திருக்குறளின் அவா அறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். அவா அறுத்தல் என்றால் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும், மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம், துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.
அவா அறுத்தல் – 2
- ஆறாவது குறள்.
“அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா“.
இதில்
‘அஞ்சுவ தோரும் அறனே’
இதன் விளக்கம்
ஆதலால் ஆசைகள் உண்டாகி விடாமல் அஞ்சிக் காப்பதே அறமாகும்.
அடுத்து
‘ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா‘
இதன் விளக்கம்
பற்றுகள் இல்லாதவர்களை வஞ்சித்துக் கெடுப்பது ஆசைகளே.
அதாவது
பற்றுகள் இல்லாதவர்களை வஞ்சித்துக் கெடுப்பது ஆசைகளே. ஆதலால் ஆசைகள் உண்டாகி விடாமல் அஞ்சிக் காப்பதே அறமாகும்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்“.
இதில்
‘அவாவினை ஆற்ற அறுப்பின்‘
இதன் விளக்கம்
ஒருவன் ஆசைகளை முழுவதும் ஒழித்து விட்டால்.
அடுத்து
‘தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்’
இதன் விளக்கம்
அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்ல செயல் அவன் விரும்புவது போல் உண்டாகும்.
அதாவது
ஒருவன் ஆசைகளை முழுவதும் ஒழித்து விட்டால், அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்ல செயல் அவன் விரும்புவது போல் உண்டாகும்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“அவாஇல்லார்க்கு இல்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்”.
இதில்
‘அவாஇல்லார்க்கு இல்லாகுந் துன்பம்‘
இதன் விளக்கம்
ஆசைகள் இல்லாதவர்களுக்கு எந்த துன்பமும் இல்லை.
அடுத்து
‘அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்’
இதன் விளக்கம்
அந்த ஆசை இருந்துவிட்டால் எல்லாத் துன்பங்களும் இடைவிடாமல் வரும்.
அதாவது
ஆசைகள் இல்லாதவர்களுக்கு எந்த துன்பமும் இல்லை. அந்த ஆசை இருந்துவிட்டால் எல்லாத் துன்பங்களும் இடைவிடாமல் வரும்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்“.
இதில்
‘இன்பம் இடையறாது ஈண்டும்‘
இதன் விளக்கம்
இவ்வுலகில் இன்பம் இடைவிடாமல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அடுத்து
‘அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்’
இதன் விளக்கம்
அவா என்று சொல்லப்படும் துன்பங்களுள் பொல்லாத துன்பம் இல்லாது போனால்.
அதாவது
அவா என்று சொல்லப்படும் துன்பங்களுள் பொல்லாத துன்பம் இல்லாது போனால் இவ்வுலகில் இன்பம் இடைவிடாமல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்“.
இதில்
‘ஆரா இயற்கை அவாநீப்பின்’
இதன் விளக்கம்
ஒரு போதும் நிறைவு பெறாத தன்மையுடைய ஆசையை நீக்கிவிட்டால்
அடுத்து
‘அந்நிலையே பேரா இயற்கை தரும்’
இதன் விளக்கம்
அந்த நிலையே ஒருவனுக்கு நிலையான இன்ப வாழ்வைத் தரும்.
அதாவது
ஒரு போதும் நிறைவு பெறாத தன்மையுடைய ஆசையை நீக்கிவிட்டால், அந்த நிலையே ஒருவனுக்கு நிலையான இன்ப வாழ்வைத் தரும்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் ஊழியல்.
நன்றி! வணக்கம்!