இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 43வநு அதிகாரமான அறிவுடைமை. இதற்கு முன் திருக்குறளின் 42வது அதிகாரங்களைப் பொருளோடு பாரத்தோம்.
நாம் வாழ்க்கையில் அனுபவித்து தெரிந்து கொள்வதை சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அறிவோடு பயன்படுத்த வேண்டும். கல்வி அறிவும், கேள்வி அறிவும் மட்டுமில்லாமல் உலக அறிவும் வேண்டும். இந்த அதிகாரம் அறிவின் பயனையும் அறிவுடையவர்களின் பண்பையும் கூறுகிறது.
அறிவுடைமை -1
- முதல் குறள்.
“அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.”
இதில்
‘அறிவற்றங் காக்கும் கருவி’
இதன் பொருள்
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி ஆகும்.
அடுத்து
‘செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்‘
இதன் பொருள்
அந்த அறிவு பகைவர்களாலும் அழிக்க முடியாத உட்கோட்டை ஆகும்.
அதாவது
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி ஆகும். அந்த அறிவு பகைவர்களாலும் அழிக்க முடியாத உட்கோட்டை ஆகும்.
அறிவுடைமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.“
இதில்
‘சென்ற இடத்தால் செலவிடாது’
இதன் பொருள்
மனதை அதன் போக்கில் போகவிடாமல்.
அடுத்து
‘தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு’
இதன் பொருள்
நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமையை நீக்கி நல்லவைகளை செய்வது அறிவு ஆகும்.
அதாவது
மனதை அதன் போக்கில் போகவிடாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமையை நீக்கி நல்லவைகளை செய்வது அறிவு ஆகும்.
அறிவுடைமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.“
இதில்
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்’
இதன் பொருள்
எந்தப் பொருளைப் பற்றியும் யார் சொல்லக் கேட்டாலும் கேட்டவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல்.
அடுத்து
‘அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’
இதன் பொருள்
அப்பொருளின் உண்மையைக் காண்பது அறிவாகும்.
அதாவது
எந்தப் பொருளைப் பற்றியும் யார் சொல்லக் கேட்டாலும் கேட்டவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அப்பொருளின் உண்மையைக் காண்பது அறிவாகும்.
அறிவுடைமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.”
இதில்
‘எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்‘
இதன் பொருள்
பிறர் அறிந்து கொள்வதற்கு எளிமையாக விளங்கும்படி சொல்லி
அடுத்து
‘பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு’
இதன் பொருள்
பிறரிடம் கேட்பவற்றின் நுணுக்கமான பொருள்களை ஆராயந்து காண்பது அறிவாகும்.
அதாவது
பிறர் அறிந்து கொள்வதற்கு எளிமையாக விளங்கும்படி சொல்லிப் பிறரிடம் கேட்பவற்றின் நுணுக்கமான பொருள்களை ஆராயந்து காண்பது அறிவாகும்.
அறிவுடைமை அதிகாரத்தின் நான்கவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.“
இதில்
‘உலகம் தழீஇயது ஒட்பம்‘
இதன் பொருள்
உலகத்து உயர்ந்தோர்களை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு.
அடுத்து
‘மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு‘
இதன் பொருள்
முன்னே மகிழ்ந்து விரிதலும் பின் வருந்திக் குவிதலும் இல்லாமல் இருப்பது அறிவு.
அதாவது
உலகத்து உயர்ந்தோர்களை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு. முன்னே மகிழ்ந்து விரிதலும் பின் வருந்திக் குவிதலும் இல்லாமல் இருப்பது அறிவு.
அறிவுடைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த்குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. அறிவுடைமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பாரக்கலாம்.
நன்றி! வணக்கம்!



