திருக்குறளின் பதிமூன்றாம் அதிகாரமான அடக்கமுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஆறிலிருந்து பத்துவரை உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
ஆரவாரம் செருக்கு அகங்காரம் இல்லாமல் பணிவுடன் ஒழுக்கமாக இருப்பதே அடக்கமுடைமை ஆகும்.
.
அடக்கமுடைமை 2
- ஆறாவது குறள்.
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.“
இதில்
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்“
இதன் பொருள்
ஒரு பிறப்பில் ஆமை போல் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றிருந்தால்
அடுத்து
“எழுமையும் ஏமாப் புடைத்து“
இதன் பொருள்
அதுவே அவனுக்கு ஏழு பிறவியிலும் அரணாக இருக்கும்.
அதாவது
ஒரு பிறப்பில் ஆமை போல் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றிருந்தால் அதுவே அவனுக்கு ஏழு பிறவியிலும் அரணாக இருக்கும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
இதில்
“யாகாவா ராயினும் நாகாக்க“
இதன் பொருள்
காக்க வேண்டியவற்றுள் எதையும் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்.
அடுத்து
“காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு “
இதன் பொருள்
அப்படிக் காக்காவிட்டால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
அதாவது
காக்க வேண்டியவற்றுள் எதையும் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும். அப்படிக் காக்காவிட்டால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்”.
இதில்
“ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்“
இதன் பொருள்
தீய சொற்களின் பொருளால் வரும் துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டானால்
அடுத்து
“நன்றாகா தாகி விடும் “
இதன் பொருள்
அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மைகளும் தீயதாய் மாறிவிடும்.
அதாவது
தீய சொற்களின் பொருளால் வரும் துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டானால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மைகளும் தீயதாய் மாறிவிடும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.“
இதில்
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும்“
இதன் பொருள்
தீயினால் சுட்ட புண் வெளியே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்.
அடுத்து
“ஆறாதே நாவினால் சுட்ட வடு.“
இதன் பொருள்
நாவினால் சுட்ட வடு ஆறாது. எப்போதும் நிலைத்து இருக்கும்.
அதாவது
தீயினால் சுட்ட புண் வெளியே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். நாவினால் சுட்ட வடு ஆறாது. எப்போதும் நிலைத்து இருக்கும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.“
இதில்
“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி“
இதன் பொருள்
கோபத்தை அடக்கி கல்வி கற்று அடக்கமுடையவனாக இருப்பவனை அடைவதற்கான நேரத்தை
அடுத்து
“அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து“
இதன் பொருள்
அறமானது எதிர்பார்த்து அவன் வழியில் நுழைந்து உயர்த்தும்.
அதாவது
கோபத்தை அடக்கி கல்வி கற்று அடக்கமுடையவனாக இருப்பவனை அடைவதற்கான நேரத்தை அறமானது எதிர்பார்த்து அவன் வழியில் நுழைந்து உயர்த்தும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு அடக்கமுடைமை அதிகாரம் முடிந்தது. அடுத்து வரும் அதிகாரம் ஒழுக்கமுடைமை. இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!