சிறுகதைகள்:மாயகுதிரை-கட்டைக்கூத்து Tamil

வணக்கம் தெருக்கூத்து தெரியுமா உங்களுக்கு? நாம இன்னைக்கு பார்க்க போறது, அந்த தெருக்கூத்துல கட்டைக்கூத்து என்கிற ஒரு கூத்து.

தரன், சாமா, ஜோதி மூன்று பேரும் மாயகுதிரை என்ற கட்டைக்கூத்த பார்த்துவிட்டு வந்த பின்பு என்ன செய்றாங்க, என்ன தெரிஞ்சுக்கிறாங்கன்னு பார்க்கலாமா?

தரன், சாமா, ஜோதி மூனு பேரையும் சரஸ்வதி பாட்டி ஒரு வாரம் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி இருந்தாங்க. திரும்பி வரும்போது ரொம்ப களைப்பா வந்தாங்க. சாப்பிட்டதும் படுத்து தூங்கிட்டாங்க. அப்படி தூங்கப்போன தரன் தூக்கத்துல “கடாக், கடாக், மொடாக், மொடாக்” அப்படின்னு பேச ஆரம்பிச்சான் . “ஆமை ,ஆமை, குரங்கு, பூதம்” இப்படி எல்லாம் ஜோதியும் சாமாவும் புலம்ப ஆரம்பிச்சாங்க. ஆனா சித்தியும் சரஸ்வதி பாட்டியும் அவங்கள எழுப்பாமல் அப்படியே தூங்க விட்டுட்டாங்க. அடுத்த நாள் காலையில பாத்தீங்கன்னா, தரன் நாடகப் பாணில வித்தியாசமா நடக்க ஆரம்பிச்சான். ஜோதியும், சாமாவும் அவங்க நின்ன இடத்திலேயே பறக்கிற மாதிரி செய்ய ஆரம்பிச்சாங்க. அவங்க பண்றது எல்லாம் வித்தியாசமா இருந்ததால சித்தி,
சரஸ்வதி பாட்டிய கூட்டிட்டு வந்து காமிச்சாங்க. “அப்படி என்ன பார்த்துட்டு வந்தீங்க” சரஸ்வதி பாட்டி மூனு பேரையும் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. “நாங்களா? ஒரு நாடகம் பார்த்தோம். கட்டாக், முட்டாக் , குரங்கு, ஆமை, மருத்துவர், பூதம், காமினி எல்லாரும் வந்தாங்க. எல்லாரும் பாட்டும் பாடினாங்க. நிறைய வசனங்கள் பேசினாங்க. பூதம் போட்டுட்டு இருந்த ஆடை பளபளப்பா பெருசா இருந்துச்சு. நல்லாவும் இருந்துச்சு. ஆனா என்ன பேசினாங்க என்று தான் புரியவில்லை எங்களுக்கு. அந்த நாடகத்தோட பேரு மாயகுதிரை. நேரம் போனதே தெரியல எங்களுக்கு. அந்தக்கூத்த எங்களுக்கும் சொல்லி கொடுத்தா நாங்களும் செய்வோம்”. சாமா சொன்னத கேட்டு பாட்டி
பெருசா சிரிச்சாங்க. “என் முத்து ரத்தினங்களே! மாயகுதிரை கட்டைக்கூத்த பார்த்துட்டு வந்தீங்களா. நானும் பார்த்திருக்கேன். சொல்றேன் எல்லாரும் கேளுங்க”. சரஸ்வதிபாட்டி  சொல்ல எல்லாரும் பாட்டிய சுத்தி ஒக்காந்துட்டாங்க. வேலை செய்றவங்களும் கூட வந்துட்டாங்க.

