ஹிதோபதேசம்
இதற்கு முந்தைய பகுதியில் ஹிரண்யகர்பா தன் தோல்விக்கு அதன் தலைவிதிதான் காரணம் என்று சொன்னதை மந்திரி சர்வாங்யா ஒப்புக் கொள்ளவில்லை. காகம் மேகவர்ணாவை நம்ப வேண்டாம் என்று சொன்னதை நம்பாமல் புறக்கணித்ததால் வந்த தோல்வி என்றும் தலைவிதி காரணமல்லா என்றும் சுட்டிக் காட்டியது. அதற்கு உதாரணமாக முட்டாள் ஆமையின் கதையையும் சொன்னது. அந்த ஆமை மீனவர்களிடமிருந்து தப்பிக்க அந்த குளத்திலிருந்து வேறு இடத்திற்குப் போக அதன் நண்பர்களான வாத்துகளிடம் உதவி கேட்டது. அதற்குப் பின் என்ன நடந்தது என்று இந்த பகுதியில் பார்க்கலாம்.
முட்டாள் ஆமை-தொடர்ச்சி
“ஆமாம்! ஆமாம்! நீ சொல்வது கூட சரிதான். வேறு குளத்தில் நீ எந்த பயமும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். அது சரி நீ எப்படி இன்னொரு குளத்துக்குப் போகப்போகிறாய்” வாத்து கேட்டது.
“உங்களால் எனக்கு உதவமுடியுமா?” ஆமை பாவமாகக் கேட்டது.” நீங்கள் பறக்கும் போது என்னையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போக முடியுமா? அப்படிப் போனால் என்னால் சீக்கிரமாக வேறு குளத்துக்குப் போகவும் முடியும்”.
“உனக்கு உதவ எனக்கு ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் எப்படி உன்னை நாங்கள் பறக்கும்போது தூக்கிக்கொண்டு போகமுடியும்?” ஒரு வாத்து கேட்டது.
“எனக்கு ஒரு யோசனைதோன்றுகிறது. ஒரு நீளமான கம்பை நான் என் வாயால் கவ்விப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இரண்டுபேரும் தலா ஒரு முனையைக் கவ்விக் கொண்டு பறந்தால் நானும் உங்களுடன் பறக்க முடியும்’ ஆமை சொன்னது.
“ம்ம்” வாத்துக்கள் யோசனை செய்தன. “நீ சொன்ன மாதிரி செய்யலாம். முடியும் தான். ஆனால் அப்படிப் பறக்கும் போது வரும் ஆபத்துகளை எண்ணிப் பார்த்தாயா? எல்லாவற்றையும் யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். யோசிக்காமல் செய்தால் ஒரு கீரிப்பிள்ளையால் தாய் கொக்கின் கண்முன் குஞ்சுகளுக்கு நடந்ததுதான் நமக்கும் நடக்கும் வாத்து” எச்சரித்தது.
“ஐயோ! என்ன நடந்தது அந்த குஞ்சுகளுக்கு” ஆமை தலையைத் தூக்கிக்கொண்டு கேட்டது.
கீரிப்பிள்ளையும் கொக்குகளும்
பாரத தேசத்தின் வடக்கில் த்ரிதரகூடா என்ற மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் அடிவாரத்தில் ஐராவதி என்ற நதி ஓடியது. அந்த நதியின் கரையில் ஒரு பெரிய அத்தி மரம் இருந்தது. அந்த மரத்தில் நிறையக் கொக்குகள் இருந்தன.
ஆனால் அந்த கொக்குகளின் குஞ்சுகள் வளர்வதற்கு முன்பே மரத்தின் பொந்திலிருந்த ஒரு பாம்பு தின்று முடித்து விடும். தாய் கொக்குகள் இரை தேட பறந்து வெளியே போகும்போது பாம்பு ஊர்ந்து மரத்தின் மேலே போய் குஞ்சுகளைத் தின்றுவிட்டு திருப்தியாகப் பொந்தில் வந்து தூங்கிவிடும்.
இப்படி அடிக்கடி நடக்கவும் தாய் பறவைகளின் அழுகையைக் கேட்ட ஒரு வயதான கொக்குக்குத் தாங்க முடியவில்லை. “இப்படி அழுதுகொண்டே இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? எதையாவது செய்து குஞ்சுகளைக் காப்பாற்றக் கூடாதா?” அந்த வயதான கொக்கு கேட்க அங்கே இருந்த மீதி கொக்குகள் “என்ன செய்யமுடியும்” என்று திகைத்தன.
