இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் அறிவுடைமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம்.
நாம் வாழ்க்கையில் அனுபவித்து தெரிந்து கொள்வதை சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அறிவோடு பயன்படுத்த வேண்டும். கல்வி அறிவும், கேள்வி அறிவும் மட்டுமில்லாமல் உலக அறிவும் வேண்டும். இந்த அதிகாரம் அறிவின் பயனையும் அறிவுடையவர்களின் பண்பையும் கூறுகிறது.
அறிவுடைமை – 2
- ஆறாவது குறள்.
“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.”
இதில்
‘எவ்வது உறைவது உலகம்‘
இதன் பொருள்
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ.
அடுத்து
‘உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு’
இதன் பொருள்
அந்த உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் நடப்பது அறிவாகும்.
அதாவது
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அந்த உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் நடப்பது அறிவாகும்.
அறிவுடைமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்
“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.”
இதில்
‘அறிவுடையார் ஆவ தறிவார்‘
இதன் பொருள்
அறிவுடையவர் எதிர்காலத்தில் நடப்பதை முன்னே அறியும் வல்லமை உள்ளவர்.
அடுத்து
‘அறிவிலார் அஃதறி கல்லா தவர்‘
இதன் பொருள்
அறிவில்லாதவர்கள் வருவதை அறிய இயலாதவர்கள்.
அதாவது
அறிவுடையவர் எதிர்காலத்தில் நடப்பதை முன்னே அறியும் வல்லமை உள்ளவர். அறிவில்லாதவர்கள் வருவதை அறிய இயலாதவர்கள்.
அறிவுடைமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்
“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.”
இதில்
‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’
இதன் பொருள்
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும்.
அடுத்து
‘அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’
இதன் பொருள்
அஞ்சத்தக்கவைகளைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவர்களின் தொழிலாகும்.
அதாவது
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும். அஞ்சத்தக்கவைகளைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவர்களின் தொழிலாகும்.
அறிவுடைமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.”
இதில்
‘எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு‘
இதன் பொருள்
வரப்போவதை முன் அறிந்து காக்க வல்ல அறிவுடையவர்க்கு
அடுத்து
‘இல்லை அதிர வருவதோர் நோய்’
இதன் பொருள்
அவர் நடுங்கும் படியாகத் துன்பங்கள் எதுவும் வராது.
அதாவது
வரப்போவதை முன் அறிந்து காக்க வல்ல அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும் படியாகத் துன்பங்கள் எதுவும் வராது.
அறிவுடைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.”
இதில்
‘அறிவுடையார் எல்லா முடையார்’
இதன் பொருள்
அறிவு உள்ளவர்களுக்கு எதுவும் இல்லை என்றாலும் எல்லாம் உடையவர்களே.
அடுத்து
‘அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்’
இதன் பொருள்
அறிவில்லாதவர்களுக்கு எல்லாம் இருந்தாலும் ஏதும் இல்லாதவர்களே.
அதாவது
அறிவு உள்ளவர்களுக்கு எதுவும் இல்லை என்றாலும் எல்லாம் உடையவர்களே. அறிவில்லாதவர்களுக்கு எல்லாம் இருந்தாலும் ஏதும் இல்லாதவர்களே.
அறிவுடைமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பாரக்கப்போகும் அதிகாரம் குற்றங்கடிதல்.
நன்றி! வணக்கம்!