“கட்டைக்கூத்து மிகச் சிறந்த இசை மற்றும் வசனத்துடன் கூடிய கலை வடிவம். இப்ப கூட காஞ்சிபுரத்தில் சுத்தி இருக்கிற ஊர்களில் இந்த கூத்த நாம பாக்கலாம். மகாபூதம், குரங்கு, கட்டியங்காரன் இந்த பாத்திரங்கள் எல்லாம் எல்லா கூத்திலும் கட்டாயம் வருவாங்க. கட்டையில் சின்ன சின்ன கண்ணாடிகளை பதித்து புஜம், கிரீடத்துக்கு அணிகலன்கள் செய்து மகாபூதத்துக்கு போட்டு விடுவாங்க. இதெல்லாம் போட்டுட்டு அந்த மகாபூதம் மேடையில் அழுத்தமான நடையோடு மிடுக்கா உள்ள நுழையும். இந்த மாயகுதிரைக் கட்டைக்கூத்த எழுதியது நடிகரும் இயக்குநருமான ராஜகோபால் என்பவர். இந்த மாயகுதிரை கட்டைக்கூத்த தமிழ்ப் பாட்டுகளோடும், ஆங்கில வசனங்களுடனும் யுகேல நடத்தி காமிச்சாரு. அது எப்படியென்று உங்களுக்கு வியப்பா கூட இருக்கலாம். இந்த மாயகுதிரைக் கதை எளிமையான கதை. நல்ல அர்த்தமுள்ளதும் கூட.

தாண்டவராயன், மண்டோதரி இரண்டுபேரும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பசங்க. ஒரு நாள் ரெண்டு வெளி உலக வாசிகளை பார்க்கிறாங்க. இந்த வெளி உலக வாசிகள் கட்டாக், கட்டாக், முட்டாக்,முட்டாக்னு சத்தம் போட்டுட்டே பறக்கிற மாதிரி சைகை செய்யறாங்க. “அவங்க பேரு அதுதானோ என்னவோ. அவங்களோட இடத்துக்கு திரும்பி போக முடியவில்லையோ என்னவோ. நாம தான் அவங்களுக்கு உதவி செய்யணும்”. மண்டோதரி தாண்டவராயன பார்த்து சொன்னாள். “அவங்க பேசறது ஒண்ணுமே புரியவில்லை. ஒருவேளை ஆதிக்கு புரியுமோ என்னவோ? வா போய் ஆதிய
கூட்டிட்டு வரலாம்” தாண்டவராயன் மண்டோதரியை கூப்பிட்டான். “ஆதி, ஆதி நாங்க இரண்டு உருவங்களைப் பார்த்தோமா? அவங்க மனுசனாகவும் தெரியவில்லை, மிருகமாகவும் தெரியவில்லை. அவங்க பேசுகிறதும் புரியல. அதனால தான் உன்ன பாக்க கூட்டிட்டு வந்தோம்” தாண்டவராயன் ஆதி கிட்ட சொன்னான். ஆதி ஒரு குரங்கு. “வந்த விதம் சொல்லுங்கள்”அப்படின்னு பாட ஆரம்பித்தது. அவர்களும் “தட்டான், தட்டான் டுட்டான், டுட்டான்னு” சத்தம் போட்டுட்டு பறக்கற மாதிரி காட்டினாங்க. ஆனால் பறக்க முடியவில்லை. ஆதி அவர்களுக்குஇன்னும் பலம் தேவை போல இருக்கு அப்படின்னு நினைச்சது. ஆதி சொன்னது “வாங்க நாம போயி மேல் லோகத்தில் இருக்கிற என் நண்பன் பரந்தாமனைப் பார்க்கலாம்” அப்படியென்று.
மண்டோதரி “யார் அந்தப் பரந்தாமன்”னு ஆதிய பாத்து கேட்டா. மூன்று பேரும் பரந்தாமன்என்கிற ஆமையப் பார்த்து உதவி கேட்க வந்தாங்க.

