திருக்குறளின் துறவு அதிகாரத்திலிருந்து ஆறு முதல் 10 வரை உள்ள குறள்களைப் பொருளோடு இந்த பகுதியில் பார்ப்போம். வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும் சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
துறவு 2
- ஆறாவது குறள்.
“யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”.
இதில்
‘யான்எனது என்னும் செருக்கறுப்பான்‘
இதன் பொருள்
தன் உடம்பை நான் என்றும் தொடர்பு இல்லாத பொருள்களை எனது என்றும் நினைக்கின்ற மயக்கத்தைப் போக்கியவன்.
அடுத்து
‘வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்’
இதன் பொருள்
தேவர்களுக்கும் மேலான உலகத்தை அடைவான்.
அதாவது
தன் உடம்பை நான் என்றும், தொடர்பு இல்லாத பொருள்களை எனது என்றும் நினைக்கின்ற மயக்கத்தைப் போக்கியவன், தேவர்களுக்கும் மேலான உலகத்தை அடைவான்.
துறவு அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு“.
இதில்
‘பற்றி விடாஅ இடும்பைகள்‘
இதன் பொருள்
பிறவித் துன்பங்கள் விடாமல் பற்றிக்கொள்ளும்.
அடுத்து
‘பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு‘
இதன் பொருள்
யான், எனது என்ற இருவகைப் பற்றினையும் இறுகப் பற்றிக்கொண்டு விடாதவனை.
அதாவது
யான், எனது என்ற இருவகைப் பற்றினையும் இறுகப் பற்றிக்கொண்டு விடாதவனைப் பிறவித் துன்பங்கள் விடாமல் பற்றிக்கொள்ளும்.
துறவு அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்“.
இதில்
‘தலைப்பட்டார் தீரத் துறந்தார்’
இதன் பொருள்
முற்றும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள்.
அடுத்து
‘மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்‘
இதன் பொருள்
அப்படி துறவாதவர்கள் மயங்கி பிறவி வலையில் அகப்பட்டவர்களே.
அதாவது
முற்றும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அப்படி துறவாதவர்கள் மயங்கி பிறவி வலையில் அகப்பட்டவர்களே.
துறவு அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்”.
இதில்
‘பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்’
இதன் பொருள்
இருவகைப் பற்றையும் துறந்து விடுவதே பிறப்பை அறுக்கும்.
அடுத்து
‘மற்று நிலையாமை காணப் படும்‘
இதன் பொருள்
அப்படி பற்றைத் துறக்காமல் இருப்பதால் பிறப்பு இறப்பு என்ற நிலையாமைத் தொடரும்.
அதாவது
இருவகைப் பற்றையும் துறந்து விடுவதே பிறப்பை அறுக்கும். அப்படி பற்றைத் துறக்காமல் இருப்பதால் பிறப்பு இறப்பு என்ற நிலையாமைத் தொடரும்.
துறவு அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”.
இதில்
‘பற்றுக பற்றற்றான் பற்றினை‘
இதன் பொருள்
பற்று இல்லாத இறைவனின் பற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும்.
அடுத்து
‘அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு‘
இதன் பொருள்
நம்மிடம் உள்ள பற்றுகளைத் துறப்பதற்கே அந்த பற்றைப் பற்ற வேண்டும்.
அதாவது
பற்று இல்லாத இறைவனின் பற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள பற்றுகளைத் துறப்பதற்கே அந்த பற்றைப் எபெற பெற வ பற்ற வேண்டும்.
துறவு அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது. இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் நாம் பார்க்கப் போகும் அதிகாரம் மெய்யுணர்தல்.
நன்றி! வணக்கம்!