வணக்கம். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு இந்த இரண்டு அதிகாரங்களுக்குப் பிறகு நாம பார்க்கப்போகிறது மூன்றாவது அதிகாரமான நீத்தார் பெருமை.
நீத்தார் என்றால் ஒழுக்கமாக வாழ்ந்து உயிர் நீத்தாரை இங்கு குறிப்பிடும். வாழ்க்கையில் நன்மை தீமை இரண்டும் உண்டு. இரண்டையும் உணர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி ஒழுக்கத்துடன் வாழ்பவர்களே உயர்ந்தவர்கள்.வாழ்க்கையில் அறத்தைக் கடைப்பிடித்து, பிறர்க்குத் தன்னலமற்ற
தொண்டு செய்வோர் போற்றுதலுக்கு உரியவர்கள். சமுதாயத்தில் எந்த துறையிலிருந்தாலும் தன்னலமற்ற தொண்டு செய்பவர்களும், கருணை உள்ளம் கொண்டவர்களும் பொதுநலனுக்காக உழைப்பவர்கள் அனைவரும் நீத்தார் பெருமைக்கு உரியவர்கள்.
குறள் கூறும் நீத்தார் பெருமை என்ன என்று பார்க்கலாம்
நீத்தார் பெருமையில் முதல் குறள். அறத்துப்பாலின் 21வது குறள்.
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு”.
இதில்
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை” என்பதன் பொருள்
தமக்குரிய ஒழுக்கத்தில் உறுதியாய் நின்று பற்று விட்டவர்களின் பெருமையை
அடுத்ததா
“விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு”
இதன் பொருள்
எல்லாவற்றிலும் சிறந்தது என்று சொல்வதே நூல்களின் துணிவாகும்.
தமக்குரிய ஒழுக்கத்தில் உறுதியாய் நின்று பற்று விட்டவர்களின் பெருமையை எல்லாவற்றிலும் சிறந்தது என்று சொல்வதே நூல்களின் துணிவாகும்
இங்க பனுவல் என்றால் நூல் அல்லது புத்தகம் என்று பொருள்.
இது நீத்தார் பெருமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள்.
அடுத்தது இரண்டாவது குறள். அறத்துப்பாலின் 22வது குறள்
“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று”.
இதில்
“துறந்தார் பெருமை துணைக்கூறின்” இதன் பொருள்
பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையை அளந்து கூறுவதென்பது
“வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று”
இந்த உலகத்தில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போல் அளவிட முடியாதது
பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையை அளந்து கூறுவதென்பது, இந்த உலகத்தில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போல் அளவிட முடியாதது.
நீத்தார் பெருமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
இப்போது இந்த அதிகாரத்தில் உள்ள மூன்றாவது குறள். அறத்துப்பாலின் 23 வது குறள்.
“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு”.
இதில்
“இருமை வகை தெரிந்து” இதன் பொருள்
பிறப்பு வீடு இந்த இரண்டிலும் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து அறிந்து
“ஈண்டுஅறம் பூண்டார் பெருமை”
இதன் பொருள் மெய் உணர்ந்து ஆசைகளை துறந்தவர்களின் பெருமையே
“பிறங்கிற்று உலகு”. அதாவது இந்த உலகத்தில் உயர்ந்தது.
பிறப்பு வீடு இந்த இரண்டிலும் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையே இந்த உலகத்தில் உயர்ந்தது.
இதுதான் நீத்தார் பெருமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள்.
அடுத்து இந்த அதிகாரத்தில் உள்ள நான்காவது குறள். அறத்துப்பாலின் 24வது குறள்.
“உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிர்க்குஓர் வித்து”.
முதல் வரி
“உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்”
இதன் பொருள்
மனவுறுதி கொண்டு அறிவால் ஐந்து யானைகளான ஐம்புலன்களையும் அடக்கிக் காப்பவன்
அடுத்த வரி
“வரன்என்னும் வைப்பிர்க்கோர் வித்து”. இதன் பொருள்
மேலான வீடு என்ற பேரின்ப நிலைக்கு விதை போன்றவன்.
மனவுறுதி கொண்டு அறிவால் ஐந்து யானைகளான ஐம்புலன்களையும் அடக்கிக் காப்பவன், மேலான வீடு என்ற பேரின்ப நிலைக்கு விதை போன்றவன்.
நீத்தார் பெருமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
இப்போது இந்த அதிகாரத்தின் ஐந்தாவது குறள். அறத்துப்பாலின் 25வது குறள்.
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி”.
இதில்
“ஐந்தவித்தான் ஆற்றல்” இதன் பொருள்
ஐந்து புலன்களால் உண்டாகும் ஆசைகளை அடக்கியவனுடைய வல்லமைக்கு
“அகல்விளம்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி”.
இதன் பொருள்
வானுலகத்தின் தலைவனாகிய இந்திரனே சான்று.
ஐந்து புலன்களால் உண்டாகும் ஆசைகளை அடக்கியவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தின் தலைவனாகிய இந்திரனே சான்று.
நீத்தார் பெருமை அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது குறளுடைய பொருள் இது.
நீத்தார் பெருமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களோடு இந்த பகுதி முடிந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!