கோலாட்டம் ஜோத்தரை

Posted on:

இன்றைய தலைமுறையினருக்கு இது போல் கோலாட்டத் திருவிழா ஒன்று இருக்கும் என்பதே தெரிய வாய்ப்பில்லை. எங்கள் ஊரில் தீபாவளிக்கு மறுநாளில் இருந்து பதினைந்து நாட்கள் கோலாகலமாக இது நடக்கும        

களிமண்ணால்  பஸுவன் என்ற உருவத்தை செய்து அதற்குத் தினமும் விளக்கேற்றி நைவேத்தியம் செய்வார்கள். எங்கள் தெருவின் நடுவில் இருந்த மங்கம்மா சத்திரத்தில் தான் இது நடக்கும். நாங்கள் சின்னப் பெண்கள் எல்லாம் சேர்ந்து மதியத்திற்கு மேல் கோலாட்டம் ஆடுவோம். ஒரு சிறிய பையும், ஒரு சின்ன தூக்கும் எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் செல்வோம் தூக்கில் கொஞ்சம் எண்ணெய் விடுவார்கள். பையில் கொஞ்சம் அரிசியோ அல்லது சில்லறையோ கொடுப்பார்கள். பஸுவனுக்கு நைவேத்தியம் செய்வதற்கும் விளக்கேற்றுவதற்கும் அவைகளை உபயோகிப்போம்.

 எந்த வீட்டிலாவது நாளைக்கு வா என்று  சொன்னால் 

“பஸுவா, பஸுவையா உனக்குப் பணம் கொடுப்பாரில்லை. இன்றைக்கு வா, நாளைக்கு வா என்று ஏய்க்கிறாரே பஸுவா”

 என்று உடனே பாடி கோலாட்டம் போடுவோம்.

இரவானதும் எங்களைப் போல சின்னப் பெண்களுடன் நடுத்தர வயதுப் பெண்களும் சேர்ந்து கோலாட்டம் ஆடுவார்கள். அந்த நிசப்தமான இரவில் கோலாட்டச் சத்தமும், இனிமையான பாடல்களும் மனதை மயங்கச் செய்யும். தசாவதாரம், கிருஷ்ண லீலைப் பாடல்கள் எல்லாம் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இயற்கையைப் போற்றி கோலாட்டம் ஆடுவார்கள். “மழை ரொம்ப பெய்ய வேண்டும் ஸ்வாமி குளங்கள் நிறைய வேண்டும், பூமியில் போட்டது பொன்னாய் விளையவேண்டும், பொதி ரொம்ப காண வேண்டும்” என்ற பாட்டுக் கட்டாயம் பாடி ஆடுவார்கள். நாங்கள் சின்னப் பெண்கள் எல்லோரும் “போகுது பார் புகை வண்டி போகுது பார்” என்று பாடி ஆடுவோம்.

 யாரவது ஒரு சிறுவனை அந்த பதினைந்து நாட்களும் பஸுவன் பிள்ளையாகப் பாவித்து அவனுக்கு உணவு படைப்பார்கள். பதினைந்தாவது நாள் அந்த சிறுவனுக்குப் புதுத் துணிகள் கொடுத்து உபசரிப்பார்கள். பிறகு அந்தச் சிறுவனையும், களிமண் பஸுவனையும் ஊர்வலமாகக் கூட்டிச் சென்று களிமண் பஸுவனை வைகை ஆற்று நீரில் கரைப்பார்கள். எல்லோரும் மறுபடியும் கோலாட்டம் போட்டுக்கொண்டே வீட்டுக்குத் திரும்புவோம். மனம் அடுத்த ஆண்டு கோலாட்டத்திற்கு ஏங்கத் தொடங்கிவிடும்.

 இது போல் மறைந்தும், மறந்தும் போன நிகழ்வுகள் ஏராளம். ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லவேண்டும்.

Share with Friends

You may find these interesting
kaarthigai
அந்த நாள் கார்த்திகை பண்டிகை
virtual-school
CORONAவும் குழந்தைகளும்
Woman-writing
நினைவலைகள்
Sponsored Content

Subscribe now to get notified about exclusive offers from The Issue every week!