நம்பிக்கை இல்லையா? என்னால் உங்கள் எல்லாரையும் பாதுகாப்பாக வைக்க முடியும். அந்த அலைகள் நம் பக்கம் வராமல் செய்ய என்னால் முடியும். தைரியமாக இரு” ஆண் பறவை ஆறுதலாகச் சொன்னது.
“தைரியமும், தன்னை அறியும் அறிவும் இருந்தால் வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்காது. அவர்கள் எடுக்கும் முடிவுகளும் சரியாக இருக்கும்.எப்போது, என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வளவு தைரியமாகத் தெளிவாகச் சொல்வதால் இங்கேயே கூடு கட்டலாம்” பெண் பறவை ஒத்துக்கொண்டது. ஓர் ஓரமான இடத்தில் பெண் பறவை முட்டைகளை இட்டது.
இந்த பறவைகள் பேசியதைக் கேட்ட அந்த கடல் “உண்மையாகவே இந்த ஆட்காட்டிப் பறவை என்னைவிடப் பலமானதா? அதையும் பார்க்கலாமே?” சொல்லிவிட்டு ஒரு பெரிய அலை அந்த கூட்டின் மேல் பாய்ந்தது. அலை ஓய்ந்தபின் அங்கே முட்டைகள் இல்லை. எல்லாம் கடலுக்குள் போய்விட்டது.
“என்னுடைய முட்டைகள் எங்கே?எல்லாம் அந்த கடல் எடுத்துக்கொண்டு கோய்விட்டதே” பெண் பறவை அழ ஆரம்பித்தது. ஆண் பறவை அதைச் சமாதானப் படுத்தி “கவலைப்படாதே! என்னால் அந்த முட்டைகளைத் திருப்பி எடுத்துக்கொண்டு வரமுடியும்” சொல்லிவிட்டு அதன் ராஜாவான கருடனைப் பார்க்கப் பறந்து போனது.
கருடனிடம் கடல் அவர்கள் முட்டைகளை அநியாயமா அலையால் அடித்து எடுத்துக்கொண்டு போனதைச் சொல்லி உதவி கேட்டது. பறவையின் சோகத்தைப் பார்த்து அதைத் தீர்க்க கருடன் பகவான் நாராயணனைப் பார்க்கப் போனது.
அந்த நாராயணன்தானே அந்த உலகத்தில் எல்லோரையும் காப்பாற்றுவது. கருடன் சொன்னதைக் கேட்ட எல்லாம் வல்ல நாராயணன் கடலை அந்த முட்டைகளை உடனே அந்த ஆட்காட்டிப் பறவையிடமே திருப்பி கொடுக்கும்படி உத்தரவு கொடுத்தார்.கடலும் நாராயணனுக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும். முட்டைகளை அந்த பறவைகளிடமே திரும்பிக் கொடுத்தது.
கதையை முடித்த தமனக்கா “உங்கள் இரண்டு பேரின் பலமும் பலவீனமும் தெரியாமல் யார் பலசாலியென்று சொல்ல முடியாது” என்று சொன்னது. “ஆமா! சஞ்ஜீவிகா என்னைத் தாக்க வருவதை எப்படித் தெரிந்துகொள்ள முடியும்” பிங்கலிகா கேட்டது.
“அது ரொம்ப சுலபம் ராஜா! சஞ்ஜீவிகா எப்படி உங்களை நோக்கி வருகிறது என்று கவனியுங்கள். சஞ்ஜீவிகா குழப்பத்தோட முகத்தை நல்லா கீழ் இறக்கி கொம்புகளை நீட்டினால் கொம்புகளால் தாக்க வருகிறது என்று புரியும். ஆனால் பாருங்கள் ராஜா! இது எல்லாமே உங்களை ஏமாற்றப் போடும் வேஷம். நீங்கதான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும” நரி சிங்கத்தை நல்லா தூண்டி விட்டுவிட்டு காட்டுக்குள் போய் மாட்டைத் தேட ஆரம்பித்தது.
சஞ்ஜீவிகா கண்ணில் பட்டதும் முகத்தைச் சோகமா வைத்துக்கொண்டு ஏதோ யோசனையிலிருந்த மாதிரி நடித்தது. சஞ்ஜீவிகா நரியைப் பார்த்ததும் பாவம்! ஏனோ சோகமா இருக்கிறது ஏன் என்று கேட்கலாமென்று நரியிடம் “என்னப்பா! ஏன் இப்படி இருக்கே? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டது.
