இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது அவா அறுத்தல் அதிகாரம். இது திருக்குறளின் 37வது அதிகாரம். “அவா அறுத்தல்” இதன் விளக்கம் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும் மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க, ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம் துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.
அவா அறுத்தல் – 1
- முதல் குறள்.
“அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து”.
இதில்
‘அவாஎன்ப‘
இதன் பொருள்
ஆசை என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அடுத்து
‘எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து’
இதன் பொருள்
எல்லா உயிர்களுக்கும் எந்த காலத்திலும் அழியாது வரும் பிறவித் துன்பத்தை உண்டாக்கும் விதைதான்
அதாவது
எல்லா உயிர்களுக்கும் எந்த காலத்திலும் அழியாது வரும் பிறவித் துன்பத்தை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்“.
இதில்
‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை‘
இதன் பொருள்
பிறப்பதால் வரும் துன்பத்தை உணர்ந்தவன், ஒன்றை விரும்பினால் அது பிறவாமையை விரும்ப வேண்டும்.
அடுத்து
‘மற்றது வேண்டாமை வேண்ட வரும்’
அது ஆசை இல்லாத நிலையை விரும்பினால் உண்டாகும்.
அதாவது
பிறப்பதால் வரும் துன்பத்தை உணர்ந்தவன், ஒன்றை விரும்பினால் அது பிறவாமையை விரும்ப வேண்டும். அது ஆசை இல்லாத நிலையை விரும்பினால் உண்டாகும்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்”.
இதில்
‘வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை‘
இதன் பொருள்
எந்தப் பொருளையும் விரும்பாத ஆசைகள் அற்ற நிலையைப் போல் சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை.
அடுத்து
‘ஆண்டும் அஃதொப்பது இல்‘
இதன் பொருள்
வேறு எந்த உலகத்திலும் அதற்கு நிகரானது ஒன்றும் இல்லை.
அதாவது
எந்தப் பொருளையும் விரும்பாத, ஆசைகள் அற்ற நிலையைப் போல் சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. வேறு எந்த உலகத்திலும் அதற்கு நிகரானது ஒன்றும் இல்லை.
அவா அறுத்தல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்“.
இதில்
‘தூஉய்மை என்பது அவாவின்மை’
இதன் பொருள்
தூய நிலை என்று சொல்லப்படுவது ஆசைகள் இல்லாமல் இருப்பதே ஆகும்.
அடுத்து
‘மற்றது வாஅய்மை வேண்ட வரும்‘
இதன் பொருள்
அந்த ஆசைகள் இல்லாத தூய நிலை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
அதாவது
தூய நிலை என்று சொல்லப்படுவது, ஆசைகள் இல்லாமல் இருப்பதே ஆகும். அந்த ஆசைகள் இல்லாத தூய நிலை, மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
அவா அறுத்தல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்”.
இதில்
‘அற்றவர் என்பார் அவாஅற்றார்’
இதன் பொருள்
பிறவி இல்லாதவர் என்று சொல்லப்படுபவர் ஆசைகள் இல்லாதவர்.
அடுத்து
‘மற்றையார் அற்றாக அற்றது இலர்’
இதன் பொருள்
பற்றுகள் இல்லாவிட்டாலும் ஆசைகளை நீக்காதவர்கள் பிறவி இல்லாதவர்கள் இல்லை.
அதாவது
பிறவி இல்லாதவர் என்று சொல்லப்படுபவர் ஆசைகள் இல்லாதவர். பற்றுகள் இல்லாவிட்டாலும் ஆசைகளை நீக்காதவர்கள் பிறவி இல்லாதவர்கள் இல்லை.
அவா அறுத்தல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அவா அறுத்தல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!