ஆமை மந்தார மலையை முதுகில் தாங்கி பார்கடலை கடைய உதவி செஞ்சதால அது மிகவும் பலசாலியென்று ஆதி நினைச்சது. அப்ப அங்க கட்டாக், முட்டாக்கும் வந்தார்கள். “இவங்க மேலுலகம் பறக்கச் சக்தி தேவை. சக்தி வேண்டுமானால் சக்தி வாய்ந்த மஹாபூதம் ஒன்னு இருக்கு. அது கிட்டத் தான் கேட்டு பாக்கணும்.
உங்களுக்குத் தேவையான சக்தி அது கிட்ட இருந்து கிடைக்கும்”. பரந்தாமன் இந்த மூன்று பேரையும் மகாபூதத்துக்கிட்ட போகச் சொன்னது. ஆதி, மண்டோதரி, தாண்டவராயன் கட்டாக், முட்டாக் இந்த அஞ்சு பேரும் மகாபூதத்தை பார்க்க நடக்க ஆரம்பிச்சாங்க. பரந்தாமன் ஆமையாயிற்றே, மெதுவா தான நடக்க முடியும். மெதுவா அவர்கள் பின்னாடி நடந்து வந்தது.

மகாபூதம் அதோட பலத்தையும் வீரத்தையும் தனக்குத்தானே பெருமையா சொல்லிட்டு
இருந்துச்சு. அங்க வந்த அந்த அஞ்சு பேரையும் பார்த்து “உங்களுக்கு எவ்வளவு தைரியம்
இருந்தால் என் எதிர வந்து பேசுவீங்க? என்ன செய்கிறேன் பாருங்க?” கோபமா பேச
ஆரம்பித்தது. தாண்டவராயன் நடுங்கி கொண்டே “இவன் என் நண்பன் ஆதி. அதோ அங்க இருப்பவங்க நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்காங்க. அவங்க பறக்க முயற்சிக்கிறாங்க. அவர்களுடைய சக்தி போயிடுச்சா, உங்க மாயசக்தியால அவர்களைப் பறக்க வைக்கணும்”சொன்னான். அவ்வளவுதான் மகாபூதத்தின் குரலில் கோபம் இன்னும் அதிகமாயிடுச்சு. சரஸ்வதி பாட்டி மகா பூதம் நடக்கிற மாதிரியே “தாம் தூம்”னு நடந்து காமிச்சாங்க. “ஹாஹா! எங்கிட்ட இருக்கிற மாய சக்தியைக் கத்துகிற அளவுக்கு இந்த உலகத்தில் யார் வல்லவன்? அவங்களுக்கு மொழி தெரியாது. நான் சொல்கிறது ஒன்றும் புரியாது” அப்படியென்று சத்தமா பாடிட்டே அவங்கள பிடிக்க துரத்தியது. அவ்வளவுதான் கண்ணை மூடி கண்ணை திறக்கிறதுக்குள்ள எல்லாரும் ஓடி அங்க இருந்து தப்பிச்சுட்டாங்க. மூச்சு இரைக்க ஓடி வந்ததால் எல்லாரும் களைத்து போயிட்டாங்க. ஆனாலும் அந்த இரண்டு பேருக்கும் எப்படியாவது உதவ வேண்டுமென்று அவங்கள ஒரு மருத்தவரிடம் கூட்டிட்டு போனாங்க.

