ஷாலிவாகனனின் மண் வீரர்கள்-பகுதி-1 (Shalivahana’s Terracotta Army)

Posted on:

வணக்கம். விக்ரமாதித்யன் வேதாளம் கதைகளை எங்களுடைய podcastல் இதற்கு முன்னாடி நீங்கள்  கேட்டிருப்பீர்கள்.

அந்த விக்ரமாதித்யன் வீரத்திலும் அறிவிலும் சிறந்தவனாக இருந்தாலும் அவனுக்கும் அழிவு வரும் இல்லையா! ஷாலிவாகனன்னு ஒரு வீரன் கிட்ட தோத்துப்போறான். அந்த ஷாலிவாகனன் யார், எப்படி அவன் கிட்ட விக்ரமாதித்யன் தோத்துப்போறான்னுதான் இப்போ சொல்லப்போகிற கதையில் கேக்கபோறீங்க!

கோதாவரி நதிக்கரையில் உள்ள ஓர் ஊரில் கௌதமி என்ற பெண்ணிற்கு ஷதகர்ணி என்ற ஒரு பையன் இருந்தான். அவர்கள் இரண்டுபேரையும் கௌதமியின சகோதரர்கள் ஊரைவிட்டு துரத்திட்டாங்க. கணவன் இறந்த பிறகு சின்னப் பையனின் கேள்விகளுக்குப் பொறுமையா பதில் சொல்லிக்கொண்டே ஒரு சிறு துணி மூட்டையோடு விதி விட்ட வழியென்று இரண்டுபேரும் நடக்க ஆரம்பித்தார்கள். இப்படியே நடந்து நடந்து விந்தியமலைக்குப் பக்கத்தில் உள்ள ப்ரதிஷ்தானா என்ற நாட்டின் எல்லைப்புற கிராமத்துக்கு வந்து சேந்தாங்க. அங்க குயவர் ஒருவர் மண்பானைகளைத் தயார் பண்ணிட்டிருந்தாரு. அதைப் பார்த்து வியந்த ஷதகர்ணி அவரிடம் போய்” தாத்தா இந்தக் கலைய எனக்கும் சொல்லித்தர முடியுமா” என்று கேட்டான். அந்த குயவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. “அப்பா எனக்கு வயசாயிடுச்சு. முன்பு மாதிரி என்னுடைய விரல்கள் வேலை செய்ய மாட்டேங்குது. உனக்குச் சொல்லிக் கொடுத்தா நீ எனக்குப் பதிலா இந்த மண்பாண்டங்களைத் தயார்செய்ய உதவியா இருக்குமென்று” திருப்தியா சொன்னார்.

அதற்குள் கௌதமி “தாத்தாவுக்குத் தொந்தரவு கொடுக்காமல் வா. நாம இன்னும் தூரம் நடக்கனும்னு” கூப்டாங்க. அந்த குயவருக்கு ஷதகர்ணிய அனுப்ப மனமில்லை. அன்போடு கௌதமியையும் ஷதகர்ணியையும் அவரோடயே தங்கச் சொன்னார். கௌதமி முகத்திலிருந்த கவலையையும் களைப்பையும் பார்த்து காரணம் கேட்டார். அவருடைய ஆறுதலான பேச்சைப் பார்த்து கௌதமி கண்ணீரோடு தன் கதையை சொன்னாங்க. அந்த வயதான குயவரும் தனியாகத்தான் குடிசையில் இருந்தார். மூன்றுபேரும் அந்த குடிசையில் தங்கி இருந்தார். மூன்றுபேரும் அந்த குடிசையில் தங்கி ஒருத்தருக்கொருத்தர் உதவ ஆரம்பித்தார்கள். ஷதகர்ணி மண் பிசையவும், பானைகளைப் பிசையவும் கற்றுக்கொண்டான். அடுத்ததா மண்பாண்டங்கள் செய்யவும் கற்றுக்கொண்டான். இப்படியே மாதங்களும் ஓடிடிச்சு.

