திருக்குறளின் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். மீதி உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். அறம் என்றால் எதையும் நேர்மையாகச் செய்வதே ஆகும். அப்படி நேர்மையாகச் செய்யும்போது கிடைக்கும் நன்மைகளையும்
பெருமைகளையும் இந்த அதிகாரம் கூறுகிறது.
அறன் வலியுறுத்தல் 2
- ஆறாவது குறள்.
“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை“.
இதில்
“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க“
இதன் பொருள்
இப்போது இளமையாக இருக்கிறோம், பிற்காலத்தில் வயதான பிறகு அறம் செய்யலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும்.
அடுத்து
“மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை“
இதன் பொருள்
அப்படி செய்யும் அறம் இந்த உடம்பிலிருந்து உயிர் பிரியும்போது அழியா துணையாக வரும்.
அதாவது
இப்போது இளமையாக இருக்கிறோம், பிற்காலத்தில் வயதான பிறகு அறம் செய்யலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அப்படிச் செய்யும் அறம் இந்த உடம்பிலிருந்து உயிர் பிரியும்போது அழியா துணையாக வரும்.
இது அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள்.
- ஏழாவது குறள்.
“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை“.
இதில்
“அறத்தாறு இதுவென வேண்டா“
இதன் பொருள்
அறத்தின் பயன் இது என்று கூறவேண்டாம்.
அடுத்து
“சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை“
இதன் பொருள்
பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் அதைச் சுமந்து செல்பவனையும் பாரத்து.
அதாவது
பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும், அதைச் சுமந்து செல்பவனையும் பாரத்து அறத்தின் பயன் இது என்று கூறவேண்டாம்.
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்“.
இதில்
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்“
இதன் பொருள்
அறத்தை செய்யாமல் தவறிய நாள் இல்லாமல் அறத்தை ஒருவன் செய்தால்
அடுத்து
“அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்“.
இதன் பொருள்
அந்த அறமே அவன் மறுபடியும் பிறக்கும் வழியை அடைக்கும் தடைக்கல் ஆகும்.
அதாவது
அறத்தை செய்யாமல் தவறிய நாள் இல்லாமல் அறத்தை ஒருவன் செய்தால், அதாவது ஒரு நாள்கூட விடாமல் அறத்தைச் செய்தால், அந்த அறமே அவன் மறுபடியும் பிறக்கும் வழியை அடைக்கும் தடைக்கல் ஆகும்.
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல“.
இதில்
“அறத்தான் வருவதே இன்பம்“
இதன் பொருள்
அறநெறி தவறாமல் வாழும்போது வருவதே இன்பம் ஆகும்.
அடுத்து
“மற்றெல்லாம் புறத்த புகழும் இல“
இதன் பொருள்
அறநெறி இல்லாமல் வாழும்போது வருவதெல்லாம் இன்பம் இல்லாதவை. புகழும் இல்லாதவை.
அதாவது
அறநெறி தவறாமல் வாழும்போது வருவதே இன்பம் ஆகும். அறநெறி இல்லாமல் வாழும்போது வருவதெல்லாம் இன்பம் இல்லாதவை. புகழும் இல்லாதவை.
இது அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள்.
- பத்தாவது குறள்.
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி“.
இதில்
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு“
இதன் பொருள்
ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே.
அடுத்து
“உயற்பால தோரும் பழி“
இதன் பொருள்
செய்யாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது தீய செயல்களால் வரும் பழியே.
அதாவது
ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே.
செய்யாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது, தீய செயல்களால் வரும் பழியே.
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு அறன் வலியுறுத்தல் அதிகாரம் முடிவடைந்தது.
அடுத்து நாம் பார்க்கப்போகும் அகதிகாரம் இல்வாழ்க்கை.
நன்றி! வணக்கம்!