“என்னத்தை சொல்வது! வெறும் வேலைக்காரர்கள்தானே நாமெல்லாம். நம் தலையெழுத்தே இப்படித்தானே. எதுவுமே நமக்குச் சொந்தமில்லை. அதிகாரம் உள்ளவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். எஜமானன் எப்போது வேண்டுமானாலும் நம்மைச் சந்தேகப்படலாம் என்று நமக்குத் தெரியும். அதனாலேயே எதுவும் நிலையா நமக்கு இருக்காது.” முகத்தைப் பாதங்களால் மூடிக்கொண்டு படுத்துக்கொண்டது.
“ஒரே விடுகதையா இருக்கிறது நீ சொல்வது. என்ன நடந்தது என்று சொல்?” சஞ்ஜீவிகா மறுபடியும் கேட்டது.
“கடற்பாம்புடன் போராடுவது மாதிரி இருக்கிறது எனக்கு, கடற்பாம்பைப் பிடித்துக்கொண்டு கரைசேரலாம் என்றால் அது என்னைக் கொத்திக் கொன்று விடும். அதைப் பிடிக்காமல் விட்டால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுவேன். தப்பிக்க வழியே இல்லை. நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன். எனக்குத்தெரிந்ததை வெளியில் சொன்னால் ராஜாவுக்குத் துரோகம் செய்த மாதிரி ஆகிவிடும்.சொல்லாமல் இருந்தால் என் நண்பனுக்கு ஆபத்து வரும். நான் என்ன பண்ணுவேன். நிம்மதியே இல்லையே எனக்கு” ஒரு பெருமூச்சோடு சொன்னது.
சஞ்ஜீவிகாவுக்கு குழப்பம் அதிகமாகி விட்டது. “உன்னுடைய மனசில் இருப்பதை வெளியில் சொன்னால்தான் உனக்கு நல்லது” நரியைப் பாரத்து சொன்னது.
“நான் உன்னிடம் அதைச் சொல்லக்கூடாது. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. நான்தானே உன்னை இங்க கூட்டிக்கொண்டு வந்தேன். உன்னுடைய பாதுகாப்புக்கு நான் தானே பொறுப்பு.”
“ஏனோ தெரியலை ராஜாவுக்கு உன்மேல் அப்படி ஒரு கோபம். உன்னைக் கொல்ல காத்துக்கொண்டிருக்காரு நரி சொன்னதைக் கேட்ட சஞ்ஜீவிகாவுக்கு ஒரே நடுக்கம். நெஞ்சு படபடனு அடித்துக்கொண்டது. அதோடு பயத்தைப் பார்த்தா நரி “பயப்படும் நேரம் இல்லை இப்போது. நீ ஏதாவது செய்யவேண்டும்” குட்டையை இன்னும் குழப்பியது.
“சில பேருக்கு நல்லது செஞ்சாலும் வீண்தான்.கடலில் பெய்யும் மழை போல்.நல்ல இனிமையா பேசுபவர்களைத்தான் ராஜாக்களுக்குப் பிடிக்குமோ? ஒரு வேளை இந்த நரிதான் தந்திரமா ஏதாவது செய்கிறதோ? இந்த நரி போய் பிங்கலிகாவிடம் ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்குமோ. நரி பேசுவதைப் பாரத்தால் அப்படித் தெரியலையே” சஞ்ஜீவீகாவுக்கு சந்தேகமும் வந்தது.
“நான் என்ன செய்தேன் என்று எனக்குப் புரியவே இல்லையே. எதனால் என் மேல் இவ்வளவு கோபம்? ராஜாக்களிடம் இதுதான் பிரச்சனையே. என்னதான் விஸ்வாசத்தோட அவர்களிடம் வேலைசெய்தாலும் அவர்கள் சந்தேகப்படாமல் இருக்கமாட்டார்கள். என்னுடைய தப்பு என்ன என்று தெரிந்தால் அதைச் சரி செய்வேனே. காரணமே இல்லாமல் கோபப்பட்டால் என்னால் என்ன செய்யமுடியும் .”