ஒரு நாள் ஒரு சந்நியாசி வெய்யிலில் களைத்துப் போய் அங்க வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டார். ஷதகர்ணி தண்ணீர் கொண்டுவர உள்ள போகும்போது சந்நியாசியும் குயவரும் ப்ரதிஷ்தானாவோட நிலவரத்தைப் பத்தியும், அங்க அட்டகாசம் செய்யும் கொள்ளைக்கூட்டத்தப் பத்தியும் பேசிட்டிருந்தாங்க. தண்ணீர் கொண்டு வந்த ஷதகர்ணி “தாகம் தீர்த்துக்கொள்ளுங்கள் புனிதரேனு” ரொம்ப அடக்கமா சொன்னான். அந்த சந்நியாசி அவனைத் தீர்க்கமா பாத்தாரு. “என்னை ஏன் அப்படி பார்க்கிறீங்கனு” ஷதகர்ணியும் ஆச்சரியமா கேட்டான். “மகனே ஒரு நாள் நீ பெரிய அரசனாவாய். அந்த நாள் ப்ரதிஷ்தானாவிற்று புனிதமாகவும் நல்ல நாளாகவும் மாறும்” என்று எதிர்காலத்தில் நடக்கப்போறத அவனுக்கு சொன்னார். அவர் சொன்னதைக் கேட்ட அந்த வயதான குயவருக்கு சிரிப்புதான்  வந்துச்சு. இந்த கிழ குயவனிடம் கற்றுக்கொள்ளும் ஆதரவற்ற விதவையின் மகன் அரசனாகமுடியுமா ஏளனமா அவருக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டாரு. ஆனால் கௌதமி தாயில்லையா. அந்த சந்நியாசியின் வார்த்தைகள் அவளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. கௌதமி அந்த சந்நியாசி சொன்னதை ஒரு வரமாகவே நினைச்சாங்க .ஆனால் அந்த சந்நியாசியின் வார்த்தைகளை ஷதகர்ணி தீவிரமா நம்பினான். “நான் அரசனாகும் போது எனக்கு யானைப்படை, குதிரைப்படை, சேனை வீரர்கள் வேணுமேனு” சிந்திக்க ஆரம்பித்தான் .மண்ணில் படை உருவங்களைச் செய்து காயவைத்து குச்சி, கம்பு இலைகள் எரித்துச் சுட்டு எடுத்தான். எவ்வளவு நேர்த்தியாக செஞ்சிருக்கான்னு அந்த குயவருக்கு ஒரே பெருமிதம். சுட்டெடுத்த அந்த மண் சேனைகளை குடிசைக்குப் பின்னால் உள்ள கிணற்றில் போட்டான். இந்த மாதிரி நிறைய தடவை செய்தான். இதப் பார்த்த குயவருக்கு ஒரே குழப்பம். “இந்த சேனை பொம்மைகளை வைத்து விளையாடாமல் ஏன் கொண்டுபோய் கிணத்துல்ல போடறேனு” அந்த குயவர் ஆச்சரியமா கேட்டார். அதற்கு ஷதகர்ணி “தாத்தா இவைகள் வெறும் பொம்மைகள் அல்ல. என்னுடைய போர் வீரர்கள். யானை அம்பாரி குதிரைப்படைகள்,ரதங்கள் இதெல்லாம் நான் அரசனாகும் போது தேவைப்படுமே. அதனால்தான் கிணத்துல பத்திரப்படுத்தி வைக்கிறேன்”. அவன் சொன்னதைக் கேட்டு அந்த பையனின் அறியாமை, சந்நியாசியின் வார்த்தைகள் உண்மை என்ற நம்பிக்கை, அவனுடைய உழைப்பு இதையெல்லாம் பார்த்த அந்த குயவர் சந்நியாசியின் வார்த்தைகளை நம்ப வேண்டாமென்று சொல்லி அவனைப் புண்படுத்த விரும்பவில்லை. இப்படியே பல ஆண்டுகளும் போயிடுச்சு.

ஷதகர்ணியும் வாலிபனான். குயவருக்கு ரொம்ப உதவியா இருந்தான் . அவரே போதும்பா நிறுத்தென்று சொல்லும் வரை வேலை செய்தான். ஒரு நாள் அந்த குயவர் நீ போய் உன் நண்பர்களோடு விளையாடி விட்டு வானு அவனை அனுப்பி வைத்தார்.  அவனும் நண்பர்களோடு காட்டில் உள்ள மரங்களில் ஏறி விளையாட ஆரம்பித்தான். ஷதகர்ணியும் அவனுக்குப் பிடித்த ஷாலிங்கற மரத்தில் ஏறி உட்கார்ந்து “நான் தான் அரசன். இந்த மரம்தான் என்னுடைய வாகனமென்று” ஒரு ராஜதோரனையோட சொன்னான். அவனுடைய நண்பர்களும் “ஷாலி மரக்கிளை வாகனம், மகாஷாலிவாகனா, ஷாலிவாகன மகாராஜா வாழ்க” இப்படி கோஷம் போட ஆரம்பித்தார்கள்.” நீ பிறந்ததே இந்த ப்ரிதிஷ்தானா கொள்ளையர்களை அழிக்கத்தான். நாங்கள் உனக்கு உதவுவோம்” இப்படி அவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்கள்.” நான் பெரியவனாகி இந்த கொள்ளையர்களை அழிப்பேனென்று” சவாலா சொன்னான். ஷதகர்ணிய தோள்மேல் உக்கார வைத்து “ஷாலிவாகன மகாராஜா ஊரில் எல்லாம் சரியா நடக்கிறதா என்று பார்க்க விஜயம் செய்கிறார்” என்று உற்சாகமாகக் கூறிக்கொண்டே ஊர்வலமா வந்தார்கள். அதைக் கேட்ட குயவர்” ஷாலிவாகனனா பெயர் ரொம்ப நல்லாயிருக்கனு” மனசுக்குள்ள சொல்லிக்கிட்டாரு.