அந்த மருத்துவர் அசைமணி எல்லாரையும் பார்த்துட்டு “தாராளமா உள்ள வாங்க. யாருக்கு உடம்பு சரியில்ல?” அப்படியென்று கேட்டாங்க. மண்டோதரி “அம்மா நாங்க எல்லாம் நல்லா தான் இருக்கோம். இந்த இரண்டு பேரும் ஊருக்கு புதுசா. அவங்களுக்கு சக்தி வேண்டுமாம். சக்தி மாத்திரை ஏதாவது இருந்தால் கொடுத்து உதவுங்கள்” ஆசைமணி கிட்ட சொன்னா. கட்டாக் கிட்ட இருந்து கட்டாக், கட்டாக், முட்டாக் கிட்ட இருந்து முட்டாக்,முட்டாக்னும் சத்தம் வந்துச்சு. “இவங்க பேசுறது ஒன்றுமே புரியல. அதனால என்ன, நமக்கு வர்றது வரட்டும். ஏதாவது கொடுப்போம்” அப்படின்னு யோசிச்சாங்க. அதுக்குள்ள ஆதி அங்கே இருந்த ரோஸ் கலர் மருந்து ஒன்றை குடிச்சிட்டு உருண்டு புரண்டு அமர்க்களம் செஞ்சது. ஆசைமணி சக்தி ஊசி போடப்
பணம் கேட்டாங்க. “இங்க யாருகிட்டயும் பணம் இல்லை, உங்களுக்கு புண்ணியமா போகுது. அந்த சக்தி ஊசியை போடுங்க” என்றான் தாண்டவராயன். “புண்ணியத்தை பார்த்தா பொழப்பு நடக்காது தம்பி. பணம் இருந்தா பேசுங்க, இல்லைன்னா போங்க” இது ஆசைமணி. “பேரைப் பார் ஆசைமணி! பேருக்கு ஏத்த மாதிரி தானே குணம் இருக்கும்” ஆதி முனுமுனுத்தது. ஆசைமணி கோபத்தில் எல்லாரையும் துரத்தி விட்டுட்டாங்க. எல்லாரும் நடந்து நடந்து ஊர் எல்லைக்கு
வந்துட்டாங்க.

ஊர் எல்லையில் எல்லாரும் காமினி என்ற ஒரு கட்டியங்காரனா பாத்தாங்க.
அவன்கிட்ட கட்டாக் மொட்டாக்குக்கு சக்தி கிடைக்க ஆலோசனையும் கேட்டாங்க. காமினிக்கு ஒரே களைப்பு. கொஞ்சம் தூங்கி ஓய்வெடுக்கணும்னு நினைச்சாரு. “சக்தி என்ன கூடையில் விக்கிறாங்க. அப்பா! பிள்ளைகளே! எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டு கொஞ்ச நேரம் படுத்து மனசக்தியை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு சக்தி தானா வரும்”. சொல்லிவிட்டுப் படுத்து தூங்கிட்டாரு. அவர் சொன்ன மாதிரியே எல்லாரும் படுத்து தூங்கிட்டாங்க. கொஞ்ச நேரத்துல ஒரு மாயகுதிரை வந்து கட்டாக்,முட்டாக்க ஏத்திட்டு பறந்து போயிடுச்சு.

சக்திங்கறது நம்மளோட தன்னம்பிக்கை. அது மாயகுதிரை மாதிரி உருவம் இல்லாதது. நம்மால் முடியுமென்று நம்பும்போது சக்தி தானே கிடைக்கும்.

இந்தக் கூத்த ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி பார்த்திருக்கிறேன். நினைவில் இருந்த வரைக்கும் உங்களுக்குச் சொல்லி இருக்கேன்” சரஸ்வதி பாட்டி மாயகுதிரைக் கதையை சொல்லி முடிச்சாங்க. தரன் சாமா ஜோதி மூன்று பேருக்கும்
இப்பதான் மாயகுதிரை என்கிற கட்டைக்கூத்து என்னனு புரிஞ்சது. புரிஞ்ச சந்தோஷத்தில் காலை உணவு சாப்பிட பறந்து போனாங்க.

நீங்க கிராமத்துப் பக்கம் போனீங்கன்னா இந்த கட்டைக்கூத்த கவனித்து பாருங்க. அவங்களோட முக அலங்காரம், போட்டிருக்கிற அணிகலன்கள், உடைகள் எல்லாம் பார்த்தா ஆச்சரியப்படுவீங்க.

சிறுகதைகள்:மாயகுதிரை-கட்டைக்கூத்து Tamil
Speaker: Nila

Share with Friends

You may find these interesting
Indian story Podcasts
Masala Fairy Tales- Zulfika-Part-2
kural6-10(1)
திருக்குறள்-கடவுள் வாழ்த்து பகுதி-2 Thirukkural
Indian story podcast
Children’s Day Story-The Samosa Seller
Indian story Podcasts
Zulfika, The Indian Rapunzel 1
Sponsored Content

Subscribe now to get notified about exclusive offers from The Issue every week!