அந்த நாள் கார்த்திகை பண்டிகை

இந்த கார்த்திகை மாதத்தில் கொண்டாடும் அழகான பண்டிகை கார்த்திகைத் திருநாள். சுமார் 60 அல்லது 65 வருடங்களுக்கு முன் நான் சின்னப் பெண்ணாக இருந்த போது கொண்டாடியதை எழுதுகிறேன்.

 நான் பிறந்து வளர்ந்தது மதுரைக்குப் பக்கத்தில் உள்ள சோழவந்தான் எனும் ஊர். எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். அதற்கேற்றாற்போல் வீடும் பெரிய வீடு. எங்கள் தெருவில் வீடுகள் எதிரும் புதிருமாக இருக்கும். எல்லா வீடுகளிலும் வாசலில் திண்ணை உயரமாக இருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகள் எல்லாம் சேர்ந்து அந்த திண்ணைகளில் குதித்து விளையாடுவோம்.

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியன்று வீட்டில் விளக்கு ஏற்றி விமரிசையாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டில் வழக்கம். கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அம்மா குறைந்தது இருநூறு விளக்குகளிருந்து ஐந்நூறு விளக்குகள் வரை வாங்குவார்கள். நாங்கள் குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து எல்லா விளக்குகளையும் ஒரு துணியால் துடைத்து எடுத்து வைப்போம். தீபத்தன்று காலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் ஊற வைப்போம். காலையில் பூஜை சிறப்பாக நடக்கும். அன்று பெரியவர்கள் விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றுவார்கள். அன்று மதிய சாப்பாடு வடை பாயசத்துடன் இருக்கும்.

மதியம் மூன்று மணியளவில் குழந்தைகள் எல்லோரும் அந்த விளக்குகளைத் துடைத்து எடுத்து வைப்போம். ஒரு பெண் அந்த அகல் விளக்குகளுக்கு மஞ்சள் வைக்கும்போது இன்னொரு பெண் பின்னாடியே குங்குமம் வைத்துக்கொண்டு வருவாள். பிறகு எண்ணெய்யில்  நனைந்த திரிகளைப் போடுவோம். இதையெல்லாம் செய்து முடிக்க இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும். பெரிய பெரிய தாம்பாளத்தில் விளக்குகளை எல்லாம் எடுத்து வைப்போம். கூடத்தின் நடுவில் மனைக்கோலம் போட்டு அதிலும் விளக்குகள் வைப்போம்.

      அம்மா அப்பம், பொரி உருண்டை எல்லாம் பூஜைக்குத் தயார் செய்து விடுவார். எல்லோரும் புது துணிகள் போட்டுக் கொண்டு சரியாக ஆறு மணிக்கு விளக்கு ஏற்றுவோம். முதலில் அம்மா குத்து விளக்கு ஏற்றுவார். அதற்குப் பின் நாங்கள் ஒவ்வொரு விளக்காக ஏற்றுவோம். வாசலில் போட்டிருக்கும் பெரிய கோலம் முழுதும் விளக்குகளை வைப்போம். நடுவில் குத்து விளக்கு எரியும். எங்கள் தெருவில் இருக்கும் எல்லோர் வீட்டு வாசலிலும் பெரிய கோலங்கள் போட்டு விளக்குகளை வைப்பார்கள். எல்லோர் வீட்டுத்திண்ணையிலும் தீப வரிசை. தெரு முழுவதும் பார்ப்பதற்கு ஜெகஜோதியாக அழகாக இருக்கும். விளக்குகள் அணையாமல் இருக்க நாங்கள் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்போம். கூச்சலும் கும்மாளமாகவும் ஒரே குஷிதான்.

அகத்திக் கீரைச் செடியின் கட்டைகள் விறகு கடைகளில் கிடைக்கும். அதை நெருப்பில் வைத்து ஊதுபத்தி பற்ற வைப்பது போல் பற்ற வைப்போம். குங்கிலியம் என்ற பொடியை நெருப்பு இருக்கும் பக்கத்தில் தூவி கம்பி மத்தாப்பு மாதிரி சுற்றுவோம். நாங்கள் குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து யார் வீட்டில் விளக்குகள் அணையாமல் எரிகிறது என்று பார்த்துக் கொண்டே போவோம். எங்கள் தெருவின் கடைசியில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் மறுநாள் விளக்கு ஏற்றுவார்கள். கோவிலுக்கு எதிரில் நடுத் தெருவில் சொக்கப் பானை கொளுத்துவார்கள். அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது. அதனால் சொக்கப்பானை கொளுத்தும் போது எந்த பயமும் கிடையாது. சொக்கப்பானை பெரிதாக எரியும் போது நாங்கள் குழந்தைகள் எல்லாரும் பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டே குதிப்போம்.

இன்றைய வண்ண விளக்குகள், அன்றைய அகல் விளக்குகளுக்கு ஈடாகாது. இந்த நகர வாழ்க்கையிலும் அந்த கிராமத்துச் சந்தோஷங்கள் வராது.

கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு.

Share with Friends

You may find these interesting
FESTIVALS OF INDIA
Festivals of India - O
Pongal
ABC Order: Festivals of India 4
Mahaveer-Jayanthi
ABC Order: Festivals of India 3
Girl-praying-to-Ganesha
ABC Order: Festivals of India 2
Sponsored Content

Subscribe now to get notified about exclusive offers from The Issue every week!