இனிமே ஷதகர்ணிய ஷாலிவாகனானு கூப்பிடுவோமா. இப்படி ஒரு நாள் நண்பர்களோடு அந்த ஊரில் மாலை நேரத்தில் சுத்தி வந்து கொண்டிருக்கும்போது ஒரு மரத்தடியில் சிலர் முக்காடு போட்டுவிட்டுப் பேசிக்கொண்டிருந்ததை ஷாலிவாகனன் கவனித்தான். நண்பர்களை எச்சரித்து அவர்கள் பேசும்போது அவர்களுடைய திட்டம் என்ன என்று ரகசியமா கேட்டான். “இன்று ராத்திரி வியாபாரி சுவர்ணாவின் வண்டி சாமான்களுடன்  இந்த வழியாகத்தான் வருகிறது. அந்த குழுவை நாம தாக்கி கொள்ளை அடிக்கிறோம் “அந்த கொள்ளையர் தலைவன் திட்டத்தை சொன்னான். உடனே ஷாலிவாகனனும் தோழர்களும் மரக்கிளைகளில் சரியான சமயத்திற்காக பதுங்கி இருந்தார்கள்.

கொள்ளையர்கள் வியாபாரிகளைச் சுத்தி வளைக்கும்போது ஷாலிவாகனனும் அவனுடைய நண்பர்களும் மரக்கிளைகளிலிருந்து குதித்து கம்புகளால் கடுமையா அந்த கொள்ளையர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். இந்த திடீர் தாக்குதலை அந்த கொள்ளையர்கள் எதிர் பார்க்கவில்லை. மிரண்டு அங்க இருந்து தப்பி ஓடிட்டாங்க.  அந்த கொள்ளையர்கள் ஷாலிவாகனனுக்கு ஒரு பாடம் புகட்டனும்னு ஒரு திட்டம் தீட்டினார்கள். அந்த திட்டத்தின் படியே ஷாலிவாகனனைக் கொல்ல வந்தார்கள். ஆனால் ஷாலிவகனின் தைரியம், பலம், தோழர்களின் ஒத்துழைப்பு இதனால் எல்லாம் கொள்ளையர்களால் ஷாலிவாகனனைக் கொல்ல முடியவில்லை. இதற்கப்புறம் ஷாலிவாகனனும் அவனுடைய தோழர்களும் ஆயுதங்களோடு அந்த வழியத் தொடர்ச்சியா கண்காணிக்க ஆரம்பித்தார்கள். இதனால் ப்ரதிஷ்தானால அமைதி திரும்பியது. வழிப்பறியும் இல்லை. வியாபாரிகள் மகிழ்ந்து நன்றியா குதிரை போர்வாள் இப்படி பரிசுகளைக் கொடுத்தார்கள்.

கொள்ளையர்கள் எப்படியாவது ஷாலிவாகனனை தடுக்கனும்னு யோசனை பண்ணாங்க. வியாபாரிகள் மாதிரி வேஷம் போட்டுட்டு ப்ரதிஷ்தானாவின் அரசனான நாகபானாகிட்ட நேரா போய் “அரசே ஷாலிவாகனன் என்ற குயவன் இந்த நாட்டு மக்களுக்குத் தொல்லைகள் கொடுப்பது மட்டும் இல்லாமல் தங்களையும் அரச பதவியில் இருந்து நீக்க முயல்கிறான்” இப்படிப் பொய் சொல்ல அரசனுக்கு வந்ததே கோபம்.

இந்த கதையின் முதல் பகுதி இதோடு முடிந்தது.

இதற்கப்புறம் என்ன நடந்தது, ஷாலிவாகனன் எப்படி விக்ரமாதித்யனை தோற்கடிக்கறானு  அடுத்த பகுதியில் பார்க்கலாம். கட்டாயம் வந்து கேளுங்கள்.

நன்றி! வணக்கம்!

 

 

ஷாலிவாகனனின் மண் வீரர்கள்-பகுதி-1 (Shalivahana’s Terracotta Army)
Speaker: Nila

Share with Friends

You may find these interesting
aran5
Thirukkural-திருக்குறள்-அறன் வலியுறுத்தல் 1-5
neethat6-103
Thirukkural-திருக்குறள்-நீத்தார் பெருமை 6-10
Indian Fairy Tales
Masala Fairy Tales: Sleeping Beauty, Part 3
myth of the wild gaur cover6
Book Preview-The Myth of the Wild Gaur
Sponsored Content

Subscribe now to get notified about exclusive offers from The Issue every week!