இதற்கு முன் திருக்குறளின் ஏழு அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இன்றைக்கு நாம் திருக்குறளின் எட்டாவது அதிகாரமான அன்புடைமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம்.
அன்புடைமை அதிகார விளக்கம்
.இந்த அதிகாரம் பிறருக்கு அன்பு செலுத்துவதைப் பற்றியும், அன்பு காட்டாவிட்டால் உண்டாகும் குறைகளைப் பற்றியும் கூறுகிறது. உடல், உயிர், அன்பு இவற்றுக்குள்ள தொடர்பையும் கூறுகிறது. அன்புடைமை தான் மனிதனை மனிதனாக இருக்கச் செய்கிறது. அன்பில்லாமல் போனால் நடக்கும் குற்றங்களைப் பற்றியும் இந்த அதிகாரம் சொல்கிறது. நல்ல இல்லறத்திற்கு அன்பே அடிப்படையாகும். மனதில் அன்பும், பாசமும் உள்ளவர்கள், எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். தனக்கென்று வாழாமல் பிறருக்காக வாழ்வார்கள்.
அன்புடைமை -1
- முதல் குறள்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்”.
இதில்
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்“
இதன் பொருள்
உள்ளத்தில் உள்ள அன்பை பிறருக்குத் தெரியாமல் அடைத்து வைக்கத் தாழ் உண்டோ?
அடுத்து
“ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்“
இதன் பொருள்
தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பம் கண்டு, கண்ணில் வடியும் கண்ணீரே உள்ளத்தில் உள்ள அன்பைக் காட்டிவிடும்.
அதாவது
உள்ளத்தில் உள்ள அன்பை பிறருக்குத் தெரியாமல் அடைத்து வைக்கத் தாழ் உண்டோ? தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பம் கண்டு, கண்ணில் வடியும் கண்ணீரே உள்ளத்தில் உள்ள அன்பைக் காட்டிவிடும்
அன்புடைமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு“.
இதில்
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்“
இதன் பொருள்
அன்பில்லாதவர் எல்லா பொருளையும் தமக்கே உரிமை உடையது என்று நினைப்பார்கள்.
அடுத்து
“அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு“
இதன் பொருள்
அன்புடையவர் தம் பொருளோடு மட்டும் இல்லாமல், உடம்பாலும் பிறர்க்கு உரிமையாகி வாழ்வார்.
அதாவது
அன்பில்லாதவர் எல்லா பொருளையும் தமக்கே உரிமை உடையது என்று நினைப்பார்கள். அன்புடையவர் தம் பொருளோடு மட்டும் இல்லாமல், உடம்பாலும் பிறர்க்கு உரிமையாகி வாழ்வார்.
அன்புடைமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு“.
இதில்
“ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு“
இதன் பொருள்
பெறுதர்கரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு,
அடுத்து
“அன்போடு இயைந்த வழக்கென்ப“
இதன் பொருள்
அன்போடு பொருந்தி வாழும் நெறியின் பயன் என்று கூறுவர்.
அதாவது
பெறுதர்கரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு,
அன்போடு பொருந்தி வாழும் நெறியின் பயன் என்று கூறுவர்.
அன்புடைமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு“.
இதில்
“அன்புஈனும் ஆர்வம் உடைமை“
இதன் பொருள்
அன்பு பிறரிடம் ஆர்வமுடன் பழகும் குணத்தைத் தரும்.
அடுத்து
“அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு“
இதன் பொருள்
அந்த குணமே நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
அதாவது
அன்பு பிறரிடம் ஆர்வமுடன் பழகும் குணத்தைத் தரும்.
அந்த குணமே நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
அன்புடைமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு“.
இதில்
“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப“
இதன் பொருள்
அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று சொல்வார்கள்.
அடுத்து
“வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு“
இதன் பொருள்
உலகத்தில் இன்பமுடன் வாழ்கின்றவர் அடையும் சிறப்பு,
அதாவது
உலகத்தில் இன்பமுடன் வாழ்கின்றவர் அடையும் சிறப்பு
அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று சொல்வார்கள்.
இது அன்புடைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள்.
இந்தக் குறளோடு அன்புடைமை -1 பகுதி முடிவடைந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம். நன்றி! வணக்கம்!