சஞ்ஜீவிகா சொல்ல நரியும் “ஆமா! நீ சொல்வது சரிதான்” தலையை ஆட்டியது “.நல்லா பேசி ஏமாற்றுபவர்களைச் சுலபமா நம்பிவிடுவார்கள். அவர்களுக்கு நல்லது செய்பவர்களை நம்பமாட்டார்கள். ஒரே நிலையில் இல்லாமல் அடிக்கடி மனசை மாற்றுபவர்களைப் புரிந்துகொள்வது கடினம். எல்லாம் துறந்த யோகிகளுக்குக் கூட இப்படிப்பட்ட மனிதர்களைத் திருப்திப் படுத்த முடியாது.”
“பொல்லாதவர்களுக்கு உதவுவது விரயம்தான். அறிவில்லாத முட்டாள்களுக்கு அறிவுரை சொல்வதும் விரயம்தான். அந்த அறிவுரையைக் கேட்டு அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அதேபோல்தான் பிறர் சொல்வதைக் கேட்காமல் பிடிவாதமாகத் தன்னிச்சையாக இருப்பவர்களிடம் சொல்வதும். அவர்கள் நினைப்பது மட்டும்தான் செய்வார்கள்.ம்ம் நல்லதும் கெட்டதும் சேர்ந்து இருப்பதுதானே வாழ்க்கை. எல்லாம் நல்லா இருக்கும்போது திடீர் என்று மாற்றம் வரலாம்.”
“வாசமுள்ள சந்தனமரத்தடியில் பாம்புப் புற்று இருக்கலாம். முதலை இருக்கும் ஏரியில் தாமரைப்பூவும் பூக்கும். வெளியில் பார்க்க அழகா அமைதியாய் இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கலாம். சந்தனமரத்தடியில் பாம்பு இருக்கும். வண்டுகள் பூக்களின் மேல் மொய்க்கும். கிளைகளில் குரங்குகள் விளையாடிக்கொண்டிருக்கும். அந்த மரத்துக்குப் பக்கத்தில் போனால் இதில் ஏதாவது ஒன்று நம்மைத் தாக்கலாம்.”
“இந்த ராஜாவை எனக்கு ரொம்ப நாளாகத் தெரியும். நல்லா சிரித்துச் சிரித்துப் பேசுவார். ஆனால் கொடூரமான குணம் கொண்ட ஒரு சுயநலவாதி. வேஷம் போடும் கபடதாரி. வெளி வேஷத்தை நம்பி ஏமாந்து விடுவோம். நல்லா நட்பா பழகுவார். குடும்பத்தைப் பத்தி அக்கரையா கேட்பார் ஆனால் மனசுக்குள் ஒரே விஷம். அவருக்கு இரட்டை முகம்”.
“கடலைக் கடக்கப் படகை உபயோகிக்கலாம். இருட்டாக இருந்தால் வெளிச்சத்துக்கு விளக்கை உபயோகிக்கலாம். வெப்பம் அதிகமாக இருந்தால் விசிறியை உபயோகிக்கலாம். பொல்லாத குணம் உள்ளவர்களிடம் இருந்து கடவுளால்கூட காப்பாற்ற முடியாது.” நரி இப்படிச் சொல்லச் சொல்ல சஞ்ஜீவிகாக்வுகு பயம் அதிகமாகிவிட்டது.
“நானோ மாமிசம் சப்பிடமாட்டேன். நான் எப்படி சிங்கத்தைப் பயமுறுத்த முடியும். அப்படி இருந்தும் ஏன் என்னை விரோதியா நினைக்கிறதோ தெரியவில்லை. நாங்கள் இரண்டு பேரும் சமமாக இருந்தால்தானே அது சரியான போட்டியாக இருக்க முடியும் சிங்கத்தின் முன் நான் எம்மாத்திரம். எங்களுடைய உறவில் விரிசல் வந்தாயிற்று.முன்போல் நல்ல நண்பர்களாக இனிமேல் இருக்க முடியாது.”
“இடியும் அரசனின் கோபமும் தாக்கினால் தாங்க முடியாது. ஆனால் இடி இறங்கி அடித்த இடத்தில் மட்டும்தான் சேதம் உண்டாகும். அரசனின் கோபம் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் அழிக்கும். சண்டைக்குத் தயாராகித்தான் ஆகவேண்டும். சண்டை போடாமல் இருந்தால் ராஜா என்னை ஏதும் செய்யாதா என்ன? இருந்தாலும் பரவாயில்லை. வீரமரணம் அடைந்தால் சொர்க்கத்துக்குப் போகலாம். ஜெயிக்க முடியாதென்று தெரியும். ஆனாலும் சண்டைபோடத்தான் வேண்டும்.”
