திருக்குறளின் எட்டாவது அதிகாரமான அன்புடைமையில் இருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் கேட்டீர்கள். இந்த அதிகாரம் பிறரிடம் அன்பு செலுத்துவதைப் பற்றிச் சொல்கிறது. அன்புடையவர்களின் சிறப்பைப் பற்றியும், அன்பில்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் இந்த அதிகாரம் சொல்கிறது. அன்புடைமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் காண்போம்.
அன்புடைமை 2
- ஆறாவது குறள்.
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை“.
இதில்
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்“
இதன் பொருள்
அறியாதவர் அன்பு அறத்திற்கு மட்டுமே துணையாகும் என்று சொல்வர்.
அடுத்து
“மறத்திற்கும் அஃதே துணை“
ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அறமே காரணம் ஆகும்.
அதாவது
அறியாதவர் அன்பு அறத்திற்கு மட்டுமே துணையாகும் என்று சொல்வர். ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அறமே காரணம் ஆகும்.
அன்புடைமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்“.
இதில்
“என்பி லதனை வெயில்போலக் காயுமே“
இதன் பொருள்
எலும்பு இல்லாத புழுவை வெய்யில் காய்நது வருத்துவதைப் போல்,
அடுத்து
“அன்பி லதனை அறம்“
அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.
அதாவது
எலும்பு இல்லாத புழுவை வெய்யில் காய்ந்து வருத்துவதைப் போல், அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.
அன்புடைமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று“.
இதில்
“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை“
இதன் பொருள்
மனதில் அன்பில்லாமல் வாழும் வாழ்க்கை,
அடுத்து
“வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று“
இதன் பொருள்
பாலைவனத்தில் பட்டுப்போன மரம் தளிர்த்தது போல் ஆகும்.
அதாவது
மனதில் அன்பில்லாமல் வாழும் வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டுப்போன மரம் தளிர்த்தது போல் ஆகும்.
அன்புடைமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு“.
இதில்
“யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு“
இதன் பொருள்
உடம்பின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு,
அடுத்து
“புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்“
உடம்பின் புறத்தில் உள்ள உறுப்புகள் என்ன பயனைத் தரும்?
அதாவது
உடம்பின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, உடம்பின் புறத்தில் உள்ள உறுப்புகள் என்ன பயனைத் தரும்?
அன்புடைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு“.
இதில்
“அன்பின் வழியது உயிர்நிலை“
அன்பின் வழியல் இயங்கும் உடம்பே உயிர் நிற்கும் உடம்பாகும்.
அடுத்து
“அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு“
அன்பு இல்லாதவர்களின் உடம்பு எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடம்பே ஆகும்.
அதாவது
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நிற்கும் உடம்பாகும். அன்பு இல்லாதவர்களின் உடம்பு எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடம்பாகும்.
அன்புடைமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு அன்புடைமை அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வருவது ஒன்பதாவது அதிகாரமான விருந்தோம்பல்.
நன்றி! வணக்கம்!