வணக்கம்! இந்த வாரத்திலிருந்து ஒரு புது பகுதி ஆரம்பிக்கப் போகிறோம். ஐந்து
திருக்குறள்களையும் அந்த குறள்களின் பொருள்களையும் சொல்லப் போகிறோம்.
திருக்குறளை இயற்றியது திருவள்ளுவர். இவர் தோராயமா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை இயற்றி இருக்கலாமென்று சொல்கிறார்கள்.
இந்த திருக்குறள் குறள் வெண்பா வகையைச் சேர்ந்தது. குறள் வெண்பாவி் இரண்டு அடிகள் இருக்கும். முதல் அடியில் நான்கு சீர்களும் அதாவது சொற்களும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் அதாவது மூன்று சொற்களும் இருக்கும். சங்க இலக்கிய வகையில் திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு என்று சொல்லக்கூடிய பதினெட்டு நூல்களின் திரட்டின் கீழ் வரும். மொத்தம் 1330 குறள்கள்
இருக்கிறது. 133 அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் வரும்.
கடவுள் வாழ்த்து
இப்போ முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இருந்து ஐந்து திருக்குறளையும் அந்தகுறள்களின் பொருளையும் பார்ப்போம்.
1.முதல் குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
“அகர முதல எழுத்தெல்லாம்”
எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்து அ.
“ஆதி பகவன் முதற்றே உலகு”
அதேபோல இந்த உலகத்துக்கு முதலாக இருப்பது கடவுள் அல்லது பகவான்.
எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்து அ. அதேபோல இந்த உலகத்திக்கு முதலாக இருப்பது கடவுள் அல்லது பகவான்.
நாமும் எந்த வேலை தொடங்கினாலும் கடவுள வணங்கிட்டுதான ஆரம்பிக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் முழுமுதலானவன் கடவுள். இந்த கடவுள் வாழ்த்து அதிகாரத்துல முதல் குறளின்nபொருள் இது.
2. இரண்டாவது குறள்:
கற்றதானா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
“வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்”
இந்த உலகத்தைப் படைத்த பேரறிவு பெற்ற அந்த இறைவனைத் தொழாமல் இருந்தால்
“கற்றதானா லாய பயனென்கொல்”
எவ்வளவு கற்றாலும் அதற்குப் பயனில்லை.
இந்த உலகத்தைப் படைத்த பேரறிவு பெற்ற அந்த இறைவனைத் தொழாமல் இருந்தால் எவ்வளவு கற்றாலும் அதற்குப் பயனில்லை. எவ்வளவு தான் படித்திருந்தாலும் இல்லை தெரிந்திருந்தாலும் அதைவிட நமக்கு தெரியாத சக்தி
ஒன்று இருக்கிறது. அதை நாம தொழாமல் இருந்தால் நம் அறிவுக்கும் படிப்பிற்கும் ஒரு பயனுமில்லை. இது இந்த இரண்டாவது குறளுடைய பொருள்.
3. மூன்றாவது குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்”
மனமாகிய மலரின் மேல் இருக்கும் கடவுளின் பாதங்களை எப்பொழுதும் இடைவிடாமல் நினைத்தால்
“நிலமிசை நீடு வாழ்வர்”
இந்த உலகத்தில் இன்பமாய் நீண்ட காலம் வாழலாம்.
மனமாகிய மலரின் மேல் இருக்கும்
கடவுளின் பாதங்களை எப்பொழுதும் இடைவிடாமல் நினைத்தால் இந்த உலகத்தில் இன்பமாய் நீண்ட காலம் வாழலாம்
கடவுளை முழுமையாக நம்பினால் துன்பங்களைக் கடந்து நீண்ட நாள் வாழமுடியும்
இது மூன்றாவது குறளின் பொருள்.
4. நான்காவது குறள்:
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு”
விருப்பு வெறுப்பு எதுவுமே இல்லாமல் எல்லாவற்றையும் ஒரே மாதிரி பார்ப்பவர்தான் கடவுள். அவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஏழை பணக்காரன் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க மாட்டார்.
“யாண்டும் இடும்பை இல”
அப்படிப்பட்ட கடவுளின் திருவடிகளை பற்றியவர்க்குத் துன்பம் என்பது ஒருபோதும் இல்லை.
விருப்பு வெறுப்பு எதுவுமே இல்லாமல் எல்லாவற்றையும் ஒரே மாதிரி பார்ப்பவர்தான் கடவுள். அப்படிப்பட்ட கடவுளின் திருவடிகளை பற்றியவர்க்குத் துன்பம் என்பது ஒருபோதும் இல்லை. உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் வித்தியாசமில்லாமல் பார்க்கும் கடவுளை பக்தியோடு நம்பினால் துன்பங்களை எளிதாகக் கடந்து போக முடியும்
இது நான்காவது குறளோட பொருள்.
5. ஐந்தாவது குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
“இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”
இறைவனின் புகழை உணர்ந்து அவரை வணங்கி அன்பு செலுத்துபவர்க்கு
“இருள்சேர் இருவினையும் சேரா”
அறியாமையால் வரும் நல்வினை தீவினை இரண்டும் அவர்களிடம் சேர்வதில்லை.
இறைவனின் புகழை உணர்ந்து அவரை வணங்கி அன்பு செலுத்துபவர்க்கு அறியாமையால் வரும் நல்வினை தீவினை இரண்டும் அவர்களிடம் சேர்வதில்லை.
நம் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் உண்டு. அதுல நல்வினை தீவினை இரண்டுமே இருக்கும். இறைவனை நினைத்துச் செய்யும்போது இந்த இரு வினைகளும் வந்து சேராது.
இது ஐந்தாவது குறளின் பொருள்.
இந்த ஐந்து குறள்களையும் கேட்டு பொருளையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு சுலபமா புரியுமென்று நினைக்கிறேன். கடவுள் வாழ்த்து அடுத்த ஐந்து குறள்களை அடுத்த தடவை பார்க்கலாம்.
நன்றி. வணக்கம்.