“சரி! நீ ஒன்று சொல். ராஜா என்னோடு சண்டைபோட வருவதை எப்படிக் கண்டுபிடிப்பது?” சஞ்ஜீவிகா நரியைக் கேட்டது.
தமனக்கா யோசனை செய்வது போல் நடித்து “அது! ராஜா வரும்போது நடை முக பாவனை எப்படி இருக்கிறது என்று பார். வால் விரைப்பாக நேராக இருக்கும்.கால்களை முன்னாடி தூக்கி நிற்கும். வாயைப் பெரிதாகப் பற்கள் தெரிவதுபோல் திறந்து வைக்கும். இப்படி எல்லாம் செய்தால் அது உன்னைத் தாக்க வருகிறது என்று புரியும். பயப்படாதே. பதிலுக்கு நீயும் ஆக்ரோஷமா சண்டை போடு. நீ ஒன்றும் கோழை இல்லை” தமனக்கா உண்மை வெளியில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ எல்லாம் செய்தது.
சஞ்ஜீவிகா சண்டைக்குத் தயாராகிவிட்ட சந்தோஷத்தில் தமனக்கா கரட்டக்காவைப் பார்க்கப்போனது. “என்ன ஆயிற்று உன் திட்டம்.?சிங்கராஜாவிடம் பேசினாயா? என்ன நடக்கும் இனிமே?” கரட்டக்கா ஆர்வமா கேட்டது. “என்ன நடக்கப் போகிறது என்று காத்திருந்து பார். சிங்கமும் மாடும் பிரிந்து விட்டார்கள்.” தமனக்கா பெருமிதமாகச் சொன்னது.
மறுபடியும் தமனக்கா சிங்கத்தைப் பார்க்கப் போனது. “மகாராஜா! அந்த நம்பிக்கைத் துரோகி உங்களைத் தாக்க வருகிறது. உங்கள் பலத்தையும் சக்தியையும் அதற்கு காட்டுங்கள். பயத்தில் அது நடுங்கவேண்டும்.” சிங்கத்தை உற்சாகப்படுத்தியது.
சஞ்ஜீவிகாவுக்கு சிங்கத்தைப் பார்த்ததும் முடிவு நெருங்கி விட்டது என்று புரிந்துவிட்டது. சிங்கம் தமனக்கா சொன்னது போலவே வாலை விரைப்பாகக் காலைத்தூக்கி, வாயைப் பிளந்து, பற்களைக் காட்டி கோபமாக வந்தது. மாடும் கொம்புகளைத் தாழ்த்தி சண்டைக்குத் தயாரானது.
ஆனால் மாட்டால் சிங்கத்தை ஜெயிக்க முடியுமா சண்டையில் மாடு உயிர் இழந்தது. பிங்கலிகாவுக்கு நண்பனைக் கொன்றதில் வருத்தம். தமனக்கா சிங்கத்தைத் துரோகிகளைக் கொல்வதில் தவறில்லை என்று சொல்லி சமாதானப் படுத்தியது. நாளடைவில் சிங்கம் சஞ்ஜீவிகாவை மறந்து போனது. மறுபடியும் நரிகளுக்குச் சிங்கத்தின் மந்திரிகளாக எல்லா அதிகாரங்களும் கிடைத்தது.
விஷ்ணுஷர்மா இந்த கதையைச் சொல்லிவிட்டு இளவரசர்களிடம் “இப்படித்தான் சிலர் நண்பர்களை இழக்கிறார்கள்” என்று சொன்னார். இளவரசர்கள் இந்த கதைகளை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். “உங்கள் எதிரிகளும் இதேபோல் நண்பர்களை இழக்கட்டும். துரோகிகள் ஒழியட்டும். உங்கள் நட்டு மக்களுக்கு எல்லா செல்வங்களும் கிடைக்கட்டும்” விஷ்ணு சர்மா இளவரசர்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்.
இந்தக் கதையோடு ஹிதோபதேசத்தின் இரண்டாம் பாகமான நண்பர்களை இழப்பது முடிவடைந்தது.
.