இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 36வது அதிகாரமான மெய்யுணர்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். மெய் என்ற சொல்லுக்கு உண்மை ,உடல் என்று பொருள் சொல்லலாம்.இந்த உலகில் நம் பிறப்பிற்கும், முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்.
மெய்யுணர்தல் – 1
- முதல் குறள்.
“பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு”.
இதில்
‘பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம்’
இதன் பொருள்
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்கத்தினால்.
அடுத்து
‘மாணாப் பிறப்பு’
இதன் பொருள்
இன்பம் இல்லாத பிறவி உண்டாகும்.
அதாவது
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்கத்தினால், இன்பம் இல்லாத பிறவி உண்டாகும்.
மெய்யுணர்தல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு“.
இதில்
‘இருள்நீங்கி இன்பம் பயக்கும்’
இதன் பொருள்
அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி பேரின்ப நிலையைக் கொடுக்கும்.
அடுத்து
‘மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு‘
இதன் பொருள்
அஞ்ஞானமாகிய மயக்கத்திலிருந்து விடுபட்டு மெய் உணர்ந்தவர்களுக்கு.
அதாவது
அஞ்ஞானமாகிய மயக்கத்திலிருந்து விடுபட்டு மெய் உணர்ந்தவர்களுக்கு, அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி பேரின்ப நிலையைக் கொடுக்கும்.
மெய்யுணர்தல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து“.
இதில்
‘ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு’
இதன் பொருள்
ஐயங்களிலிருந்து நீங்கி மெய் உணர்ந்தவர்களுக்கு.
அடுத்து
‘வையத்தின் வானம் நணிய துடைத்து‘
இதன் பொருள்
அடைய வேண்டிய மேலுலகம் அடைந்துள்ள இந்த உலகத்தை விட அருகில் உள்ளதாகும்.
அதாவது
ஐயங்களிலிருந்து நீங்கி மெய் உணர்ந்தவர்களுக்கு, அடைய வேண்டிய மேலுலகம் அடைந்துள்ள இந்த உலகத்தை விட அருகில் உள்ளதாகும்.
மெய்யுணர்தல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு“.
இதில்
‘ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே‘
இதன் பொருள்
ஐம்புலன்களை அடக்கி உணர்வுகளை வென்றாலும் பயன் இல்லை.
அடுத்து
‘மெய்யுணர்வு இல்லா தவர்க்கு’
இதன் பொருள்
மெய்யுணர்தல் இல்லாதவர்களுக்கு.
அதாவது
மெய்யுணர்தல் இல்லாதவர்களுக்கு ஐம்புலன்களை அடக்கி உணர்வுகளை வென்றாலும் பயன் இல்லை.
மெய்யுணர்தல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”.
இதில்
‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும்‘
இதன் பொருள்
எந்த ஒரு பொருளும் எத்தகையதாகத் தோன்றினாலும் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் காணாமல்.
அடுத்து
‘அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’
இதன் பொருள்
அப்பொருளின் உண்மைத் தன்மையை அறிவதே மெய்யுணர்வாகும்.
அதாவது
எந்த ஒரு பொருளும் எத்தகையதாகத் தோன்றினாலும், அதன் வெளித்தோற்றத்தை மட்டும் காணாமல் அப்பொருளின் உண்மைத் தன்மையை அறிவதே மெய்யுணர்வாகும்.
மெய்யுணர்தல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. மெய்யுணர்வு அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!