வயதான கொக்கு சொன்னது” நான் ஒரு யோசனை சொல்கிறேன் போய் கொஞ்சம் மீன்களை எடுத்துக்கொண்டு வாருங்கள். மரத்தைச் சுற்றிப் போட்டு விடுங்கள். அப்படியே அந்த பொந்துக்குள்ளும் போடுங்கள். அந்த மீன்களின் வாசத்தால் கீரிப்பிள்ளை அங்கே நிச்சயம் வரும். எப்படியும் கீரிப்பிள்ளை பாம்பைக் கொன்று விடும். உங்களுடைய எதிரியும் அழிந்துவிடும்”.
மற்ற கொக்குகள் அந்த வயதான கொக்கை மரியாதையோடு பார்த்தன.அவர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறதே!
அடுத்த தடவை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தவுடன் ஐராவதி நதியிலிருந்து மீன்களை எடுத்துக்கொண்டு மரத்தின் அடியிலும் பொந்துக்குள்ளும் போட்டன. மீன் வாசனையால் ஒரு கீரிப்பிள்ளை அந்த மரத்திற்கு வந்தது.பொந்துக்குள்ளும் போக இருந்தது.
ஆனால் நடந்தது வேறு. குஞ்சுகள் ஏதோ ஆபத்து வருகிறது என்று கீச்கீச் என்று கத்த ஆரம்பித்தன. குஞ்சுகள் சத்தம் போடாமல் இருந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது. குஞ்சுகளின் கீச்கீச்சால் கீரிப்பிள்ளைக்கு ஓர் எண்ணம் வந்தது.
“இந்த பாம்பைத்தின்று விடலாமா? இல்லை அந்த குஞ்சுகளைத் தின்று விடலாமா?” கொஞ்சம் குழப்பத்திலிருந்தது. முடிவில் மரத்தின் மேல் ஏறி குஞ்சுகளைத் தின்று முடித்தது. இதையெல்லாம் தாய் பறவைகளால் தடுக்க முடியவில்லை.
“அந்த வயதான கொக்கு பாம்பை அழிக்க ஒரு யோசனை சொன்னது. ஆனால் அதிலிருந்த ஆபத்தை எண்ணிப் பார்க்கவில்லை. ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றும் யோசிக்கவில்லை. அந்த வயதான கொக்கோ அல்லது மற்ற கொக்குகளோ இதைப் பற்றி யோசித்திருந்தால் அந்த குஞ்சுகளைக் காப்பாற்றி இருக்கலாம்”.
“அதனால் தான் நம் முன்னோர்கள் எந்த முடிவிலும் நன்மையை மட்டும் பார்க்கக்கூடாது. அதனால் வரும் தீமைகளையும், கவனிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்” விகடா நண்பனுக்கு அறிவுரை சொன்னது.
“இதோ பார்! நீ எங்களுடன் அந்த கம்பில் பறந்து வந்தால் கீழே இருக்கும் மனிதர்களுக்கு விசித்திரமாக இருக்கும். உன்னைக் கேலி செய்வார்கள். கல்லால் கூட உன்னை அடிக்கலாம். நீ மாத்திரம் பதில் சொல்ல வாய் திறந்தால் அவ்வளவு தான். நீ கீழே விழுந்து இறந்து விடுவாய். இதையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும்”.
உனக்கு உதவக் கூடாது என்று இதைச் சொல்லவில்லை. எது உனக்கு நல்லதோ அதைச் செய்வதுதான் எங்கள் எண்ணம். நீ இந்த குளத்திலேயே இருப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்” சங்கடா சொல்லி முடித்தது.
அதைக் கேட்டதும் ஆமைக்குக் கோபம் வந்தது. “ஓ! நான் ஒரு முட்டாளென்று நினைக்கிறீர்களோ? கம்பைக் கவ்விட்டு பறக்கும்போது வாயைத் திறந்தால் என்ன நடக்குமென்று எனக்குத் தெரியாதா” என்ன கோபத்தில் முகம் பெரிதாகியது.
“கோபப்படாதே! உன் நன்மைக்குத்தான் சொன்னோம். இரு நாங்கள் போய் கம்பைத் தேடி எடுத்து வருகிறோம்” வாத்துக்கள் ஆமையைச் சமாதானப்படுத்தியது.
பாவம்! வாத்துக்களுக்கு வேறு வழியில்லை. இரண்டு வாத்துக்களும் ஆமையைக் கம்பில் தூக்கிக்கொண்டு வேறு குளத்தைத் தேடி மெல்ல மேலே பறக்க ஆரம்பித்தன.
இரண்டு வாத்துக்கள் ஆமையைத் தூக்கிக்கொண்டு போவது எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் நம்ப முடியாமலும் இருந்தது. ஆமை கம்பை வாயால் கவ்விக் கொண்டு போவதை வேடிக்கை பார்த்தார்கள்.
கீழே இருந்து “அங்கே பார்! ஆமை ஒன்று கம்பைக் கவ்விக் கொண்டு பறக்கிறது. ஏய்! ஏய்!” என்று சத்தம்போட ஆரம்பித்தார்கள். பறவைகளின் இந்த சத்தம் காதில் விழுந்ததும் இன்னும் மேலே பறக்க ஆரம்பித்தார்கள்.
அங்கே இருந்த இடையர்கள் கேலி செய்து கொண்டே பறவைகளை பின் தொடர்ந்தார்கள். “இந்த பறக்கும் ஆமை கீழே விழுந்துவிட்டால் அதை வறுத்துத் தின்றுவிடலாம்”. அதில் ஒருவன் கிண்டலாகச் சொன்னான். “வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகலாம்” மற்றொருவன் சொன்னான்.
முதலில் ஆமை எதையும் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதை வறுத்துச் சாப்பிடவேண்டுமென்று சொன்னதை அதனால் தாங்கமுடியவில்லை. கம்பைக் கவ்விக்கொண்டிருந்ததை மறந்து “என்னையா திங்கப்போறீங்க? உங்களால் அது முடியாது. சாம்பல் தான் கிடைக்கும் உங்களுக்கு” ஆமை இப்படிச் சொல்லும்போதே மேலேயிருந்து தரையில் விழுந்து இறந்து போனது.
வாத்துக்களால் திகிலுடன் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. அங்கே இருந்த இடையர்களுக்குத்தான் நினைத்துப் போல் நடந்தது.
மந்திரி சர்வாங்யா ராஜாவைப் பாரத்து “நான் சொல்லும் அறிவுரையைப் புறக்கணித்தால் உங்களுக்குத்தான் நஷ்டம் என்று எச்சரித்தேனே? அதுபோல் தான் ஆமைக்கும் நடந்தது” சொன்னது
ஹிரண்யகர்பா சோகத்துடன் தலை அசைத்தது. “ஆமாம்! நீ சொல்வது உண்மைதான். நான் தான் இந்த தோல்விக்குக் காரணம்” என்றது.
அப்போது “மகாராஜா!” என்ற குரல் வாயிலிலிருந்து கேட்டது. எல்லாரும் குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தார்கள். அங்கே அவர்களின் ஒற்றன் கொக்கு நின்று கொண்டிருந்தது.
“கோட்டைக்குள்ளிருந்து எல்லாரையும் வெளியில் வரச்சொல்லியிருந்தால் நமக்கு இந்த நிலை வந்திருக்காது. அந்த காகம் மேகவர்ணாதான் கோட்டைக்கு நெருப்பு வைத்தது. அந்த காகம் எதிரி மந்திரியின் ஒற்றன். உங்களை ஏமாற்றி உங்களுடனேயே இருந்திருக்கிறது” கொக்கு சொன்னது. “அந்த காகத்தை நம்பியது என்னுடைய தவறுதான். அதற்கு நான் நன்றாக அனுபவித்து விட்டேன்” ஹிரண்யகர்பா பெருமூச்சுவிட்டது.
“அந்த மயில் ராஜா அந்த காகத்திற்குப் பெரிய வரவேற்பைக் கொடுத்ததை என் கண்களால் பார்த்தேன். அதுமட்டுமில்லாமல் உங்கள் நாடான கற்பூரத்தீவிற்கு அதை அரசனாக்க விரும்பியது. ஆனால் மந்திரி கழுகு அதைத் தடுத்து விட்டது”.
“கழுகு மயில் ராஜாவைப் பாரத்து” மன்னா இந்த! காகத்திற்கு வேறு ஏதாவது பரிசாகக் கொடுங்கள். இந்த காகம் போல் இழிவானவர்களை மன்னனாக்குவது பெரிய ஆபத்தில் முடியும். ஒரு முனிவர் ஒரு எலியின் மேல் பரிதாபப்பட்டு அதைப் புலியாக மாற்றினார். அந்த புலியாக மாறிய எலியோ அவரைக் கொல்ல துணிந்தது. அந்த நிலைமைதான் உங்களுக்கும் இதனால் வரும் மந்திரி சொன்ன இந்த வார்த்தைகளிலிருந்த எச்சரிக்கை சித்ரவர்ணாவிற்குப் புரிந்தது. மயில் ராஜா கழுகைப் பார்த்து நீ சொல்ல வந்தது எதைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டது”.
இதோடு இந்த பகுதி முடிந்தது. அடுத்த பகுதியில் புலியாக மாறிய எலியால் அந்த முனிவருக்கு எப்படி ஆபத்து வந்தது என்று பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!